Last Updated : 11 Jul, 2017 11:38 AM

 

Published : 11 Jul 2017 11:38 AM
Last Updated : 11 Jul 2017 11:38 AM

டிஜிட்டல் அலுவலகம்: இனி அலுவலகம் போக வேண்டாம்

வேலைவாய்ப்புகள் சொற்பமாக இருக்கும் காலகட்டத்திலும் திறமையான ஊழியர்களுக்கான தேவையும் எப்போதும் நீடிக்கவே செய்கிறது. சிறந்த திறன்கொண்ட ஊழியர்கள், அவர்களது வசதிக்கேற்ப பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்கப் பல்வேறு சாத்தியங்களை மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இணைய வசதிகள் பெருகிவிட்ட காலத்தில் ‘எங்கிருந்தும் வேலை செய்யலாம்’ என்ற சூழ்நிலை உலகமெங்கும் உருவாகி வருகிறது. வேலை செய்பவர்களே எங்கே, எப்போது, எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை இதில் தேர்வு செய்துகொள்ளலாம்.

வீட்டிலிருந்து அரக்கப்பரக்கக் கிளம்பி, சம்பிரதாய அலுவல் உடைகளுடன் அலுவலகத்துக்கு வந்து நாளின் பெரும்பகுதி நேரத்தையும், வேலை இல்லாத பொழுதுகளிலும் கணிப்பொறித் திரையையும் பார்த்தபடி கழிக்க வேண்டியதில்லை. பிடித்த கடற்கரைக்கோ மலைப்பகுதிக்கோ சென்று சூரிய உதயத்தையோ அஸ்தமனத்தையோ ரசித்துக்கொண்டேகூடப் பணிகளைச் செய்யமுடியும்.

ஆசியாவில் உள்ள இளம் தலைமுறை ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான மனநிலை குறித்து மைக்ரோசாஃப்ட் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. 14 ஆசிய நாடுகளில் 4 ஆயிரத்து 175 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வெறுமனே 6 சதவீதம் பேர்தான் நேரிடை ஊழியர்கள். 88 சதவீதம் பேர் பல அடுக்குகளில் ஒருங்கிணைக்கப்பட்ட துறைகளோடு பணிபுரிபவர்கள். வெவ்வேறு இடங்களிலிருந்துகொண்டு இணையம் வழியாக வேலைசெய்பவர்கள். அத்துடன் ஆய்வுக்கு உட்பட்டவர்களில் 88 சதவீதம் பேர், மெசேஜிங் செயலிகள், மெய்நிகர் சந்திப்புகள், சமூக வலைத்தளங்கள் வழியாகவே பணிகளைச் செய்ய விரும்புகின்றனர்.

மெய்நிகர் அலுவலகம்

‘ஆஃபீஸ் 365’ மென்பொருளை அடிப்படையாக வைத்து ‘மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்’ என்ற தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் ஊழியர்கள் உரையாடலாம், அலுவலக வேலைகளையும் அது தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளலாம். பாதுகாப்பான, தனிப்பட்ட சூழலில் அனைத்து ஊழியர்களும் இயங்கக்கூடிய மெய்நிகர் அலுவலகம் இது.

கடந்த சில ஆண்டுகளில், வைப்ளை நோமாட்ஸ் (‘WiFly Nomads’), தி ரிமோட் எக்ஸ்பீரியன்ஸ் (‘The Remote Experience’), ஹேக்கர் பேரடைஸ் (‘Hacker Paradise’), வீ ரோம் (‘We Roam’), வாண்டர்பாஸ் (‘Wanderboss’), கோ-வொர்க் பேரடைஸ் (‘Co-work Paradise’), புராஜக்ட் கெட்அவே (‘Project Getaway’) போன்ற தளங்கள் இணையம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளன.

“2013-ல் எங்களது ‘லெகசி ஆஃப் குட் 2020’ ( ‘Legacy of Good 2020’) திட்டப்படி 2020-ல் எங்களது ஊழியர்களில் 50 சதவீதம் பேரை அவரவர் இடத்திலிருந்தே பணியாற்றுபவர்களாக மாற்ற நினைத்தோம். இதுவரை 17 சதவீதம் பேர் டெல்லின் பிளெக்சிபில் பிரோக்ராமின் கீழ் இத்திட்டத்துக்கு மாறியுள்ளனர்” என்கிறார் டெல் குளோபல் கம்யூனிகேஷனின் லாரன் லீ.

அலுவலகம் என்ற பவுதீக இடத்துக்கு எல்லாரும் வந்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லாமல் ஆக்கிவிட்டது. தொலைபேசியும் கணினியும் மின்னஞ்சல் வசதியும் இருந்தால்போதும், அதுவே அலுவலகத்தைக் கட்டமைத்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x