Published : 18 Nov 2013 12:00 AM
Last Updated : 18 Nov 2013 12:00 AM

பி.இ., பி.டெக். பட்டதாரிகளுக்கு இந்திய பொறியியல் பணி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளைப் போல மத்திய அரசில் இன்னும் பல உயர் பணிகள் உள்ளன. அவை, இந்திய பொருளாதார பணி (ஐ.இ.எஸ்.), இந்திய புள்ளியியல் பணி (ஐ.எஸ்.எஸ்.), இந்திய பொறியியல் பணி (ஐ.இ.எஸ்.).

பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். பி.இ., பி.டெக். எம்.பி.பி.எஸ். என எந்தப் பட்டதாரிகளும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதலாம். எனவே, போட்டி மிகவும் கடுமையாக இருக்கும். தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் அதிகளவில் இருக்கும்.

ஆனால், ஐ.இ.எஸ். (இந்தியன் எகானமிக் சர்வீஸ்) தேர்வை பொருளாதாரம் படித்தவர்களும், ஐ.எஸ்.எஸ். (இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ்) தேர்வை புள்ளியியல் படித்தவர்களும், ஐ.இ.எஸ். தேர்வான இந்தியன் என்ஜினியரிங் தேர்வை பி.இ., பி.டெக். பட்டதாரிகள் மட்டுமே எழுத முடியும்.

எனவே, சிவில் சர்வீஸ் தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த வகை தேர்வுகளில் போட்டியும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இதுபோன்ற சிறப்புப் பணி தேர்வு தொடர்பான விழிப்புணர்வு, கிராமப்புற மாணவர்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தையும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்தான் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது.

பொறியியல் படிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்போரும் ஐ.இ.எஸ். எனப்படும் இந்திய பொறியியல் பணி தேர்வு எழுத தகுதி உண்டு.

பதவிகள் பலவிதம்

ஐ.ஏ.எஸ். தேர்வைப் போலவே இதை எழுதுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண் எதுவும் வரையறுக்கப்படவில்லை. பாஸ் செய்திருந்தாலே போதும். 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை உண்டு.

ஐ.இ.எஸ். தேர்வில் இந்தியன் ரயில்வே சர்வீஸ், மிலிட்டரி என்ஜினியரிங் சர்வீஸ், இந்தியன் டெலிகாம் சர்வீஸ், இந்தியன் நேவல் அர்மாமென்ட் சர்வீஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர் சர்வீஸ், இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி சர்வீஸ், இந்தியன் சப்ளை சர்வீஸ், சென்டிரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ், மத்திய பொதுப்பணித்துறை பணி என பல வகைப் பதவிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பிடித்த துறையை, பிடித்தமான பணியை தேர்வுசெய்யலாம். விண்ணப்பதாரரின் விருப்பம், மதிப்பெண், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளுக்கு ஏற்ப ரயில்வே துறை, மத்திய பொதுப்பணி துறை, பாதுகாப்புத் துறை, கடற்படை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, மத்திய மின்சார வாரியம், எல்லையோர சாலை நிறுவனம், தொலைத்தொடர்புத் துறை போன்றவற்றில் உதவி செயற்பொறியாளர், உதவி இயக்குநர் நிலையில் ஆரம்ப நிலையில் பணியமர்த்தப்படுவார்கள். உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், கூடுதல் தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர், கூடுதல் டைரக்டர் ஜெனரல், டைரக்டர் ஜெனரல் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம். மத்திய வாரியங்களின் தலைவர் பதவியையும் அடையலாம்.

மதிப்பெண் பட்டியல்

ஐ.இ.எஸ். அதிகாரிகளுக்கு தொடக்கநிலையிலேயே மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். ஐ.இ.எஸ்.தேர்வைப் பொருத்தமட்டில், நேரடியாக மெயின் தேர்வுதான். முதல் பகுதியில் பொது அறிவு, பொது ஆங்கிலம் (ஒரு பிரிவு) மற்றும் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடம் (2 பிரிவு) தொடர்பாக அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். தலா 200 மதிப்பெண் வீதம் 3 பிரிவுகளுக்கும் மொத்தம் 600 மதிப்பெண். 2வது பகுதியில் விரிவாக விடையளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் இருந்து தலா 2 தாள்கள். ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண் வீதம் 400 மதிப்பெண். ஒட்டுமொத்தமாக 1000 மதிப்பெண். அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு 200 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு ஐ.இ.எஸ். பணியில் 763 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு நவம்பர் 25ஆம் தேதிக்குள் யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.upsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுமுறை, பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தற்போது பி.இ., பி.டெக். இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x