Published : 28 Feb 2017 10:40 AM
Last Updated : 28 Feb 2017 10:40 AM
இலக்கைத் தீர்மானித்துவிட்டால் எத்தனை தடைகள் வந்தாலும் போராடி வெல்ல வேண்டும் எனச் சொல்வார்கள். கொண்ட கொள்கையில் உறுதியோடு ‘சவாலே சமாளி’ என்று விடாமுயற்சியோடு நினைத்ததை அடையும்படி உத்வேகம் அளிப்பார்கள். போகும் வழியில் தடைக் கற்கள் இருந்தால் அவற்றையே படி கற்களாக மாற்றிவிடலாம். ஆனால் குறிக்கோளுக்கு நேரெதிரான சவாலை எதிர்கொள்ள நேரிட்டால்? எப்படியாவது நாம் முதலில் நிர்ணயித்த இலக்கை அடைந்தே தீர வேண்டும் எனப் போராடித் தோற்பதா அல்லது புதிய இலக்கைக் கண்டுபிடித்து அதை அடைவதா? இதில் இரண்டாவது கேள்வியைத் தன் வாழ்க்கையின் வேள்வியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் பூஜா குப்தா.
விருதுக்கு அழகு!
கவின்கேர் நிறுவனமும் எபிலிட்டி அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் ‘கவின்கேர் எபிலிட்டி மாஸ்ட்ரி விருது’ இவருக்குச் சென்னையில் கடந்த வாரம் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளின் முயற்சிகளையும் சாதனைகளையும் கொண்டாடும் நிகழ்வு அது. இந்தியா முழுவதுமிலிருந்து மாற்றுத் திறனாளி சாதனையாளர்களைக் கண்டறிந்து அவர்களில் ஐந்து பேருக்கு ‘கவின்கேர் எபிலிட்டி விருது 2017’ வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
விருதினைப் பெற ஹரியாணா மாநிலத்தின் ரெவாரியிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார் பூஜா குபதா. பூஜாவின் சாதனை அவர் நினைத்ததை எட்டியது அல்ல. இடர்ப்பாடுகளுக்கு இடையில் புதிய புதிய இலக்குகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பது!
பாதிப்புப் பரவியது
தற்போது சொந்த ஊரில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் புரோபீஷனரி அதிகாரியாகப் பணிபுரிந்துவருகிறார் பூஜா. ஆனால் பள்ளி நாட்களிலிருந்து இவருடைய கனவு பேராசிரியர் ஆவதுதான். அதை அடைய முடியாத சூழல் நேர்ந்தது. ஆரோக்கியமான குழந்தையாகப் பிறந்த பூஜா முதல் அடி எடுத்துவைத்து நடந்ததே இரண்டு வயதில்தான். மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தவருக்கு அவருடைய பெற்றோர் டெல்லி, மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தனர்.
மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி எனப்படும் தசைநார் தேய்வு, அடாக்ஸியா என்னும் கை கால்களில் தசை இணக்கம் இன்மை இப்படி ஒவ்வொரு மருத்துவப் பரிசோதனையிலும் ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. நடுத்தர வர்க்கக் குடும்பமாக இருந்தாலும் மகளைக் குணப்படுத்த மேற்கொள்ளாத சிகிச்சைகள் இல்லை. ஆனால் தசைகளின் வளர்ச்சியைத் தகர்க்கும் மூலக்கூறுகள் பூஜாவின் மரபணுவிலேயே இருப்பதால் அவர் கால்களில் தொடங்கிய குறைபாடு கொஞ்சங்கொஞ்சமாக உடல் முழுவதும் பரவ ஆரம்பித்தது.
நெகிழும் தருணம்
கைகொடுக்கும் தோழர்களின் உதவியாலும், அன்பான பள்ளி ஆசிரியர்களின் ஆசியாலும் கைத்தடி ஊன்றி நடந்துகொண்டிருந்தவர் 14 வயதில் முற்றிலுமாகச் சக்கர நாற்காலியில் ஒடுங்கிப்போனார். “நான் சிறப்பு பள்ளியில் படிக்கவில்லை. என் தோழிகள் அனைவரும் சாதாரணமான உடல் அமைப்பு கொண்டவர்கள். ஆனால் எனக்காகக் குரூப் ஸ்டடிக்கு என் வீட்டுக்கு அனைவரும் வந்துவிடுவார்கள். அதைவிடவும் பள்ளியின் முதல் மாடியில் இயங்கி வந்த வகுப்பறையை எனக்காகவே தரைத்தளத்துக்கு என் பள்ளி முதல்வர் மாற்றினார். ஏழாவது வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை எனக்காகவே வகுப்பறை மாற்றப்பட்டிருந்தது” எனப் பள்ளி நாட்களை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார்.
காண்பேன், அடைவேன்!
தான் சராசரி மதிப்பெண் பெறும் மாணவிதான் எனக் கூறும் அவர் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, வணிக வியலில் எம்.ஃபில். செய்திருக்கிறார்.
“நான் படிப்பில் டாப்பர் கிடையாது. ஆனால் வணிகவியல் பேராசிரியர் ஆகும் கனவோடு படித்தேன். அஹிர் கல்லூரியில் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வையும் (NET) இளநிலை ஆராய்ச்சி ஃபெலோஷிப்பையும் (JRF) வெற்றிகரமாக முடித்த முதல் மாணவி நானே. ஆனால் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும்போது என்னுடைய குரல்வளை தசைகளும் பாதிக்கப்பட்டன. என்னால் தொடர்ந்து பேச முடியாத நிலை உண்டானது. பேசாமல் எப்படி வகுப்பெடுப்பது!” எனச் சிரிக்கிறார்.
இந்த நிலையில்தான் தன் அடுத்த இலக்கைத் தேடிப் புறப்பட்டார் பூஜா. தொடர்ந்து வங்கித் தேர்வுகள் பல எழுதி அதிலும் வெற்றி கண்டு 2014-லிருந்து வங்கி ஊழியராகப் பணிபுரிகிறார். அதிலும் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு வணிகப் பணி கடுமையாகி உள்ளது. “நாளுக்கு நாள் என் உடல் ஆரோக்கியம் குறைந்துகொண்டேபோகிறது. அதனால் புதிய கனவு காண்பேன். அதை அடைவேன்!” என ஐ.ஏ.எஸ். இலக்கை நோக்கித் தன் புதிய கனவுப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் மாற்றத்துக்கான திறனாளி பூஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT