Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊழியர்கள் அடங்கிய போராட்டக்குழு சார்பில் பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநருக்கு புகார் அனுப்பப் பட்டுள்ளது. புகார் மனுவின் விவரம் வருமாறு:
போலியோ நோயால் இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பி.ஜெ.ஈஸ்வரி தனது ஆராய்ச்சிகளை பல்கலைக்கழக விடுதியில் இருந்தபடி மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.
ஈஸ்வரி மதுரை பல்கலைக்கழகத் தில் பிஎச்.டி. பட்டம் பெற்ற போதிலும் அவரது உடல் ஊனத்தை கருத்தில்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவர் தனது பிந்தைய ஆராய்ச்சி படிப்பை (போஸ்ட் டாக்டரேட்) இதே பல்கலைக்கழகத்தில் தொடர யு.ஜி.சி. விசேஷ அனுமதி வழங்கிய பின்னரும் அவர் விடுதியில் தங்கியிருந்து ஆய்வுப் பணியை தொடர அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்து பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து ஆய்வைத் தொடர அனுமதி அளிக்க வேண்டும்.
பல்கலைக்கழக மாணவர்களின் நலனுக்காக போராடினார் என்ற காரணத்துக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட வேதியியல் துறை யு.ஜி.சி. ஆய்வு மாணவர் சி.பாண்டியராஜன் தொடர்ந்து ஆய்வுப் பணியை தொடர அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், உயிரி தொழில்நுட்பத் துறை மூத்த பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி, பேராசிரியர் எஸ்.ரவிக்குமார், ஊழியர் எம்.பார்த்தசாரதி ஆகியோர் மீதான நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டும்.
கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில் எம்.பில்., பிஎச்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கு வதற்காக பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) ரூ.10 கோடி அனுமதித்தது. இன்னும் அந்த உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. உடனடியாக அந்த நிதியை வழங்க வேண்டும்.
சுயநிதி படிப்புகள் உள்பட அனைத்து படிப்புகளிலும் எஸ்.சி.,
எஸ்.டி. மாணவர்களுக்கு கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற அரசாணை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதுநாள் வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மேலும், பிஎச்.டி. மாணவர்களுக்கான யு.ஜி.சி. உதவித்தொகை (ஜெ.ஆர்.எப்., எஸ்.ஆர்.எப்.) கடந்த 10 மாதங்களாக யாருக்கும் வழங்கவில்லை. இதனால், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யவே அவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், பட்ட மேற்படிப்பு படிக்கும் பி.சி., எம்.பி.சி. மாணவர்களுக்கும் அரசு கல்வி உதவித்தொகை ஒழுங்காக அளிக்கப்படுவது கிடையாது. எனவே, மாணவ-மாணவிகளுக்கு எவ்வித காலதாமதம் இல்லாமல் கல்வி மற்றும் ஆராய்ச்சி உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT