Last Updated : 01 Aug, 2017 10:24 AM

 

Published : 01 Aug 2017 10:24 AM
Last Updated : 01 Aug 2017 10:24 AM

சேதி தெரியுமா? - 2,200 ஆண்டுகள் பழமையான நாகரிகம்

2,200 ஆண்டுகள் பழமையான நாகரிகம்

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் 2,200 ஆண்டுகள் பழைமையானவை என்று ஜூலை 27 அன்று மாநிலங்களவையில் மத்தியக் கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி பற்றி மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மகேஷ் ஷர்மா இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பொருட்களை கார்பன் காலக்கணிப்பு முறையில் அமெரிக்காவின் ‘பீட்டா அனலிட்டிக்’ (Beta Analytic) நிறுவனம் ஆய்வுசெய்தது. “கீழடியில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரிகள் கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதியாகியிருக்கிறது. அத்துடன், கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 72 மண்பாண்ட ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இருக்கின்றன. இதில் இயனன், உதிரன், வேந்தன், சாத்தன் போன்ற தமிழ்ப் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன” என்றார் கீழடி அகழ்வாராய்ச்சிக்குத் தலைமைவகித்த தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

புலிகளுக்குத் தொடரும் அச்சுறுத்தல்

புலிகளின் பாதுகாப்பை வலியுறுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை 29, சர்வதேசப் புலி நாளாகக் கொண்டாடப்படுகிறது. 2010-லிருந்து கொண்டாடப்பட்டுவரும் இந்த நாள், உலகில் புலிகளின் எண்ணிக்கையை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. வங்கதேசம், நேபாளம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆண்டு புலி நாளைக் கொண்டாடும்விதமாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

உலகக் காட்டுயிர் நிதியத்தின் (WWF) புள்ளிவிவரப்படி, உலகில் வெறும் 3,890 புலிகள் மட்டுமே உயிர்வாழ்கின்றன. இதில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான புலிகள் இருக்கின்றன. கடந்த ஜூலை 2016வரை, 2,500 புலிகள் நாட்டில் இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், 2016-ல்தான், எப்போதும் இல்லாத அளவுக்கு அத்துமீறல் காரணமாக அதிகமான புலிகள் இந்தியாவில் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது உலகக் காட்டுயிர் நிதியம்.

காடுகளில் மின்கம்பிகளைப் பதித்து மின்சாரம் பாய்ச்சி புலிகளைக் கொல்வது, விஷம் வைத்துக் கொல்வது போன்றவை அதிகரித்திருக்கின்றன. சட்டவிரோதக் காட்டுயிர் வர்த்தகத்துக்காக இப்படிப் புலிகள் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது உலகக் காட்டுயிர் நிதியம். காடுகளில் புலிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அம்சங்களை அதிகரிக்கச்சொல்லி மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருக்கிறது உலகக் காட்டுயிர் நிதியம்.

ஆண்டில் 4 லட்சம் சாலை விபத்துகள்

ந்தியாவில் ஓர் ஆண்டில் 4 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், இந்த விபத்துகளில் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் ஜூலை 27 அன்று மக்களவைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம். கடந்த மூன்று ஆண்டுகளில், சாலை விபத்துகளின் எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி 22 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி. அத்துடன், நாட்டில் 30 சதவீதம் போலி ஓட்டுநர் உரிமங்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மத்தியப் போக்குவரத்து அமைச்சகம் முதன்முறையாக நாட்டில் இருக்கும் பாலங்களின் நிலையைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறது.

இந்த ஆய்வுக்கு நாட்டில் இருக்கும் மதகுகள் உட்பட 1.62 லட்சம் பாலங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வில், 147 பாலங்கள் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 33 பாலங்கள் சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றன. 50 பாலங்கள் நூறு ஆண்டுகள் பழமையானவை என்றும், 1,628 பாலங்கள் 50 ஆண்டுகள் பழமையானவை என்றும் தெரிவித்திருக்கிறது போக்குவரத்து அமைச்சகம். இந்தப் பாலங்களைச் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் நிதின் கட்கரி.

கூட்டணி மாறிய நிதிஷ்

பிகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் -ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கூட்டணி அரசு ஆட்சிசெய்துவந்தது. இந்நிலையில், மாட்டுத் தீவன வழக்கில் லாலு பிரசாத் யாதவுடைய மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வியின் மீது குற்றம்சாட்டப்பட்டது, அதனால், அவரைப் பதவி விலகுமாறு நிதிஷ்குமார் கோரினார். தேஜஸ்வி பதவி விலக மறுத்ததால், ஜூலை 26 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார். இதைத் தொடர்ந்து, நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக பா.ஜ.க. அறிவித்ததால் மீண்டும் முதல்வராகியிருக்கிறார் நிதிஷ். பா.ஜ.க.வின் சுஷில்குமார் மோடி துணை முதல்வராகி உள்ளார். ஜூலை 28 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 243 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக 131 பேரும், எதிராக 108 பேரும் வாக்களித்திருக்கின்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க 122 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது என்பதால் பிகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார் நிதிஷ்.

மறைந்தார் தரம் சிங்

ர்நாடக மாநில முன்னாள் முதல்வர் என். தரம் சிங், ஜூலை 27 அன்று, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80. தரம் சிங், கர்நாடகாவின் 17-வது முதல்வராகப் பதவிவகித்தவர்.

மே 2004 முதல் பிப்ரவரி 2006 வரை, காங்கிரஸ்-ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கூட்டணி ஆட்சிக்கு இவர் தலைமை தாங்கினார். கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தின் நெலோகி கிராமத்தில் 1936 டிசம்பர் 25 அன்று பிறந்த இவர், கர்நாடகச் சட்டமன்ற அவையில் ஏழு முறை தொடர்ந்து உறுப்பினராக இருந்திருக்கிறார். 2009-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பீதர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1978 முதல் 2008 வரையிலான அவரது அரசியல் வாழ்க்கையில், தேவராஜ், குண்டு ராவ், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்ட முதல்வர்களின் அமைச்சரவையில் பணியாற்றினார். உள்துறை, சமூக நலன், நகர்ப்புற மேம்பாடு, பொதுப்பணி, வருவாய் போன்ற துறைகளை நிர்வகித்தார். கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் குழுவின் தலைவராகவும் இவர் பொறுப்புவகித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ராஜினாமா

னாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பிரதமர் நவாஸ் ஷெரீப்பைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, ஜூலை 28 அன்று, அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

பனாமா நாட்டின் ‘மோசாக் ஃபொன்சிகா’ என்ற சட்ட நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு நாட்டுகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரபலங்களும் சட்டவிரோதமாகப் பல நாடுகளில் முதலீடு செய்திருக்கின்றனர். இது தொடர்பான 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள், கடந்த ஆண்டு ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியாகிச் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவருடைய குடும்பத்தினரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெற்றுவந்த வழக்கில், நவாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து தீர்ப்பளித்திருக்கிறது அந்நாட்டு உச்ச நீதிமன்றம். அத்துடன், நவாஸ், அவருடைய மகள் மரியம், மருமகன் சஃப்தர், நிதி அமைச்சர் இஷக் தர் உள்ளிட்டோர் மீதும் ஊழல் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x