Published : 18 Jul 2017 11:00 AM
Last Updated : 18 Jul 2017 11:00 AM
ஆசிரியர் மாணவரை மறக்கலாம். ஆனால், மாணவர்கள் ஆசிரியரை மறப்பதில்லை. அவர்கள் ஆளுமையில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட ஆசிரியர் தம்மை அறியாமலே காரணமாக இருந்திருக்கலாம். அல்லது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாதவராகவும் வெறுமனே கடந்து போயிருக்கலாம். எப்படி இருந்தாலும் மாணவர் நினைவில் இருந்து ஆசிரியர் மறைவதில்லை.
படிப்பை முடித்து வெளியேறிச் சென்ற பிறகு ஆசிரியரைத் தேடிச் சென்று காணும் அளவுக்கு நினைவிருந்தால் அது ஆசிரியர் பெற்ற பெரும்பாக்கியம். வழியில் எங்காவது எதிர்ப்படும்போது பரவசமாகி ஆசிரியரிடம் தன்னை வந்து அறிமுகப்படுத்திக்கொண்டு இரண்டு வார்த்தை பேசிப் போனால் அது சந்தோஷம். ஆசிரியப் பணியில் இருப்பவர்களுக்கே தம் பணி நிமித்தமாக இத்தனை பேரை அறிந்துவைத்திருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
பிடிக்காமல் கையாண்ட உத்தி
தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு மட்டுமல்ல, பிற துறை மாணவர்களுக்கும் பொதுத்தமிழ் வகுப்பு நடத்தியிருக்கிறேன். பொதுத்தமிழ் வகுப்பில் சில மட்டும் சவாலானதாக அமையும். பொதுவாக வரலாறு, பொருளியல் ஆகிய வகுப்புகளை அவ்விதம் சொல்வார்கள். வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு ஓரிரு ஆண்டுகள் சென்றிருக்கிறேன். அவ்வகுப்பில் மாணவர்களை அமைதியாக வைத்திருப்பது பெரும்பாடு. எல்லாத் திறன்களையும் காட்டினாலும் வேலைக்கு ஆகாது. சின்னதாக ஒரு சலசலப்பு தோன்றிவிட்டாலும் அது பரவிப் பெருகிப் பெரும் கூச்சலாக மாறிவிடும். பின்னர் அதைக் கட்டுப்படுத்துவது சாதாரண விஷயமல்ல. அவ்வகுப்பைச் சமாளிக்க ஒரு உத்தியை நான் கைக்கொண்டேன்.
வகுப்புக்குள் நுழைந்து வருகைப் பதிவு எடுத்து முடிக்கும்வரை பேச்சை அனுமதிப்பேன். அதன்பின் பாடம் தொடங்கிவிட்டால் அவ்வளவுதான். மாணவர் ஒருவரும் பேச முடியாது. காரணம் ஒரு மணி நேரமும் இடைநிறுத்தமே இல்லாமல் தொடர்ந்து நல்ல சத்தத்துடன் பாடம் நடத்துவேன். கரும்பலகையையும் பயன்படுத்துவதில்லை. சிறு முணுமுணுப்புப் பேச்சுகளை எல்லாம் என் சத்தம் செரித்துவிடும். அதையும் மீறி எங்காவது சலசலப்பு தோன்றினால் பேச்சைப் பட்டென்று நிறுத்துவேன். பெருமழை ஓய்ந்த மாதிரித் திடுமென அதிர்ச்சி ஏற்படும். சலசலப்பு நின்றுபோகும். மறுபடியும் மழை தொடங்கும். கட்டுப்படுத்தும் தேவை நேர்ந்தால் ஓரிரு சொற்களில் திட்டுவேன். வகுப்பு முழுமையிலும் பார்வை படர்ந்திருக்கும்.
இந்த வகைக் கற்பித்தலில் எனக்குச் சிறிதும் உடன்பாடு கிடையாது. ஆனாலும் வேறு வழியில்லை. எனினும் வரலாற்றுத் துறை மாணவர்களைப் போல ஆசிரியர் மீது அன்பு பாராட்டுபவர்கள் யாருமில்லை. அவர்கள் கல்லூரித் தேர்தல் முதற்கொண்டு விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் எனப் பலவற்றிலும் ஆதிக்கமும் ஆளுமையும் செலுத்துவார்கள். ஆகவே, என்னிடம் அதிகம் அறிவுரை பெற்றவர்கள் அவர்களாகவே இருப்பார்கள்.
முகம் மறந்திருக்கவில்லை
கல்லூரியை விட்டுச் சென்ற பிறகு அவர்களைச் சந்திப்பது அரிதுதான். பெரும்பாலானவர்கள் மேற்படிப்பைத் தொடர்வதில்லை. தம் ஊரில் ஏதோ ஒரு சாதாரண வேலையில் தங்கிவிடுவார்கள். அக்கல்லூரியில் இருந்து இடமாறுதல் பெற்று வந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவம். கல்லூரி முடிந்து நானும் என் மனைவியும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம்.
விதுன்குமார்
திடுமெனப் பின்னால் பார்த்த என் மனைவி “ஒரு போலீஸ்காரர் நம்ம பின்னாடியே வர்றாருங்க” என்றார் அச்சத்தோடு. வண்டியின் வேகத்தைக் குறைத்தேன். ஆனால் வண்டி கடந்து செல்லவில்லை. என்னை வழிமறித்து முன்னால் போய் நின்றது. வேறு வழியில்லாமல் நானும் நிறுத்த வேண்டிவந்தது. வண்டியில் இருந்து சட்டென இறங்கி என்னருகே வந்த உயர்ந்த உருவம் “உங்க மாணவருங்கய்யா. ரமேஷ்குமாருங்கய்யா. ஹிஸ்டரி படிச்சங்கய்யா” என்று வார்த்தைக்கு வார்த்தை ஐயா போட்டதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“என்னப்பா இது, இப்படிப் பயமுறுத்தீட்டயே” என்றேன். தன் பெயரைத் தானே சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டதும் சந்தோஷமாக இருந்தது. “எனக்கு இந்த ஸ்டேஷன் தாங்கய்யா. போய்க்கிட்டு இருந்தேன். எதிர்ல பாத்தா நீங்க. எத்தன வருசம் ஆனாலும் முகம் மறக்குமாங்கய்யா. அதான் திருப்பிக்கிட்டுப் பின்னால வந்தேன். உங்களப் பாத்துட்டு ரண்டு வார்த்த பேசாத எப்படிப் போவங்கய்யா” என்றார். எனக்கும் முகம் மறந்திருக்கவில்லை.
வார்த்தையின் அருமை
கல்லூரியில் எப்போதும் பிரச்சினை உருவாக்கியபடி இருக்கும் குழுவில் இவரும் ஒருவர். வகுப்பறைக்குள் இருப்பதை ஒருபோதும் விரும்பாதவர். ஓரிடத்தில் பார்த்து “வகுப்புக்குப் போப்பா” என்றால் “சரிங்கய்யா” என்று எதிர்பக்கம் போய் இன்னொரு கட்டிடத்தின் பின்னால் மறைவார். எதிர்பக்கம் போனால் கண்டுபிடிக்கலாம். வகுப்பறைக்குச் செல்லாமல் ஒளிந்து விளையாடும் மனோபாவம் கொண்டவர். அவரைக் காவல் உடையில் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு. மனம் போலவே சுற்றித் திரியும் வேலை கிடைத்திருக்கிறது.
“நீங்க அப்ப சொன்ன அறிவுரை எல்லாம் அப்படியே நினைவுல இருக்குதுங்கய்யா. கலாட்டா பண்ற கும்பல்ல இருந்தனா, அதனால அப்ப என்னடா எப்பப் பாரு இப்படிச் சொல்லிக்கிட்டே இருக்கறாரேன்னு எரிச்சலா இருக்கும். முடிச்சு வெளிய போனதுக்கு அப்பறம்தான் உங்க வார்த்தையோட அரும தெரிஞ்சுதுங்கய்யா” என்று படபடவென்று பேசிப் பொரிந்தார்.
இப்போது அவர் பெயர் ரமேஷ்குமார் அல்ல. விதுன்குமார். அப்பெயர் மாற்றத்துக்குக் காரணம் காதல். அவர் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது பெயரில் பிரச்சினை ஏற்பட்டது. இருவருக்கும் பொருத்தம் பார்த்தனர். “பெயர்ப் பொருத்தம் சரியாக அமையவில்லை” என்று சொல்லிவிட்டார்கள். “அதனாலென்ன, ஆளை மாற்ற மாட்டேன், பெயரை மாற்றிக்கொள்கிறேன்” என்று அதிகாரப்பூர்வமாகவே தன் பெயரை மாற்றிக்கொண்டார். குறும்புக்கார மனோபாவம் உடையவர்கள் எல்லாவற்றையும் சாதாரணமாகக் கடந்துவிடுவார்கள். திருமணமாகிக் குடும்பத்தோடு இப்போது சேலத்தில் வசிக்கிறார். மக்களுக்குப் பிரியமான காவல் அதிகாரி என்றும் பெயர் எடுத்திருக்கிறார் ரமேஷ்குமார் என்னும் விதுன்குமார்.
பெருமாள்முருகன், நாவலாசிரியர்,
தமிழ்ப் பேராசிரியர்
தொடர்புக்கு: murugutcd@gmail.com
(நிறைவடைந்தது)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT