Published : 18 Sep 2013 10:56 AM
Last Updated : 18 Sep 2013 10:56 AM
ஒரு குழந்தை கருவில் இருந்து அனைத்தையும் தாய் மொழியில் உணர்கிறது. அடிப்படைக் கல்வி, தாய் மொழியில் இருந்தால் அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்கள், உளவியலாளர்கள், கல்வியாளர்கள் சொல்லும் கருத்து. அப்படி ஒரு கற்பித்தலை குழந்தைகளுக்கு இலவசமாக அளித்துக்கொண்டிருக்கிறது கோபிச்செட்டிப்பாளையத்தில் இயங்கும் தாய்த் தமிழ்ப் பள்ளி!
மணி அடித்துவிட்டது, இனி பள்ளிக்குச் செல்வோம் வாருங்கள்...
செடியை காட்டி குழந்தைகளிடம் ஆசிரியர் பேசிக்கொண்டிருக்க... குழந்தைகளோ அவரை வாய் நிறைய ‘அத்தை... அத்தை’ என்று தித்தித்துக்கொண்டிருந்தார்கள். பள்ளியின் நிறுவனர் குமணனிடம் “டீச்சர், மிஸ், மேம் என்றுதானே அழைப்பார்கள்” என்றோம்.
“பெரும்பாலான குழந்தைகள் முதல் முதலாக உச்சரிக்கும் வார்த்தை ‘த்தை’. தமிழ்ச் சமூகக் குடும்பங்களில் அத்தையின் பங்கு அளப்பரியது.” என்றார். தாய்த் தமிழ்ப் பள்ளியில் ப்ரி கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. இல்லை. மாறாக அரும்பு, மொட்டு, மலர் என மணக்கின்றன வகுப்பறைகள். தொடர்ந்து பேசினார் குமணன்.
அரும்பு
“அரும்பு வகுப்பில் படிப்பு கிடையாது. குழந்தைகளுக்கு நடுவே தரையில் அமர்ந்து ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். பல் துலக்குவது, கை கால்கள், முகம் அலம்புவது, சிந்தாமல் உணவு உண்பது பற்றி கற்றுத்தருகிறோம், அப்பா, அம்மா, அத்தை, சித்தி, சித்தப்பா, மாமா, தாத்தா ஆகிய வார்த்தைகளை உச்சரிக்க கற்றுக்கொடுப்பதுடன், அந்த உறவு முறைக்கான அர்த்தம், உன்னதங்களையும் கற்றுத்தருவோம். கூட்டுக் குடும்பங்கள், உறவு முறைகள் தொலைந்துப்போன நவீன யுகத்தில் இவை எல்லாம் மீட்டெடுக்க வேண்டிய பொக்கிஷங்கள்.
பள்ளிக்கு வரும் வழியில் தினமும் ஐந்து விஷயங்களைப் பார்த்துவிட்டு வரச் சொல்வோம். மாடு பார்த்தேன்; மரம் பார்த்தேன் என்று குழந்தைகள் சொல்வார்கள். அவர்கள் பார்த்ததை பற்றி விளக்கம் அளிப்போம்.
மொட்டு
இரண்டாம் ஆண்டு, படிப்பு. முதலில் இஷ்டத்துக்கு கிறுக்கவிடுவோம். படிப்படியாக புள்ளி, சாய்கோடு, நேர் கோடு, படுக்கை கோடு, நெளி கோடு கற்றுத்தருவோம். அப்புறம் ‘ட’. அதில் இன்னொரு நேர்கோடு போட்டு ‘ப’. இன்னொரு ‘ப’ அதனுடன் இணைத்தால் ‘ய’. இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் எளிமையான சூத்திரம் உண்டு. இப்படித்தான் எழுத்துப் பயிற்சி ஆரம்பமாகும்.
இங்கு புலன் திறன் பயிற்சி உண்டு. கை வேலை. மணலையோ தானியத்தையோ ஒரு டப்பாவில் இருந்து அடுத்தடுத்த டப்பாவுக்குள் போட கற்றுக்கொடுப்போம். அடுத்து கண் வேலை. ஒவ்வொருவரும் ஐந்து பொருட்களைப் பார்க்க வேண்டும். பின்பு, அதன் பெயர்களை ஐந்து முறை உச்சரிக்க வேண்டும். நுகர்வு பயிற்சியில் விளை பொருட்கள், நறுமணப் பொருட்களை நுகர வைத்து அந்தந்தப் பொருட்களைப் பற்றி கற்றுத் தருகிறோம். உணர்வு திறன் பயிற்சியில் தொடுதல் குறித்து விளக்குவோம். இதன் ஒரு பகுதியாக பாலியல் ரீதியான எதிர்மறை தொடுதல் குறித்த புரிதலையும் கற்பிக்கிறோம். எங்கள் குழந்தைகள் மீது தவறான நோக்கத்துடன் யாரும் தொட முடியாது. சுவை உணர்வுப் பயிற்சியில் இனிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு என சுவைக்கச் செய்து விளக்கங்களையும் அளிக்கிறோம்.
மலர்
மூன்றாம் ஆண்டு, மலர். இந்த வகுப்பில் வழக்கமான பாடங்களுடன் இந்தியத் தேர்தல் முறை, ஓட்டுப் பெட்டியில் ஓட்டுப் போடுவது, விரலில் மை வைப்பது, வாக்குப் பதிவு எந்திரத்தில் ஓட்டுப் போடுவது ஆகியவற்றைக் கற்றுத் தருகிறோம். அதேபோல், ஒரு சந்தை எப்படி நடக்கிறது? ஒரு பொருளை எப்படி வாங்க வேண்டும்? அரை கிலோவை எப்படி அளக்க வேண்டும்? என்று கற்றுத்தருவதுடன் சில்லறை காசு, பணம் எண்ணுவதைக் கற்றுத் தருகிறோம். இந்த வகுப்பில் குறிஞ்சிப் பாட்டில் உள்ள 99 தமிழ்ப் பூக்கள், தமிழக மாவட்டங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், பன்னிரு ஆழ்வார்கள், 16 பேறுகள் உள்ளிட்ட அரிய, அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை எங்கள் குழந்தைகள் கற்று முடித்துவிடுவார்கள். எல்லாவற்றையும் விட எங்கள் பள்ளியில் வீட்டுப்பாடம் கிடையாது.
பிரபல பறை முழக்க கலைஞரான சமர்பா குமரனிடம் எங்கள் குழந்தைகள் பறை முழக்க நடனப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தின் திராவிடர் கழக மாநாடுகள், கல்லூரி விழாக்கள், விசேஷ நிகழ்ச்சிகளிலும் எங்கள் குழந்தைகளின் பறை நிகழ்வு மிகப் பிரபலம். இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளாக இப்பள்ளி வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்குகிறது. சில மாதங்களுக்கு முன்பே இடத்தின் உரிமையாளர் காலி செய்யும்படி கூறிவிட்டார். எங்களுக்கு அரசு இடம் ஒதுக்க வேண்டும் என தாய்த் தமிழ்ப் பள்ளிக்கான எதிர்பார்ப்பையும் சொல்லி முடித்தார் குமணன்.
இதே பாணியிலான இவர்களின் உயர் நிலைப்பள்ளி கோபி அருகில் உள்ள கொளப்பலூரில் இயங்குகிறது. அங்கும் முழுக்க முழுக்கத் தமிழ்தான்!
மழலையர் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தமிழிலேயே சாத்தியமாகும் என்பதை நிரூபிக்கிறது தாய்த் தமிழ்ப் பள்ளி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT