Published : 19 Jul 2016 12:13 PM
Last Updated : 19 Jul 2016 12:13 PM
மனித குலத்தின் தொடக்கப் புள்ளியைக் கண்டறிய மரபணு ஆராய்ச்சிகள் சமீப காலமாக உலகின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்களே எனச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த மரபணு ஆய்வு முடிவு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மரபியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் உலகம் முழுவதும் உள்ள 50 வேறுபட்ட மக்கள் இனக் கூட்டங்களில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் மக்களிடம் மரபணுச் சோதனை நடத்தினார். இந்த ஆய்வில் இந்திய மையத்துக்கு முதன்மை ஆய்வாளராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் ராமசாமி பிச்சப்பன் செயல்பட்டுத் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தார்.
அந்த ஆய்வில் வெளியான உண்மை இவை: என்னவென்றால் மக்களில் பல இனங்கள் இல்லை; உலகின் பல இடங்களிலிருந்து மனிதன் தோன்றியிருக்கக் கூடும் என்ற கோட்பாடு தவறு; நமது மூதாதையர் ஆப்பிரிக்காவிலிருந்துதான் வந்தார்கள்தான்.
நீங்கள் யார்?
இதே போல மரபணு ஆய்வில் உலக அளவில் பிரபலமானவை 23 அண்டு மீ (23 and me), ஃபேமிலி ட்ரீ டிஎன்ஏ (Family Tree DNA), ஆன்செஸ்ட்ரி டிஎன்ஏ (Ancestry) ஆகிய நிறுவனங்கள் ஆகும். இவற்றில் ஆன்செஸ்ட்ரி டிஎன்ஏ நிறுவனம் தற்போது வேறு கோணத்தில் ‘தி டிஎன்ஏ ஜர்னி’ (‘The DNA Journey’) என்கிற ஆய்வை நடத்தியுள்ளது. ‘மொமொண்டோ’ (Momondo) என்னும் டென்மார்க் நாட்டு இணையதளம் ஆய்வின் முடிவைக் குறும்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது.
“நீங்கள் யார் என்கிற கேள்வியைக் கேட்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா?” என்கிற கேள்வியோடு இப்படம் தொடங்குகிறது. இந்த ஆய்வில் 67 பங்கேற்பாளர்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருவர் நேர்காணல் நடத்துகிறார்கள்.
முதலில் தங்களுடைய நாடு, இனம், சமூகம் குறித்த பெருமிதத்தை ஒவ்வொரு பங்கேற்பாளரும் வெளிப்படுத்துகிறார். அவர்களில் தன்னுடைய தேசியக் கீதத்தைப் பாடுகிறார் ஒரு பெண், தன் இனத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார் இஸ்லாமிய இளைஞர் ஒருவர், தன் குடும்ப ஒளிப்பட ஆல்பத்தைப் பெருமையோடு காட்டுகிறார் ஒரு வெள்ளைக்கார இளம் பெண், இப்படி அத்தனை பேரும் தங்களுடைய இனமும் பூர்வீகமும்தான் தலை சிறந்தவை என்னும் உணர்வைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அதேபோல மற்ற இனங்களைச் சற்றே தாழ்வாகக் கருதுகிறார்கள், பிற நாடுகளின் மீது வெறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறார்கள். “உங்களுடைய மரபணுவில் வேறு இனங்களின் கலப்பு இருக்க வாய்ப்பு உள்ளதா?” என்னும் கேள்விக்குப் பெரும்பாலோர் தங்களுடைய இனம் கலப்படமற்றது என உறுதியாகச் சொல்கிறார்கள்.
பாகுபாட்டைத் தகர்த்தெறிவோம்
இதனை அடுத்து, “உங்களுடைய மரபணுவுக்குள்ளே ஒரு பயணம் போகலாமா?” எனக் கேட்டு மரபணுச் சோதனைக்காக ஒரு குப்பியில் எச்சிலை உமிழச் சொல்கிறார்கள். இரண்டு வாரம் கழித்து மரபணு சோதனைக்குத் தங்களை உள்ளாக்கிக் கொண்டவர்கள், மீண்டும் அதே அறைக்கு வருகிறார்கள். ஒவ்வொருவரிடமும் அவர்களுடைய டிஎன்ஏ ஆராய்ச்சியின் முடிவு ‘யுவர் டிஎன்ஏ வேர்ல்ட் மேப்’ (Your DNA World Map) என அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் தரப்படுகிறது. அதைத் திறந்து பார்த்ததும் அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி. ஒவ்வொருவரின் மரபணுவிலும் உலகின் பல இனங்களின் கூறுகள் காணப்படுகின்றன.
எந்த இனத்தவராக இருந்தாலும் நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் ஏதோ விதத்தில் தொடர்புடையவர்கள் என்கிறது இந்த ஆய்வு. அறிவியல்படி தனி இனத்தைச் சேர்ந்தவர்கள் யாருமில்லை! மனிதர்கள் அனைவரும் நெருங்கிய உறவு உடையவர்கள் என்பதையும் புரியவைக்கிறது.
இனப் பாகுபாடு என்பது சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதற்காகச் செயற்கையாகப் புனையப்பட்டது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. சாதி, மத, இனப் பாகுபாடுகளைத் தகர்க்கும் இத்தகைய அறிவியல் ஆய்வுகள் நிச்சயம் சமுதாய விடுதலைக்கு வழிகோலும்.
குறும்படத்தைக் காண : > https://goo.gl/1vFZca
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT