Published : 01 Sep 2016 10:05 AM
Last Updated : 01 Sep 2016 10:05 AM

டிஎன்பிஎஸ்சி | குரூப்- IV | மாதிரி வினா- விடை 2: தேர்வுக்கு தயாராவது எப்படி?

சுயவேலைவாய்ப்பு, தனியார்துறை வேலைவாய்ப்பு என எத்தனையோ வழிகள் இருப்பினும் அரசு வேலை என்பது எப்போதுமே வசீகரிக்கும் கனவாகவே நீடிக்கிறது. நிரந்தர வேலை, நல்ல ஊதியம், பதவி உயர்வு, சமூக அந்தஸ்து என அனைத்தும் ஒருங்கே அமைவதால் இன்று வரை கிராமப்புறம் முதல் நகரம் வரை இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு முயற்சிக்கிறார்கள்.

தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, வேலைவாய்ப்புக்கான தேடலில் இளைஞர்களின் அட்சய பாத்திரமாக டிஎன்பிஎஸ்சி விளங்குகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் பத்தாம் வகுப்பு தேறியவர் வரை அனைவருக்குமான தேடலுக்கும் உதவும் வாய்ப்பு வங்கியாக செயல்படுகிறது.

அந்த வகையில், 5,451 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இத்தேர்வில் வெற்றி பெற்றால் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சம்பளத்துடன் கூடிய அரசு வேலை நிரந்தரமாகும்.

தேர்வுக்கு இணையத்திலேயே (www.tnpsc.gov.in) பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப் பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 8-ம் தேதி ஆகும். நவம்பர் 6-ம் தேதி எழுத்துத்தேர்வு. எனவே, 3 மாதங்களே தயாரிப்புக்கான அவகாசமாக உள்ளது.

என்னென்ன படிக்க வேண்டும்

மொத்தம் 200 கேள்விகள் (கொள்குறி வகை) ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப் பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும், பொது அறிவு பகுதியில் 100 வினாக்களும் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், பொது அறிவு தொடர்பானதாகவும், 25 வினாக்கள் திறனறிவு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். பொது அறிவு என்று சொல்லும்போது அதில், அறிவியல், வரலாறு, புவியியல், நடப்பு நிகழ்வுகள், இந்திய அரசியலமைப்பு போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

கணிதம்

இதில் எண்கள், சுருக்குதல், சதவீதம், மீ.சி.ம, மீ.பெ.வ, விகிதம், தனிவட்டி, கூட்டு வட்டி, பகடை, தொடர் வரிசை போன்றவை இடம்பெறும். கணிதத்தில் சுருக்கமான முறைகளை வீட்டிலேயே தினமும் பயிற்சி செய்ய இணையதளத்தில் நிறைய காணொலிகள் உள்ளன. அதன்படி தினமும் முயற்சித்தால் 25 கேள்விகளுக்கும் சுலபமான முறையில் விடையளிக்க ஏதுவானதாக இருக்கும்.

அறிவியல்

இயற்பியலில் கண்டுபிடிப்புகள், காந்தம், சூரிய குடும்பம், மின் அறிவியல் போன்றவை பற்றியும், வேதியியலில் அமிலங்கள், காரம், தனிமம், உரங்கள், ஆக்ஸிஜனேற்றம், ஒடுக்கம் ஆகியவையும், உயிரியலில் சுவாசம், செல், ஒளி சேர்க்கை, வைட்டமின்கள், வைரஸ், பாக்டீரியா நோய்கள் போன்றவையும் படிக்க வேண்டும். உதாரணமாக,

மின்தடையின் அலகு என்ன?

மரங்களின் உறுதிக்கு காரணமான திசுக்கள் யாவை?

சுவாசித்தலின்போது வெளிப்படும் ஆற் றல் எந்த வடிவில் சேமிக்கப்படுகிறது

போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

வரலாறு

வரலாறைப் பொருத்தவரையில் வேத காலம், புத்த மற்றும் ஜைன மதம், முகலாய பேரரசு, பாமினி பேரரசு, சேர, சோழ, பாண்டியர், பல்லவர்கள் கால வரலாறு, கலை மற்றும் சிற்பங்கள், இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, தலைவர்கள் தோற்று வித்த இயக்கங்கள், நாளிதழ்கள் போன் றவை கேட்கப்படும். இது தவிர தமிழக மற்றும் இந்தியப் பண்பாடு குறித்த 5 கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதார ணமாக,

போர்ச்சுகீசியர்களின் வாணிப தளம் எங்குள்ளது?

இன்றைய கர்னாடக இசை தோன்றிய காலம்?

ஹரப்பா மக்கள் முதலில் பயிரிட்டது எது?

விதவை மறுமணத்தை ஆதரித்த தலைவர் யார்?

போன்ற கேள்விகள் வருகின்றன.

புவியியல்

புவியியலில், புவியமைப்பு, ஆறுகள், தனிமங்கள் கிடைக்கப் பெறும் இடங்கள், இயற்கை சீற்றங்கள், பருவகால நிலைகள் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. உதாரணமாக:-

புவியின் உள்ளடுக்கில் குழம்பு நிலையிலுள்ள அடுக்கு எது?

உலகின் மிக ஆழமான அகழி எங்கு அமைந்துள்ளது போன்ற கேள்விகள் மிகவும் அடிப்படையான நிலையிலேயே கேட்கப்படுகின்றன.

அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட் பாடுகள், அடிப்படைக் கடமைகள் ஷரத்து கள், நாடாளுமன்ற அமைப்பு, குடியரசுத் தலைவர், ஆளுநரின் அதிகாரங்கள் போன்றவற்றில் இருந்து கேள்விகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக

மக்களாட்சியின் தத்துவம் யாது?

நேபாளம் சமீபத்தில் எத்தகைய அரசியலமைப்பை ஏற்றது?

இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணை எதைக் குறிக்கிறது? போன்றவை கேட்கப்படுகின்றன.

நடப்பு நிகழ்வுகள்

ஓராண்டு முழுவதும் நடந்த உலக, தேசிய, மாநில நிகழ்வு, கண்டுபிடிப்புகள், புத்தகங்கள், விருதுகள், விளையாட்டு, இயற்கை சீற்றம், ஒப்பந்தங்கள், நியமனங்கள் ஆகி யவற்றைப் படித்திருப் பது அவசியம். உதாரணமாக,

உசைன் போல்ட் எந்த விளை யாட்டுடன் தொடர்புடையவர்?

சந்திரயான்-1 எதற்காக ஏவப்பட்டது? போன்ற சமீப நிகழ்வுகளில் இருந்து கட்டாயம் கேள்விகளை எதிர் பார்க்கலாம்.

எப்படி படிக்கலாம்?

5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை யிலான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங் களையும், ‘இந்து’ (ஆங்கிலம் அல்லது தமிழ்) போன்ற தினசரி நாளிதழ்களையும் படிப்பது அவசியம். பொதுத்தமிழ் பகு திக்கு 5 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் உள்ள இலக்கணம் படித்தால் போதுமானது. நடப்பு நிகழ் வுக்கு நாளிதழ் மற்றும் ஏதேனும் இரண்டு இணையதளங்களைப் பின்பற்றலாம்.

கால அட்டவணையிட்டு படித்தல் மிக அவசியம். மூன்று மாதங்களை சரியான முறையில் பிரித்து, அனைத்து பாடத் திட்டங்களையும் தயார்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு வினாத் தாள்களை மீண் டும் மீண்டும் ஆராய்தல் அவசியம். குறிப்பிட்ட சில கையேடுகளைத் தரமறிந்து வாங்கிப் படித்தால், தேவை யற்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம். குறித்தபடி 3 மணி நேரத்தில் தேர்வை முற்றிலும் எழுதி முடிக்க பயிற்சி அவசியம். தினமும் மாதிரி வினாத்தாள் பயிற்சியே கணிதத்துக்கு போதுமானது. தினசரி மாதிரி பயிற்சி வினாத் தாள்களை கால அவகாசத்தினை மனதிற் கொண்டு விடையளிப்பது, தேர்விலும் கால அவகாசத்திற்குள் தேர்வை முடிக்க உதவும். மனதை அமைதியுடன் வைக்க சிறிது நேர தியானம் அல்லது யோகா செய்வது நினைவுத் திறனையும் அதிகரிக்கும். தேர்வுக்கான தயாரிப்பைத் தொடங்க சரியான திட்டமிடுதலும், வழிகாட்டலும், தேர்வு முறை பற்றிய புரிதலும் தேவை. தயாரிப்பை தொடங்கிய பின் கடின உழைப்பும், நினைவாற்றலும், பயிற்சி யும் தேவை. தேர்வின் போது சமயோசித ஆற்றலும், நேர மேலாண்மையும் சிந்திக்கும் தன்மையுமே பிரதானம்.

இவற்றை மனதில் இருத்தி படிக்கத் தொடங்குங்கள். வெற்றி நிச்சயம். அரசுப் பணியாளராக வாழ்த்துக்கள்.

எம்.கார்த்திகேயன்,

கல்வி ஆலோசகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x