Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM

ஆழ்கடலில், அடர்வனத்தில் சாதிக்க வைக்கும் படிப்புகள்

பி.எஸ்சி. வேதியியல், உயிரியல், தாவரவியல் படிப்புகளைப் பற்றி பார்க்கலாம். பி.எஸ்சி. வேதியியல் மற்றும் பி.எஸ்சி. உயிர்-வேதியியல் (பயோ-கெமிஸ்ட்ரி) படிப்பவர்கள் இரு வேறு துறைகளைத் தேர்வு செய்யலாம். ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்புவோர் பி.எஸ்சி. வேதியியல், எம்.எஸ்சி., எம்.எட்., பிஎச்.டி. வரை படித்து பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர் ஆகலாம்.

வேறு துறைகளுக்குச் செல்ல விரும்புவர் பி.எஸ்சி. உயிர்-வேதியியல் படித்துவிட்டு, எம்.எஸ்சி. மெடிஷனல் கெமிஸ்ட்ரி, இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பாலிமர் கெமிஸ்ட்ரி, மெடிஷனல் பயோ-கெமிஸ்ட்ரி, மெடிஷனல் லேப்-டெக்னிக்கல் உள்ளிட்ட மேற்படிப்புகளை படிக்கலாம். உடல் ரீதியான பரிசோதனையில் பல்வேறு நவீன யுக்திகள் கையாளப்படுகின்றன.

மருத்துவ உலகில் உடற்கூறு பரிசோதனை முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், பயோ-கெமிஸ்ட்ரி படிப்பவர்கள் சொந்தமாக பரிசோதனைக்கூடம் அமைக்கலாம். மருத்துவமனைகளில் பரிசோதனைக்கூட நிர்வாகி போன்ற பணிகளுக்கும் செல்லலாம். மருத்துவம் படிக்க கூடுதல் கட்-ஆப் கிடைக்காதவர்கள் மருத்துவத் துறைக்கு செல்ல விரும்பும் பட்சத்தில் உயிர்-வேதியியல் படிப்பு கைகொடுக்கிறது.

சொந்தமாக மருத்துவமனை அமைத்து நிர்வகிக்க விரும்புபவர்கள் எம்.பி.ஏ. ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் அண்டு ஹெல்த்-கேர் சயின்ஸ் பட்ட மேற்படிப்பு படிக்கலாம். பெரிய மருத்துவமனைகளில் இவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.

பி.எஸ்சி. தாவரவியல், உயிரியல் படித்தவர்கள் எம்.எஸ்சி. மரைன் பயாலஜி படிப்பதன்மூலம் ஆழ்கடலில் கடல்சார் உயிரினங்கள், தாவரங்களை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். எம்.எஸ்சி., எம்.எட்., எம்.பில்., பிஎச்.டி. படிப்பதன்மூலம் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றலாம். எம்.எஸ்சி. பிசியாலஜி அண்ட் அனாட்டமி படிப்பவர்கள் பல் மற்றும் பார்மா மருத்துவக் கல்லூரிகளில் டியூட்டராக பணியில் சேரலாம்.

கீழ்க்கண்ட படிப்புகள் குறித்து தென்னிந்தியாவைச் சேர்ந்த பலருக்கும் தெரிவதில்லை. மும்பையின் நேஷனல் சென்டர் ஃபார் பயாலஜிக்கல் சயின்ஸ் நிறுவனம், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிசர்ச் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் எம்.எஸ்சி. வைல்டு லைஃப் பயாலஜி அண்ட் கன்சர்வேஷன் படிப்பை படிக்கலாம். டேராடூனில் உள்ள இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தில் எம்.எஸ்சி. வைல்டு லைஃப் சயின்ஸ் படிக்கலாம். இவர்களுக்கு வன உயிரியல் ஆராய்ச்சித் துறைகள், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான தொலைக்காட்சி நிறுவனங்கள், கல்லூரிகளில் வேலைவாய்ப்புகள் நிறையவே உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x