Published : 18 Apr 2017 11:22 AM
Last Updated : 18 Apr 2017 11:22 AM

திறக்கட்டும் கற்றலின் புதிய கதவு

கற்றலின் முழுமையான இலக்குகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, குறிப்பிட்ட எல்லைக்குள் அடைபட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கும் வகையில் இன்றைய மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இதனால், தமக்குள் எழும் ஆயிரம் சந்தேகங்களுக்கு விடை கிடைக்காமலேயே, விடைகளைத் தேடாமலேயே நமது மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். வேலை கிடைத்தவர் களிலும் பலர் படிப்புக்குச் சம்பந்தமில்லாத பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தூண்டுதல் இருந்துவிட்டால்

கல்வி என்பது தொழில், ஆராய்ச்சி, பண்பாடு ஆகியவற்றை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும். ஆனால், பட்டம் பெறுவதே இலக்காகிப் போனதால் புதியவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் படைப்பாற்றல் தொடர்பான பரந்த களமும் சுருங்கிப் போயிருக்கிறது. இத்தகைய போக்கினால்தான் மிகச் சில துறைகளைத் தவிர ஆராய்ச்சி சார்ந்த எண்ணற்ற படிப்புகள் தேடுவார் அற்றுக் கிடக்கின்றன.

“மற்றவர்கள் தங்களைப் பாராட்ட வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும், தான் மிகவும் கெட்டிக்காரர் என்று அங்கீகரிக்க வேண்டும் என மாணவர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்தத் தூண்டுதல் இருந்து விட்டால் மாணவர்கள் எதையும் சாதிப்பார்கள். புதிதாக ஒரு பொருளை உருவாக்கும்போதும், ஆராய்ச்சியில் ஈடுபடும்போதும் அதை வீடியோ எடுத்து அவர்களுக்கே அதைப் போட்டுக் காட்டுகிறோம். இதன் மூலம் அந்த மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்பட்டு அடுத்த கட்டத்துக்குப் போகிறார்கள்.

மற்ற மாணவர்கள் தாங்களும் அப்படிச் செயல்பட முடியுமா என்று முன்னுக்கு வருகிறார்கள். இப்படித்தான் நமது மாணவர்களுக்கான கல்வியை மெருகூட்ட வேண்டும்” என்கிறார் பள்ளி மாணவர்களை செயல்முறை அறிவியலுடன் பட்டை தீட்டிக்கொண்டிருக்கும் ‘உடுமலைப்பேட்டை கலிலியோ அறிவியல் கழகம்’ ஒருங்கிணைப் பாளர் ஆசிரியர் ஜி.கண்ணபிரான்.

நான்கு சுவருக் குள் இருந்தால் மாணவர்களுக்கு அறிவுத் தூண்டலும் கேள்வி கேட்கும் மனப்பான்மையும் வளராது. இதற்காகத்தான் இப்போது நேரடி களப்பயிற்சிகள் ஊக்குவிக்கப் படுகின்றன. இது கற்றலின் பல புதிய வழிமுறைகளுக்கான கதவுகளை திறக்கும். படைப்பாற்றலின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டும். இதற்கு முதல் கட்டமாக, உயர் கல்வியில் ஆராய்ச்சிகளுடன் கூடிய மற்ற படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதை பிளஸ் டூ படிக்கும்போதே மாணவர்களுக்குத் தெளிவாகப் புரியவைக்க வேண்டும்.

பயன் பெறுங்கள்!

மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ உள்ளிட்ட அமைப்புகள் இளம் விஞ்ஞானிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன. ஆர்வமுள்ள மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையுடன்கூடிய ஆராய்ச்சிப் படிப்புகளைத் தருவதுடன் படிப்பை முடித்ததும் மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும் உறுதிப்படுத்துகின்றன. அவற்றைத் தேடிப் பயன் பெற வேண்டிய நேரம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x