Published : 05 Oct 2013 02:46 PM
Last Updated : 05 Oct 2013 02:46 PM
குரூப்-2 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, துணை வணிக வரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்பட 19 விதமான பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டிருந்தது. இதற்கான தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (நள்ளிரவு 11.59 மணி வரை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பட்டப் படிப்பு தேர்ச்சியை குறைந்தபட்ச கல்வித்தகுதியாக கொண்ட குரூப்-2 தேர்வுக்கு, பட்டதாரிகள் மட்டுமின்றி முதுகலை பட்டதாரிகளும், எம்.பில். பட்டதாரிகளும்கூட போட்டிப்போட்டு விண்ணப்பித்துள்ளனர்
7 லட்சம் பேர் விண்ணப்பம்
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசின் பல்வேறு துறைகளில் 19 விதமான பணிகளுக்காக குருப்-2 தேர்வு நடத்துவற்காக அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். தற்போதைய நிலவரப்படி, 6,85,198 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆன்லைனில் நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். எனவே, இன்னும் பலர் விண்ணப்பிக்கக் கூடும். தேர்வுக்கட்டணத்தை வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் 8-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் 118 மையங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உதவி பொறியாளர் தேர்வு முடிவு வெளியீடு
தமிழக அரசின் ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் 220 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மார்ச் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இந் தேர்வினை 51,477 பொறியாளர்கள் எழுதியிருந்தனர். தேர்வின் தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக 652 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வருகிற 18-ந் தேதிக்குள் தங்கள் கல்விச்சான்றிதழ்களை டி.என்பி.எஸ்.சி. இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் அல்லது டி.என்பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன்.
குருப்-2 தேர்வு மாற்றம்
குரூப்-2 முதல்நிலைத்தேர்வு டிசம்பர் 1-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நாளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வும் நடக்கிறது. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சிலர் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வையும் எழுதக்கூடும்.
இதுபோன்ற சூழ்நிலையில், குறைந்தபட்சம் 15 தேர்வர்களிடமிருந்து தேர்வு தேதியை மாற்றுமாறு கோரிக்கையும் வரும்பட்சத்தில் அவர்களின் கோரிக்கை ஏற்று தேதி மாற்றியமைத்து புதிய தேதியில் தேர்வு நடத்துவது டி.என்.பி.எஸ்.சி.யின் வழக்கம்.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணனிடம் கேட்டபோது, இதுவரை அதுபோன்று எந்த தேர்வர்களிடமிருந்தும் கோரிக்கை வரவில்லை. கோரிக்கை வந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றார். எனவே, குருப்-2 முதல்நிலைத்தேர்வு கண்டிப்பாக மாற்றப்பட்டு வேறொரு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT