Last Updated : 01 Aug, 2017 10:17 AM

 

Published : 01 Aug 2017 10:17 AM
Last Updated : 01 Aug 2017 10:17 AM

படிக்கும்போதே தொழிலதிபர்!

ளாகத் தேர்வில் சிறப்பாகப் பங்கேற்றுப் பெரிய நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்க வேண்டும் என்பதே தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் பல மாணவர்களின் கனவு. ஆனால், ஐ.ஐ.டி. மெட்ராஸில் நான்காம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் படிக்கும் டேனியல் ராஜ் டேவிட், தன் கல்லூரிப் பேராசிரியர்களுடன் சேர்ந்து தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். தன்னுடைய ‘டிடெக்ட் டெக்னாலஜிஸ்’ (Detect Technologies) நிறுவனத்தில் தன்னுடன் படிக்கும் மாணவர்களையும் இணைத்திருக்கிறார்.

சர்வதேச விருது

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் எண்ணெய்க் குழாய்களில் ஏற்படும் கசிவைக் கண்டுபிடிக்கும் சென்சார் கருவியை வடிவமைத்ததற்காக டேனியலுக்கு சர்வதேச மாணவர் தொழில்முனைவோர் விருது ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. இந்த சென்சார் கருவியை மேம்படுத்தி ஆய்வு செய்வதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் 65 லட்சம் ரூபாயை நிதியுதவியாக அளித்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து பெரிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளராகக் கூடும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் டேனியல்.

ஆனால், கல்லூரி மாணவனை நம்பித் தங்கள் பெரிய நிறுவனத்தின் இயந்திரக் கட்டுப்பாட்டை எப்படி ஒப்படைப்பது எனப் பலர் தயங்குவதாகவும் டேனியல் சொல்கிறார். “நான் தாடி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன். அதுவாவது என்னைக் கொஞ்சம் வயதானவனாகக் காட்டுமே” எனப் புன்னகைக்கிறார்.

தனித்துவ வெற்றி

எண்ணெய்க் குழாய்களில் கசிவைக் கண்டறியும் உணர் கருவிகள் பல தற்போது நடைமுறையிலும் இருந்தாலும் டேனியலின் கண்டுபிடிப்பு தனித்துவமானது. இந்த உணர் கருவி, மிக அதிக வெப்பநிலையிலும் (அதிகபட்சமாக 350 டிகிரி செல்சியஸ்வரை) செயல்படும். பொதுவாக எண்ணெய்க் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் குறிப்பிட்ட அந்தக் குழாயின் செயல்பாட்டை மட்டும் நிறுத்திவைக்க முடியாது. மொத்த யூனிட்டையுமே நிறுத்திவைக்க வேண்டும். இதனால் நிறுவனங்களில் மிகப் பெரிய இழப்பு ஏற்படும். ஆனால், டேனியல் வடிவமைத்திருக்கும் கருவி அந்தச் சிக்கலுக்கும் தீர்வு சொல்கிறது.

“எண்ணெய்க் குழாய்களில் ஒரே நாளில் சட்டெனக் கசிவு ஏற்படாது. முதலில் உலோகத்தில் உட்புறச் சுவர் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்படும். அப்படி அரித்தெடுக்கப்படுகிற நிலையிலேயே எங்கள் கருவி அதைக் கண்டுபிடித்துவிடும். உடனே எங்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் தகவல் அனுப்பிவிடும். இப்படி ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுவதால், கசிவு ஏற்படுவதற்கு முன்னரே அந்தப் பகுதியைச் சீரமைத்துவிடலாம். கசிவைத் தடுப்பதோடு, எண்ணெய்க் குழாய்களின் செயல்பாட்டை மொத்தமாக நிறுத்திவைப்பதையும் தவிர்க்கலாம்” என்கிறார் டேனியல்.

பெரிய நிறுவனங்களில் பாய்லர்கள், உற்பத்திப் பொருட்களைக் கண்காணிக்கும் வகையில் ஒரு கருவியையும் (Industrial drone) டிடெக்ட் டெக்னாலஜீஸ் சார்பில் வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்தக் கருவி மூலம் குறிப்பிடத்தகுந்த வருமானம் கிடைப்பதாகச் சொல்லும் டேனியல், இந்தியச் சந்தையைத் தாண்டி வெளிநாடுகளிலும் தங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவிருப்பதாகச் சொல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x