Published : 06 Jan 2014 12:13 PM
Last Updated : 06 Jan 2014 12:13 PM
இன்றைக்கு நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலண்டரின் வயசு நானூற்றி சொச்சம் வருஷங்கள்தான். இதன் பெயர் கிரிகோரியன் காலண்டர், அதை உருவாக்கக் காரணமாக இருந்தவர் போப் கிரிகோரி.
அதற்கு முன்னர் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர் உருவாக்கிய காலண்டரே பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அது கி.மு. 45இல் வெளியிடப்பட்டது. இரண்டு காலண்டர்களிலும் ஆண்டு அளவு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருந்தது. ஜூலியன் காலண்டர் கச்சிதமாக இல்லாமல் இருந்தாலும், நீண்ட காலம் பிரபலமாக இருந்தது.
ஐரோப்பாவில் அந்தக் காலத்தில் பாதிரியார்கள் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். ஈஸ்டர் எப்போது வருகிறது என்பதைத் தவிர்த்து, வேறு எதற்காகவும் நாட்களைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை. மேலும் மத்தியக் காலத்தில் நேரத்தைக் கணக்கிட்டுப் பார்ப்பது கடவுளின் விவகாரம் என்றும், அதில் தலையிடுவது தவறு என்றும் நம்பப்பட்டது. பிறகு நேரத்தைக் கணக்கிடுவது சாதாரண இயந்திரவியல் கணக்குதான் என்றும், அதனால் கடவுளைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நம்பிக்கை மாறியது.
ஜூலியன் காலண்டர்படி மார்ச் 21தான் சம இரவுபகல் நாள் (equinox). ஆனால், அது ஒவ்வோர் ஆண்டும் வழக்கமான வசந்தகாலத்தைவிட்டுத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததால், அது சரியான நாளுக்குத்தான் வருகிறதா என்று ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இந்தப் பின்னணியில்தான் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, காலண்டரில் மாற்றம் செய்யப் பட்டது. 1572இல் புதிய போப்பாக ஆன கிரிகோரி 13, காலண்டரைப் புதுப்பிக்கக் கவுன்சில் ஆப் டிரென்ட் என்ற குழுவை உருவாக்கினார். 1582இல் அந்தக் குழு பரிந்துரைத்த காலண்டர் மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்டோபர் 4-ம் தேதி, அக்டோபர் 15-ஆம் தேதியாக மாற்றப்பட்டது. அதன்படி சம இரவுபகல் நாள் மார்ச் 21இல் வந்தது. ஈஸ்டரை முடிவு செய்வதற்குத் தனி அட்ட வணையும் வெளியிடப்பட்டது.
காலண்டரில் ஏற்பட்ட பிழையை அறிவியல் தர்க் கத்தின் அடிப்படையில் கத்தோலிக்கத் திருச்சபை மாற்றினாலும், உடனடியாக அது ஐரோப்பா முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 1752இல்தான் கிரிகோரியன் காலண்டரை இங்கிலாந்து ஏற்றுக்கொண்டது. அதற்குக் காரணம், அந்நாட்டு ராஜ வம்சம் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தது என்பதுதான். நம் நாடு இங்கிலாந்தின் காலனியாக இருந்ததால், நம்மிடமும் கிரிகோரியன் காலண்டர் பரவலாகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT