Published : 09 Aug 2017 11:20 AM
Last Updated : 09 Aug 2017 11:20 AM
இந்தியாவிலேயே முதன்முறையாக பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை தொடங்கப்படவிருக்கிறது. மத்திய விமானத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இந்தத் தகவலை ஆகஸ்ட் 4-ம் தேதி தெரிவித்தார். ‘தம்பி ஏவியேஷன்’(‘Thumby Aviation’) என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம் இந்த ‘ஹெலி-டாக்ஸி’ சேவையை வழங்கவிருக்கிறது.
“பெங்களூருவைப் போன்று இந்தச் சேவையை மற்ற இந்திய நகரங்களும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம். பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ நகரம் பெங்களூரு நகரத்தின் பரப்பளவையே கொண்டிருக்கிறது. அந்த நகரத்தில் 300 ஹெலிகாப்டர்கள் ஹெலி-டாக்ஸி சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஏ.சி. கார் சேவையை எந்தக் கட்டணத்தில் வழங்குகிறார்களோ, அதற்கு நிகரான கட்டணத்திலேயே இந்த ஹெலி-டாக்ஸி சேவையையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகத்துக்கு வைக்கிறேன்” என்றார் ஜெயந்த் சின்ஹா.
பெங்களூருவில் இந்தச் சேவை இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ‘ஹெலி-டாக்ஸி’யில் இரண்டு மணிநேர சாலைப் பயணத்தைப் பதினைந்து நிமிடத்தில் கடந்துவிடலாம். தற்போது பெங்களூருவில் 90 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் இருக்கின்றன.
ஓய்வுபெறுகிறார் உசைன் போல்ட்
உலகின் புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட் லண்டனில் நடைபெற்றுவரும் உலக சேம்பியன்ஷிப் போட்டியில் 4X100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்கிறார்.
உலகின் அதிவேகமான ஓட்டப்பந்தய வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ள ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த போல்ட், இந்தப் போட்டியுடன் ஓய்வுபெறப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த ஓய்வு தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
ஆசிய தடகள வீரர்கள் தற்போது சிறப்பாகச் செயல்பட்டுவருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவர்கள் சாதனைகள் நிகழ்த்துவதைப் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். தோற்கடிக்க முடியாத மனிதனாக தாம் விளங்கியதை, இந்த உலகம் தனது ஓய்வுக்குப் பின்னும் நினைவுகூர வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுவரை 19 சர்வேதச, ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை அவர் வென்றிருக்கிறார்.
உலகின் நீளமான நடை மேம்பாலம்
உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் சுவிட்சர்லாந்தில் ஜூலை 29-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. ‘சார்லஸ் குவ்னென் தொங்கு பாலம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பாலம், சுவிட்சர்லாந்தின் கிராச்சென்-செர்மட் நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் 1621 அடி நீளத்திலும் 279 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 7218 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளத்தாக்கின் வழியாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம், கிராச்சென்-செர்மட் நகரங்களைக் கடப்பதற்கான நேரத்தை நான்கு மணி நேரத்திலிருந்து பத்து நிமிடமாகக் குறைத்திருக்கிறது. இந்தப் பாலம் பத்து வாரங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மின்சாரம் இல்லாத பள்ளிகள்
இந்தியாவில் 37 சதவீதப் பள்ளிகளில் மார்ச், 2017வரை மின்சார வசதியில்லை என்ற தகவலை மத்திய அரசு ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவையில் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் 62.81 சதவீத பள்ளிகள் மின்சார வசதியுடன் இயங்குகின்றன. டெல்லி, சண்டிகர், தாத்ரா – நகர் ஹவேலி, டாமன்-டையூ, லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய இடங்களிலுள்ள பள்ளிகள்தான் 100 சதவீத மின்சார வசதியுடன் இயங்குகின்றன.
இந்தப் பட்டியலில், 19 சதவீத பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதியைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலம் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது. மோசமான மின்சார வசதிகொண்ட பள்ளிகளைக் கொண்ட மாநிலங்களில் அசாம் (25%), மேகாலயா (28.54%), பிகார் (37.78%), மத்தியப் பிரதேசம் (28.80%), மணிப்பூர் (39.27%), ஒடிசா (33.03%), திரிபுரா (29.77%) போன்றவை இடம்பிடித்துள்ளன. இந்தத் தகவலை மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா மாநிலங்களவையில் வெளியிட்டார்.
இறப்பைப் பதிவுசெய்யவும் ஆதார்
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இறப்பைப் பதிவுசெய்ய ஆதார் எண் கட்டாயம் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) அலுவலகம் ஆகஸ்ட் 4-ம் தேதி தெரிவித்திருக்கிறது. “இறப்பைப் பதிவுசெய்ய ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதால் போலி ஆதார் அடையாள அட்டைகளின் பயன்பாட்டைத் தடுக்க முடியும்.
இறந்தவர்களின் அடையாளத்தைப் பதிவுசெய்ய இது உதவும். இறந்தவர்களின் அடையாளத்தை நிரூபிப்பதற்காகப் பல ஆவணங்களைத் தாக்கல்செய்ய வேண்டிய அவசியம் இருக்காது” என்று தெரிவிக்கிறது ஆர்.ஜி.ஐ.
செப்டம்பர் 1-ம் தேதிக்குள் இந்த நடைமுறையைச் செயல்படுத்துவதை உறுதிசெய்யும்படி மாநில, யூனியன் பிரதேசப் பதிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது ஆர்.ஜி.ஐ. மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களான சமையல் எரிவாயு மானியம், முதியோர் உதவித் தொகை, ரேஷன் பொருட்கள் பெற, மாணவர்கள் மதிய உணவு பெற என அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், அலைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் போன்ற அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இறப்பைப் பதிவுசெய்யவும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
உயரும் பார்வையற்றோர் எண்ணிக்கை
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலயா ரஸ்கின் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட ஓர் ஆய்வு முடிவில், உலகின் பார்வையற்றோர் எண்ணிக்கை 2050-ம் ஆண்டுக்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறது. தற்போது உலகில் 3.60 கோடியாக இருக்கும் பார்வையற்றோர் எண்ணிக்கை, 2050-ல் 11.5 கோடியாக உயரும் என்று தெரிவித்திருக்கின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.
1980 முதல் 2015வரை உலகின் 188 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பார்வைக் கோளாறுகளால் பாதிக்கப்படும் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகள், ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் பார்வையற்றோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT