Published : 24 Sep 2013 04:57 PM
Last Updated : 24 Sep 2013 04:57 PM

அரசு கணினி தேர்வு பாடத்திட்டம் மாறுகிறது

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, அரசு சான்றிதழ் கணினி தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. கையடக்க தகவல்தொடர்பு சாதனங்களான ஐ-பேட், ஐ-பாட், ஐ-போன் குறித்த தகவல்களையும் சேர்க்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

அரசு கணினி தேர்வு

முன்பு பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்புடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகிய இதர தொழில்நுட்ப தகுதிகளையும் வளர்த்துக்கொள்வது வழக்கம். பின்னர் காலப்போக்கில் இந்த தகுதிப் பட்டியலில் கணினி பயிற்சியும் இடம்பிடித்துவிட்டது. தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் இளநிலை, முதுநிலை தேர்வுகளை (ஜூனியர், சீனியர் கிரேடு) நடத்தி சான்றிதழ் வழங்குகிறது.

அரசுத்துறையில், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் சேர வேண்டுமானால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இளநிலை, முதுநிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்று சான்றிதழ் வைத்திருந்தால்தான் தேர்வுக்கே விண்ணப்பிக்க முடியும். தற்போது அரசு துறைகள் அனைத்தும் கணினிமயமாகி வருகின்றன. இதை கருத்தில் கொண்டு தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (சர்டிபிகேட் கோர்ஸ் ஆன் ஆபீஸ் ஆட்டோமேசன்) தேர்ச்சி பெறுவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது.

அரசு வேலைக்கு கட்டாயம்

இந்த தகுதி இல்லாமல், ஏற்கனவே அரசு பணியில் சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளில் கணினி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் புதிதாக பணியில் சேருவோர் இத்தகுதி இல்லாமல் இருந்தால் தகுதிகாண் பருவத்துக்குள் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சான்றிதழ் கணினி தேர்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதில் கருத்தியல் தேர்வும் செய்முறைத்தேர்வும் இடம்பெற்றிருக்கும். கடந்த ஜூன் மாதம் நடந்த கணினி தேர்வில் 2,566 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 2,426 பேர் (94.54 சதவீதம்) தேர்ச்சி பெற்றார்கள்.

பாடத்திட்டம் மாற்றம்

தற்போது கணினி தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எம்.எஸ். வேர்டு, எம்.எஸ். எக்செல், எம்.எஸ். பவர்பாயின்ட், எம்.எஸ்.அக்சஸ், இண்டர்நெட் மற்றும் எச்.டி.எம்.எல். உள்ளிட்ட பாடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்றைய தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கேற்ப, சான்றிதழ் கணினி தேர்வு பாடத்திட்டத்தை மாற்றியமைக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

தற்போது தனியார் நிறுவனங்களில் மட்டுமல்லாமல், அரசு துறைகளிலும் உயர் அதிகாரிகள் கையடக்க ஐ-பேட், ஐ-பாட், ஐ-போன், டேப்லெட் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். எனவே, அவர்களின் அலுவல் பணியில் முக்கிய பங்காற்றக்கூடிய இளநிலை உதவியாளர்களும், தட்டச்சர்களும், கணினி இயக்குநர்களும் அவை குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்று அரசு கருதுகிறது.

ஐ.பேட், ஐ-போன்

எனவே, கணினி தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும்போது ஐ.பேட், ஐ.பாட், ஐ-போன் தொடர்பான தகவல்களையும் செயல்முறை பயிற்சியுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x