Published : 26 Jul 2016 10:07 AM
Last Updated : 26 Jul 2016 10:07 AM
பிறந்த நாளில் நண்பர்களோடும் உறவினர்களோடும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாகக் குதூகலிக்கும் சிறுவர்களைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், தன்னுடைய 13-வது பிறந்த நாளன்று மீனவர்களின் சிக்கல்களுக்குத் தீர்வுகாண ஆசைப்பட்டார் அத்வே ரமேஷ். அதே நேரத்தில் கூகுள் நிறுவனம் சுற்றுச்சூழல், சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பவர்களுக்கு விருது கொடுத்து ஊக்குவிப்பதையும் இணையதளத்தில் பார்த்தார்.
இதனை அடுத்து, செயலியை (Apps) உருவாக்கும் தொழில்நுட்பத்தை இணையம் மூலமாகவே பயின்றார். தற்போது அவருடைய 14-வது வயதில் மீனவர்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் (Fishermen Lifeline Terminal-FELT) கருவியை உருவாக்கி கூகுள் சமுதாய விருதை (Google Community Award) வென்றிருக்கிறார்.
படிப்புக்கு அர்த்தம் வேண்டாமா?
சென்னை கோபாலபுரம் நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் 10-ம் வகுப்பு படிக்கும் அத்வே ரமேஷ் இன்று இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசிய கண்டத்துக்கே பெருமை சேர்த்திருக்கிறார். கூகுள் நிறுவனம் நடத்திய ’கூகுள் சயன்ஸ் ஃபேர் 2016’ போட்டியில் பங்குபெற்ற 107 நாடுகளில் ஆசியாவுக்கான விருதை வென்றிருக்கும் ஒரே நபர் அத்வே ரமேஷ்தான்.
ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீனவர் பாதுகாப்புக்காக அவர் உருவாக்கியிருக்கும் திட்டத்துக்கு 1,000 அமெரிக்க டாலர்களும் ‘சயன்டிஃபிக் அமெரிக்கா’வின் ஒரு வருடச் சிறப்புப் பயிற்சியும் விருதாக வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்து கூகுள் நிறுவனம் வழங்கும் 50 ஆயிரம் டாலர் கல்வி உதவித்தொகைக்கும் உலகளவில் தேர்வுசெய்யப்பட்டுள்ள 20 பேரில் அவரும் ஒருவர். “ராமேசுவர மீனவர்கள் கடலில் எல்லையைக் கடந்துவிட்டதால் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டார்கள் என்கிற செய்தியைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய படிப்பு மூலமாக இதற்கு ஏதேனும் செய்ய முடியாதா என யோசித்தபோது இஸ்ரோவின் இந்தியன் ரீஜினல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (Indian Reginal Navigation Satellite System) பற்றிப் படித்தேன்.
அது சிறப்பாக இயங்கியதால் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்ஃபோனில் பயன்படுத்தி மீனவர்களின் கடல் பாதையைக் கண்டறியும் திட்டத்தை வடிவமைத்தேன். இப்போது கருத்தளவில் மட்டுமே இது உள்ளது. விரைவில் ஒரு கருவியாக அதை உருமாற்றுவேன். அதைக் கொண்டு கடல் எல்லைப் பிரச்சினை காரணமாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்” என்கிறார் அத்வே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT