Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. மாணவர்கள் வசதிக்காக நேரடிச் சேர்க்கை மையங்களை அதிகரிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
ஒரு லட்சத்தைத் தாண்டியது156 ஆண்டுகள் பாரம்பரியமும், பெருமையும் வாய்ந்த சென்னை பல்கலைக்கழகம் பல்வேறு பாடப் பிரிவுகளில் முதுகலைப் பட்டம், இளங்கலைப் பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை தொலைதூரக்கல்வி மூலம் வழங்கி வருகிறது. தொலைதூரக்கல்வியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.
இவர்களில் எம்.பி.ஏ. படிப்பவர்கள் மட்டும் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர். ஆண்டுதோறும் சராசரியாக 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொலைதூரக்கல்வியில் சேருகின்றனர். இவர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கல்வி மையங்களும், நேரடி மாணவர் சேர்க்கை மையங்களும் இயங்கி வருகின்றன.
நேரடி சேர்க்கை, மையங்கள் அதிகரிப்பு
வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தொலைதூரக்கல்வியில் சேருவதற்கு சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு வந்து செல்லும் நிலையை தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் 29 நேரடி சேர்க்கை மையங்கள் உள்ளன. இவை தவிர, திருவொற்றியூர், நெமிலிச்சேரி ஆகிய இடங்களில் இயங்கும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் தனியே சேர்க்கை மையங்கள் இருக்கின்றன.
பல்கலைக்கழகத்தைப் போல நேரடி சேர்க்கை மையங்களிலும் மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கி உரிய கட்டணத்தை செலுத்தி படிப்பில் சேர்ந்துவிடலாம். பாடப் புத்தகங்களையும் அந்த மையத்திலேயே வாங்கிக்கொள்ளலாம். இதனால், பல்கலைக்கழகத்துக்கு சென்றுவரும் அலைச்சல் ஏற்படாது.
20 இடங்களில் தொடங்கப்படும்
இந்த நிலையில், தொலைதூரக் கல்வியில் சேரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக நேரடி சேர்க்கை மையங்களை அதிகரிக்க சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து தொலைதூரக்கல்வி நிறுவன இயக்குநர் எம்.ரவிச்சந்திரன் கூறியதாவது:
பாரம்பரியம், கல்வித்தரம் அடிப்படையில் சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வியில் சேர்ந்து படிக்க மாணவ-மாணவிகள் பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் வசதிக்காக புதிதாக 20 நேரடி சேர்க்கை மையங்கள் தொடங்க முடிவுசெய்துள்ளோம்.
அரசு கல்லூரிகள், பள்ளிகளுக்கு வாய்ப்பு
இதற்கு அரசு கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், இதேபோல் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சென்னை பல்கலைக்கழக கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம். படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நேரடி சேர்க்கை மையங்களுக்கு குறிப்பிட்ட தொகை சேவைக் கட்டணமாக கிடைக்கும்.
சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு, புதிதாக அமைக்கப்படும் நேரடிச் சேர்க்கை மையங்கள் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT