Last Updated : 24 Nov, 2014 11:19 AM

 

Published : 24 Nov 2014 11:19 AM
Last Updated : 24 Nov 2014 11:19 AM

மிகப் பெரிய்ய்ய்……………ய முதன்மை எண்

ஒரு எண் 1ஆலும் அதே எண்ணாலும் மீதியில்லாமல் வகுபட்டால் அந்த எண் முதன்மை எண் அல்லது பகா எண் எனப்படுகிறது. அப்படிப்பட்ட சில முதன்மை எண்களாக 2, 3, 5, 7, 11, 13, 17 ,19 ஆகியவை உள்ளன. அது சரி! ஆகப்பெரிய முதன்மை எண் எது? அதைக் கண்டுபிடிப்பது கணித விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய விளையாட்டு.

எண்களின் பிரபஞ்சம்

எண்களின் உலகமும் ஒரு எல்லையில்லாத பிரபஞ்சம்தான். மிகப் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பது என்பது எல்லையில்லாத பிரபஞ்சத்தின் எல்லையைக் காண முயலுகிற மணலைக் கயிறாகத் திரிக்கும் விஞ்ஞானத் துணிச்சல்தான்.

இப்படிப்பட்ட முதன்மை எண்களை கண்டுபிடிப்பதற்காக கிரேட் இன்டர்நெட் மெர்சேன் பிரைம் செர்ச் (Great Internet Mersenne Prime Search (GIMPS) என்ற கணினி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 1996-ல், ஜோர்ஜ் வோல்ட்மன் என்பவர் இதை உருவாக்கினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் சமீபத்தில் புதிதாக ஒரு முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100 என்ற எண்ணில் மூன்று இலக்கங்கள் இருப்பது போல, புதிதாக கண்டுபிக்கப்பட்ட இந்த மா…பெரும் முதன்மை எண்ணில் 1 கோடியே 74 லட்சத்து 25ஆயிரத்து 170 இலக்கங்கள் உள்ளன.

ஆயிரம் கணினிகள்

இப்படிப்பட்ட முதன்மை எண்கள் மேர்சேன் முதன்மை எண்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எண்ணின் கணிதக் குறியீடு 2p 1 என்று இருக்கும். அமெரிக்காவின் மத்திய மிசூரிப் பல்கலைக்கழகப் பேராசிரியரான கேர்ட்டிஸ் கூப்பர், இதுவரை அறியப்பட்டவற்றில் மிகப்பெரிய முதன்மை எண்ணான இதனை 2013 ஜனவரி 25-ல் கண்டுபிடித்தார்.

GIMPS கணினி வேலைத்திட்டத்துக்காக பிரைம் 95 எனும் கணினி மென்பொருள் தயாரிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினிகளில் இது செயற்படுத்தப்பட்டது. ஜனவரி 25 அன்று இந்த முதன்மை எண், பல்கலைக்கழகக் கணினி ஒன்றிலிருந்து GIMPS சேவையகக் கணினிக்கு அறிவிக்கப்பட்டது.இதனைக் கண்டுபிடிப்பதற்காக இந்தக் கணினிகள் 39 நாட்கள் தொடர்ந்து ஓய்வில்லாமல் செயல்பட்டன.

இதுவரை

இந்த எண் மூன்று தனித்தனி சரிபார்ப்புகள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சக்திவாய்ந்த கணினி வன்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ஏழு நாட்கள் வரை இவை தொடர்ந்து இயங்கின. கூப்பர் இதற்கு முன் ஸ்டீபன் பூன் என்பவரோடு இணைந்து வேறு இரண்டு மேர்சேன் முதன்மை எண்களைக் கண்டுபிடித்துள்ளார். டிசம்பர் 2005-லும், செப்டம்பர் 2006-லும் அவை கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 48 மேர்சேன் முதன்மை எண்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x