Published : 29 Aug 2017 10:50 AM
Last Updated : 29 Aug 2017 10:50 AM
உ
ற்பத்தித் துறையில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று ஜப்பானியர்கள் காட்டிவிட்டார்கள். புதிதாகச் செய்ய எதுவும் இல்லை என்ற அளவுக்கு அனைத்து விஷயங்களிலும் உச்சம் தொட்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் செய்ததைப் பார்ப்போம். பிறகு அதிலிருந்து நாம் செய்யாததை உணர்வோம்.
திரும்பத் திரும்ப கைசனா?
அமெரிக்கா கார்களுக்குப் போட்டியாய் அதே தரத்துடன் குறைந்த விலையில் டொயோட்டா வெளிவந்த போதுதான் உலகம் ஜப்பானைக் கூர்மையாகக் கவனிக்கத் தொடங்கியது. ஏதோ ஒரு புதிய தொழில்நுட்பத்தை ரகசியமாகக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகித்த அமெரிக்கா, தங்கள் ஆட்களை அனுப்பி வேவு பார்த்தது. வந்தவர்களுக்கோ மொழிப் பிரச்சினை. மருந்துக்கும் ஆங்கிலம் கிடையாது. கண் பார்வைக்குத் தொழிற்சாலையின் ஒவ்வொரு அம்சமும் உலகத்தில் உள்ள அனைத்து கார் கம்பெனிகளிடம் உள்ளது போலதான் தெரிகிறது. ஆனால், ஏதோ ஒன்றை வித்தியாசமாய்ச் செய்கிறார்கள் என்று மட்டும் உணர முடிகிறது.
தீவிர ஆராய்ச்சியில் தெரியவந்தது ஜப்பானியர்கள் ‘கைசன்’ என்று ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். ‘கெம்பா கைசன்’ என்ற வார்த்தை பெரும் புழக்கத்தில் உள்ளது தெரிகிறது. கைசன் என்றால் ‘படிப்படியான தொடர் முன்னேற்றம்’. கெம்பா என்றால் பணியிடம். கெம்பா கைசன் என்றால் ‘பணியிடத் தொடர் முன்னேற்றம்’. சரி, இது என்ன பிரமாதம்?
உயிர்த்தெழ வைத்தது எது?
யோசித்தால் இது கலாச்சாரமும் தத்துவமும் சார்ந்தது. எதுவும் முடிவு இல்லை. எதையும் தொடர்ந்து முன்னேற்றிக் கொண்டே இருக்கலாம். இதுதான் சிறந்தது; இதற்கு மேல் முடியாது என்று எதுவுமே கிடையாது. சிறந்த தரம் என்றால் இதைவிடச் சிறந்த தரத்தில் செய்யலாம். விலை குறைவு என்றால், இதைவிடவும் குறைக்கலாம். அதிகபட்சப் பாதுகாப்பு என்றால் இதைவிட அதிகபட்சப் பாதுகாப்பு என அனைத்தையும் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டே இருப்பது ஜப்பானியக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சம். அது தொழிற்சாலையிலும் பிரதிபலிக்கிறது. இந்தப் பண்புதான் அந்த தேசத்தை உயிர்த்தெழவைத்தது.
உற்பத்தித் துறையில் எல்லா அம்சங்களும் நம் கட்டுக்குள் உள்ளது. மூலப்பொருளைக் குறைந்த விலைக்கு, சரியான நேரத்தில் வாங்கி, மதிப்பு கூட்டி, சிறந்த தரத்துடன் நல்ல விலைக்கு விற்க வேண்டும். இந்தச் சுழற்சியில் ஒவ்வொரு இடத்திலும் முன்னேற்றம் காண வேண்டும். மஸாகி இமாய் என்ற ஜப்பானியத் தொழிற்துறை மேதை ‘கெம்பா கைசன்’ என்ற புத்தகத்தில் 5 முக்கிய விஷயங்களைக் குறிப்பிட்டு எழுதியிருப்பார். (அந்தப் புத்தகத்தின் தாக்கத்தில்தான் என் நிறுவனத்துக்கு ‘கெம்பா’ என்று பெயரிட்டேன்!) அவை 1. தரம் 2. விலை 3. விநியோகிக்கும் நேரம் 4. பணியாளர் ஈடுபாடு 5. பாதுகாப்பு. இந்த ஐந்தைத் தொடர்ந்து சிறப்பாக்கிக்கொண்டே வருவதுதான் கெம்பா கைசன்.
