Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM
"சிங்கத்துக் கிட்டப் பாலு பச்சை கலர் கூலிங் கிளாஸ் கொடுத்தான். அது அந்தக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு கறுப்பு கலர் தொப்பியை வாங்குது. அந்தத் தொப்பி அதுக்கு என்ன கலர்ல தெரியும்?"
பனிரெண்டு வயது நிஷாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டதும், பட்டென்று பதில் வந்தது.
"டார்க் க்ரீன்"
நிஷாவின் தோழி நிர்மலா சொன்ன பதில் வேறு. அவள் பதிலுக்குக் கேள்வி கேட்டாள்.
"சிங்கம் கூலிங் கிளாஸ் போடுமா? போட்டாலும் அதற்குக் கலர் டிஃபரன்ஸ் தெரியுமா? பாலு எப்படிச் சிங்கத்துக் கிட்டப் போனான்?"
நிஷா, நிர்மலா இருவரில் யார் சொன்னது சரி? கேட்ட கேள்விக்குப் பதில் சொன்ன நிஷாவா? எதிர்க் கேள்வி கேட்ட நிர்மலாவா?
இதில் சரி, தவறு என்று எதுவும் கிடையாது. இரண்டும் இரண்டு அணுகுமுறைகள். நிஷாவிடம் கற்பனைத் திறன் அதிகம். ஒரு சூழலை அனுமானித்துக்கொள்ள வேண்டியிருந்தால், அதில் முழுமையாக மூழ்கிவிடுவது அவள் இயல்பு. நிர்மலா தர்க்க ரீதியாக யோசிக்கிறாள். கேள்வி கேட்டதும் அந்தக் கேள்வியின் அடிப்படையை ஆராயத் தொடங்குகிறாள்.
நிர்மலாவின் அணுகுமுறை தர்க்க ரீதியானது. கிடைத்த தகவல்களை அலசிப் பார்ப்பது, அதன் அடிப்படையில் முடிவுக்கு வருவது. இதுவே அந்த அணுகுமுறை.
தர்க்க ரீதியாக அலசும் திறமை
தகவல்களை அலசும் திறன், தர்க்கப்பூர்வமாக யோசித்தல், திட்டமிடுதல், அலசுதல், ஏன் - எதற்கு - எப்படி என்ற கேள்விகளை எழுப்பிக்கொள்ளுதல். இவற்றின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருதல். இவை எல்லாமே தர்க்க ரீதியாக அலசும் திறனை அடிப்படையாகக்கொண்டவை.
தர்க்க ரீதியான சிந்தனை நமது வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் அடிப்படையாக உள்ளது. ஒரு பிரச்சினையின் அடிப்படையைப் புரிந்துகொள்ளுவது, அதன் பல்வேறு தன்மைகளுக்கு இடையே இருக்கும் தொடர்பை அறிவது, தீர்வுகளை அடையாளம் காண்பது ஆகிய அனைத்துமே தர்க்க அறிவைப் பயன்படுத்தி அலசும் திறனை அடிப்படையாகக்கொண்டவை.
பல்வேறு புள்ளிவிவரங்களிலிருந்து தகவல்களைச் சலித்து எடுப்பது, அந்தத் தகவல்களிலிருந்து பல்வேறு போக்குகளையும் அறிவது, அவற்றிலிருந்து சில முடிவுகளுக்கு வருவது - இவையும் தர்க்க ரீதியாக அலசும் திறமையின் விளைவுதான்.
இது கணிதம் மற்றும் அறிவியலுடன் பெரிதும் தொடர்புடையது. ஒருவர் சிக்கலான கணக்குகளைப் போடுகிறார். இன்னொருவர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஒரு சீப்பை வைத்துக்கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களைப் பற்றிய சில முடிவுகளைக் கண்டுபிடித்துச் சொல்கிறார். இருவருமே தர்க்க அறிவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
எல்லோரிடமும் இந்தத் திறமை ஓரளவு இருக்கத்தான் செய்கிறது. சிலரிடம் அதிகமாக இருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.
இந்தத் திறமைக்கான தொழில்கள்
ஆய்வினை அடிப்படையாகக்கொண்ட அனைத்துத் தொழில்களுக்கும் இந்தத் திறமை தேவை. ஆய்வாளர் ஏதேனும் ஒரு கேள்வியிலிருந்து தன் பணியைத் தொடங்குகிறார். அது "டாக்டர்களைவிட இன்ஜினீயர்கள் அதிகமாக வேலை இல்லாமல் இருப்பது ஏன்?’’ என்ற கேள்வியாக இருக்கலாம். பல்வேறு விதமான சோதனைகள் மற்றும் கேள்விகளின் மூலம் ஆய்வாளர் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கிறார். இந்த விவரங்களை அலசி ஆராய்ந்து தனது கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கிறார்.
தொழில் துறை, பொருளியல், சமூக சேவை என எந்தத் துறையாக இருந்தாலும் சரி; அந்தத் துறையில் அதுவரையில் யாருக்கும் தெரியாத விவரங்களைத் தோண்டி எடுத்து வெளியே கொண்டுவருவதற்குத் தர்க்க ரீதியான அணுகுமுறைதான் உதவுகிறது.
கம்ப்யூட்டர் ப்ரோகிராமர் என்ன செய்கிறார்? சிறப்பான ப்ரோகிராம்களை மிகவும் குறைந்த செலவில் உருவாக்குவதற்குத் தர்க்க அறிவையே பெருமளவில் சார்ந்திருக்கிறார். கம்ப்யூட்டர் ஒரு இயந்திரம். அதற்குத் தானாகவே செயல்படத் தெரியாது. ஒரு விதமான தர்க்கத்தை அது புரிந்துகொள்ளும். தனது வாடிக்கையாளரின் தேவையைக் கம்ப்யூட்டருக்குப் புரியும் வகையில் வடிவமைப்பவரே சிறந்த ப்ரோகிராமர்.
ஒரு விளம்பர இயக்கம் எப்படித் திட்டமிடப்படுகிறது?
சந்தையில் எவ்வளவோ விதமான பிஸ்கெட்கள் இருக்கின்றன. இதில் இன்னொரு பிஸ்கெட் நுழைய இடம் இருக்கிறதா?
எல்லா பிஸ்கெட்களும் இனிப்பாகவே இருக்கின்றன. ஏன் இனிப்பும் கரிப்பும் கலந்த பிஸ்கெட்களை நாம் தயாரிக்கக் கூடாது? - இது தர்க்க ரீதியான கேள்வி. இதன் அடிப்படையில்தான் 50-50 போன்ற பிஸ்கெட்கள் வந்தன.
பிஸ்கெட் சாப்பிட்டால் பசிக்காது என்ற கருத்து உள்ளது. நாம் ஏன் ஜீரண சக்தியைத் தூண்டும் பிஸ்கெட் தயாரிக்கக் கூடாது? - இந்தக் கேள்வியின் அடிப்படையில்தான் டைஜஸ்டிவ் பிஸ்கெட்கள் சந்தையில் படையெடுத்தன.
கேள்வி பிறந்தால் தீர்வும் பிறக்கும்
ஜீன்ஸ் பேன்ட்டில் புதிய டிசைன் ஒன்றை ஒரு நிறுவனம் உருவாக்குகிறது. அதை எப்படி விற்பது? யார் அதை விரும்புவார்? சிறுவர்களா? டீன் - ஏஜ் வயதினரா? கல்லூரி மாணவர்களா? பெரியவர்களா?
இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை வைத்துக்கொண்டு ஒரு நிறுவனம் தனது விளம்பரம், விநியோகம், விலை ஆகியவற்றைத் தீர்மானிக்க முடியும்.
பொறியியல், புள்ளிவிவரவியல், தூய அறிவியல், நிர்வாகம், ஆய்வுப் பணிகள், வங்கித் துறை, செயலாளர் பணி எனப் பல துறைகள் இந்தத் திறமைக்கு வேலை தரக் காத்திருக்கின்றன.
நிதித் துறையிலும் இது தேவை. எவ்வளவு பணம் வருகிறது? எப்படி வருகிறது? எப்படிச் செலவாகிறது? இப்படியாகத் துருவி துருவித் தகவல்களைத் திரட்டுவது. பிறகு அந்தத் தகவல்களை அலசி ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டறிவது. இதுபோன்ற பணிகள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேவைப்படுகின்றன.
துப்பறியும் துறையும் இப்படித்தான். தகவல்களைத் திரட்டுதல், அவற்றை அலசி ஆராய்தல். இதுதான் முக்கியம். இதன் மூலம் குற்றங்களைத் தடுக்கலாம். நடந்த குற்றங்களைக் கண்டுபிடிக்கலாம்.
நீங்கள் எப்படிப்பட்டவர்? திட்டமிடுதல், அலசுதல், தகவல்களை வைத்துக்கொண்டு துருவி ஆராய்தல் ஆகியவற்றில் உங்களுக்கு விருப்பமும் திறமையும் உள்ளதா? மேலே கூறிய துறைகளில் உங்களுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT