Last Updated : 22 Aug, 2017 10:48 AM

 

Published : 22 Aug 2017 10:48 AM
Last Updated : 22 Aug 2017 10:48 AM

இந்த தியாகிகளை மறத்தல் தகுமோ?

சு

தந்திர தினத்தை முன்னிட்டுக் கல்லூரிகளுக்கு இடையில் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பெரும்பாலும் அத்தகைய நிகழ்ச்சிகளில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படும்.

இவ்வாறு விடுதலை வீரர்களை வணங்கும் அதேவேளையில் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க தேசத்தின் எல்லையில் நின்று போராடும் ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் நடத்தப்பட்டது ‘மறத்தல் தகுமோ’ நிகழ்ச்சி. இளைஞர் நல அமைப்பான யுவ சக்தியுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை வழக்கறிஞர் சுமதி நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாணவர்களின் வாசிப்புக்கு ஆதாரப் புத்தகங்களாக இந்திய ராணுவப் படையின் முன்னாள் மேஜர் ஜெனரல் எழுதிய, ‘பரம் வீர்: அவர் ஹீரோஸ் இன் பேட்டில்’ என்ற ஆங்கிலப் புத்தகமும் முன்னாள் எஸ்.எஸ்.பி.யும் அந்தமான் டி.ஐ.ஜி.யும் எழுத்தாளருமான மறைந்த டாக்டர் பா.

ஸ்ரீகாந்த் முன்னாள் ராணுவ வீரர்களின் துயரச் சரித்திரத்தைப் பதிவுசெய்த ‘மறத்தல் தகுமோ’ புத்தகமும் பரிந்துரைக்கப்பட்டன. இறுதிப் போட்டிக்குத் தேர்வான மாணவர்கள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சி வழங்கினார் சுமதி.

சாமர்த்தியமும் சத்தியமும்

முதல் இரண்டு கட்டப் போட்டிகள் கடந்த மாதமே நடந்து முடிந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் இறுதிச் சுற்று நடைபெற்றது. தங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த ராணுவ வீரர்களில் ஒருவரைப் பற்றி மாணவ – மாணவியர் ‘மறத்தல் தகுமோ- 2017’ பேச்சுப் போட்டியில் உரையாற்றினர்.

20CH_MTJocelyn Maria Princyஜோஸ்லின் மரியா பிரின்ஸிright

படித்ததை மேடை ஏறிப் பேசுவதுபோல் அல்லாமல் ஒவ்வொரு பேச்சாளரும் தங்களுடைய தந்தை அல்லது சகோதரரைப் பற்றிப் பேசுவதுபோல உணர்வுபூர்வமாகப் பேசினார்கள். முன்னூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடியிருந்தாலும் ராணுவ ஒழுக்கம் இயல்பாகவே அரங்கில் நிறைந்திருந்தது.

சிறப்புரை ஆற்றிய சொற்பொழிவாளர் சுகி சிவம், “மேடைப் பேச்சு கைவரப்பெற சாமர்த்தியமும் சத்தியமும் கலந்த கலவை வேண்டும். ஆனால், இதுபோன்ற மேடைகளில் உங்களுக்கு அதிகம் தேவை சத்தியமே” என்றார். மாணவர்களின் உரைவீச்சைக் கேட்டு நெகிழ்ந்த சென்னை ஆபீசர்ஸ் டிரெயினிங் அகாடமியின் தளபதியும் லெப்டினென்ட் ஜெனரலுமான ராஜன் ரவீந்திரன், “எல்லோரும் ராணுவ வீரர்களைக் கண்டு அஞ்சுவார்கள். ஆனால், ஒரு ராணுவ வீரரை மிரளவைப்பது அன்பு மட்டுமே” என்றார்.

மேடையில் எழுச்சி உரையாற்றிய 10 பேரில் கன்னிகா பரமேஸ்வரி கல்லூரியின் பி.ஏ. சமூகவியல் இரண்டாமாண்டு மாணவி சுபிக்ஷா, அண்ணா பல்கலைக்கழகக் கிண்டி பொறியியல் கல்லூரியின் பி.இ. கணினி அறிவியல் மூன்றாமாண்டு மாணவி டி. அகிலா, அண்ணா பல்கலைக்கழகக் கிண்டி பொறியியல் கல்லூரியின் பி.இ. மெக்கானிக்கல் பொறியியல் மூன்றாமாண்டு மாணவி ஜோஸ்லின் மரியா பிரின்ஸி ஆகியோர் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்டனர். மூவருக்கும் தலா ரூ.10 ஆயிரமும் ராணுவ வீரர் சிலையும் பரிசாக அளிக்கப்பட்டது.

நம் காலத்து தியாகிகள்

“சின்ன வலியைக்கூட நம்மால் தாங்க முடியாது. ஆனால், தன்னுடைய இடது கண்ணில் தோட்டா பாய்ந்த பின்பும் விடாமல் தேசத்துக்காகச் சண்டையிட்டுக் கார்கில் போரில் உயிர் நீத்த கேப்டன் விஜயந்த் தாப்பர்தான் என்னுடைய நாயகன். காதலி, தாய் எனப் பாசத்துக்குரிய எல்லோரையும் விட்டுவிலகி தேசத்துக்காக 22 வயதில் உயிர் தியாகம் செய்த அவரைப் பற்றிப் பெருமிதத்துடன் பேசினேன்” என்கிறார் சுபிக்ஷா.

20CH_MTSubiksha சுபிக்ஷா

“மேஜர் மாரியப்பன் சரவணனைப் பற்றிப் புத்தகத்தில் கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டும்தான் அரையிறுதிச் சுற்றின்போது படித்தேன். ஆனால், அதன் பிறகு திருச்சியில் உள்ள அவருடைய குடும்பத்தைத் தொடர்புகொண்டபோதுதான் அவர் மாமனிதர் என்பது புரிந்தது.

பொதுவாக வீரர்கள் என்றதும் வரலாற்றுப் புத்தகங்களில் வரும் பெருமக்களை மட்டுமே நினைத்துப் பார்க்கிறோம். ஆனால், நம்முடைய காலத்திலேயே தேசத் தியாகிகள் இருப்பதை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு அறிந்து நெகிழ்ந்தேன்” என்கிறார் அகிலா.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் சட்டக் கல்லூரி மாணவியுமான சிம்மாஞ்சனா, “நாட்டில் அமைதி நிலவத் தங்களுடைய உயிரைப் பணயம் வைக்கும் மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக இனி வருடாவருடம் ‘மறத்தல் தகுமோ’ நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அடுத்த ஆண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கும் இதைக்கொண்டு செல்வோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x