நிர்வாகத்தின் பொறுப்பு
சிறந்த தரம் வேண்டும். எப்போதும் வேண்டும். சந்தையில் போட்டியாளர்கள் தரத்தையும்விட அதிகம் வேண்டும். அதற்கு மூலப் பொருட்களின் தரம் முதல் உற்பத்தித் திறன், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புவரை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
விலை குறைவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் வழிமுறைக்கும் உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு வளத்தையும் குறைந்த விலைக்குக் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
தேவைப்படும் நேரத்தில் (முன்னரோ பின்னரோ அல்ல) மூலப்பொருள் முதல் இறுதியாக உற்பத்தி செய்து வெளியிடும் இறுதி உற்பத்திப் பொருள்வரை சரியான நேரத்தில் நகர வேண்டும். ஸ்தம்பிக்கும் பொருள் பண விரயம். எவ்வளவு சீக்கிரம் உள்ளே வரும் மூலப்பொருள், இறுதி வடிவம் பெற்று, வாடிக்கையாளரிடம் விற்கப்படுகிறதோ அவ்வளவு விரைவில் உங்கள் முதலீடு உங்களுக்குத் திரும்ப வரும். இந்தச் சுழற்சி குறைந்த நேரத்தில் நடந்தால் அதிக லாபம்.
பணியாளர்களின் மொத்த ஈடுபாட்டைத்தான் முதல் முதலீடாகக் கருதுகிறார்கள் ஜப்பானியர்கள். ஒவ்வொரு சிறு சிறு பணியையும் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பு உணர்வுடன், ‘தொடர் முன்னேற்ற கைசன்’ நடவடிக்கைகளைச் செய்யப் பணியாளர்களின் ஈடுபாட்டைத் தொடர்ந்து வளர்க்க வேண்டியது நிர்வாகப் பொறுப்பு.
விபத்துகள் பூஜ்யமாகவும், பணியிடம் மிகுந்த பாதுகாப்பாகவும் இருந்தால், மேற்கண்ட நான்கு விஷயங்களும் பாதிக்கப்படாது என்று நம்புகிறார்கள் அவர்கள். அதனால் இதை அரசாங்கம் வலியுறுத்தும் விஷயமாகச் செய்யாமல் அதன் வியாபார சூட்சுமத்தை உணர்ந்து ஆத்மார்த்தமாகச் செய்கிறார்கள்.
மனித வள நிர்வாகத்தையும் படிக்க வேண்டும்
இந்த ஐந்தும்தான் ஜப்பானியப் பொருட்களை உலகத் தரத்துக்குக் கொண்டுசெல்ல உதவின. QCDMS என்று கெம்பா கைசனைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் இன்று தாரக மந்திரமாகச் சொல்வது இந்த 5 விஷயங்களைத் தான் : Quality, Cost, Delivery Time, Morale & Safety
டி.வி.எஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஜப்பானிய வழிமுறைகளைக் கற்று இன்று உலகத் தரம் பெற இவைதான் காரணம். ஆனால், பெரும்பான்மையான உற்பத்தி நிறுவனங்கள் இந்தச் சூட்சுமங்களை அறிந்திருந்தாலும், முதல் மூன்று விஷயங்களில் செலுத்தும் கவனத்தைக் கடைசி இரண்டில் செலுத்துவதில்லை. இந்தியாவில் மலிந்து கிடக்கும் மனிதர்களின் எண்ணிக்கை பற்றிய மனோபாவத்தால் உருவானவைதான் இவை.
“ஒரு காலத்தில் கேட்டை பிடிச்சிட்டு மணிக்கணக்கா நிப்பாங்க வேலை கேட்டு. சோறு போட்டு கொஞ்சம் பணம் கொடுத்தா காலத்துக்கும் வேலை செய்வாங்க. இன்னிக்கு எல்லா வசதி செஞ்சு கொடுத்தாலும் ஃபேக்டரில வேலை செய்யறதவிட குளு குளுன்னு கடையில நின்னு வேலை செய்யத்தான் பிரியப்படறாங்க” என்று சொன்னார் கோவையைச் சேர்ந்த ஒரு ஆலை முதலாளி நண்பர்.
பணியாளர் பற்றிய நம் மனோபாவங்கள்தான் அவர்களைக் கைசன் செய்யுமளவுக்கு உயர்த்தவில்லை. கைசன் இந்தியாவில் ஏன் ஜப்பான் அளவுக்கு வெற்றி பெறவில்லை? கலாச்சாரம் சார்ந்த நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும், நிலையான வேலையும் கண்ணியமான மனித உறவுகளும்தான் ஈடுபாட்டை வளர்க்கும். அதன் பின்தான் ஒவ்வொரு வழிமுறையிலும் தொடர் முன்னேற்றம் பற்றி யோசிக்க முடியும். ஜப்பானியத் தொழில்நுட்பம் படிக்கும் நம் முதலாளிகள் ஜப்பானின், மனித வள நிர்வாகத்தையும் படிக்க வேண்டும்.
நான் பல முறை பேசும்போது குறிப்பிடும் விஷயம் இதுதான். தன் பிள்ளை இந்தத் தொழிலுக்கு வர வேண்டாம் என்று நினைத்தால் அந்தத் தொழில் விளங்காது. தன் பிள்ளையும் தன்னைப் போல இதே நிறுவனத்தில் ஒரு நல்ல தொழிலாளியாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அளவுக்கு நிர்வாகம் செய்யாவிட்டால், “நல்ல ஆளுங்க கிடைக்க மாட்டேங்கறாங்க சார்!” என்று புலம்புவதுதான் நடக்கும்.
நல்ல தொழிலாளிகள் கிடைப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT