Last Updated : 20 Jan, 2014 12:00 AM

 

Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM

நந்தகுமார் தவிர்த்திருக்க வேண்டிய தவறுகள்

நந்தகுமார் படபடக்கும் இதயத்தோடு காத்திருக்கிறான்.

நேர்முகத் தேர்வில் அடுத்து உள்ளே செல்ல வேண்டியது அவனது முறை என்கிறார் ஊழியர். ‘‘இன்னும் ஒருத்தருக்கு அடுத்ததாக நான் வருகிறேனே’’ என்று வேண்டுகோள் வைக்கிறான் நந்தகுமார். தயக்கத்துக்குப் பின் அது ஏற்று கொள்ளப்படுகிறது.

இருபது நிமிடம் கழித்து அவன் பெயர் மீண்டும் அழைக்கப்பட, நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைகிறான். நான்கு தேர்வாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் நந்தகுமார் ‘‘குட் மார்னிங் சார்’’ என்று சொல்கிறான். நான்காவது முறையாக அதைச் சொல்லும்போது நான்கு பேருமே சிரித்துவிடுகிறார்கள். சங்கடத்துடன் நந்தகுமார் உட்கார்ந்து கொள்கிறான்.

‘‘உங்கள் சிறப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்கிறார் தேர்வாளர்களில் ஒருவர்.

‘‘தன்னம்பிக்கை’’ என்று சொல்கிறான் நந்தகுமார்.

‘‘அதை சத்தமாகச் சொல்லாமல், ஏன் இவ்வளவு மெதுவாகச் சொல்கிறீர்கள்?’’ என்கிறார் இரண்டாவது தேர்வாளர்.

உடனே சத்தமாக ‘‘தன்னம்பிக்கை’’ என்கிறான் நந்தகுமார்.

புன்னகைத்தபடியே மூன்றாவது தேர்வாளர் நந்தகுமாரைப் பார்த்து ‘‘உங்களுடைய வேறொரு பலத்தைச் சொல்ல முடியுமா?’’

‘‘ஹார்டு ஒர்க்’’ என்கிறான் நந்தகுமார்.

சட்டென நான்காவது தேர்வாளர் ‘‘So you hardly work. Am I right?’’ என்கிறார்.

ஆமாம் என்பது போல் நந்தகுமார் தலையசைக்க, தேர்வாளர்கள் அத்தனை பேரும் வாய்விட்டுச் சிரித்துவிடுகின்றனர். நந்தகுமார் காரணம் புரியாமல் பரிதாபமாக விழிக்க, முதல் தேர்வாளர் சற்று ஆறுதலாகப் பேசத் தொடங்குகிறார்.

‘‘எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால், தொடர்ந்து எங்கள் நிறுவனத்திலேயே இருப்பீர்களா? நாங்கள் ஒரு வருடத்துக்கு உங்களுக்கு விதவிதமான பயிற்சிகளைக் கொடுத்த பிறகு, நீங்கள் வேறு நிறுவனத்தில் சேர்ந்தால் எங்களுக்கு அதில் பலவித நஷ்டங்கள் ஏற்படும்’’ என்கிறார் இரண்டாவது தேர்வாளர்.

‘‘என் விஷயத்தில் அப்படி நடக்காது சார். உங்கள் நிறுவனத்தில் என்னை வேலைக்குச் சேர்த்துக்கொண்டால் தொடர்ந்து இதிலேயே பணிபுரிவேன்’’ என்கிறான் நந்தகுமார் அவசரமாக.

‘‘அப்படியானால் அடுத்து ஐந்து வருடங்களுக்கு எங்கள் நிறுவனத்திலேயே வேலை செய்வதாக ஓர் உத்தரவாதப் பத்திரத்தில் கையெழுத்திடுவீர்களா?’’ என்று நான்காவது தேர்வாளர் கேட்டவுடன், நந்தகுமார் தடுமாறுகிறான்.

‘‘அது அப்பாவைக் கேட்டுவிட்டுத்தான் சொல்லணும்’’ என்கிறான் நந்தகுமார்.

மூன்றாவது தேர்வாளர் அடுத்த கேள்வியை வீசுகிறார், ‘‘இப்போ ஒரு நிறுவன​த்திலே வேலை செய்துகிட்டிருக்​கீங்களே, நாங்க அதிகச் சம்பளம் தருகிறோம் என்பதற்காகவா உங்க வேலையை விடப்போறிங்க?’’

உடனடியான பதில் வருகிறது. நந்தகுமாரிடமிருந்து, ‘‘பணம் ஒரு பெரிய விஷயமில்லை சார். என் பாஸ் ரத்னவேலு ஒரு சாடிஸ்ட். எவ்வளவு வேலை செய்தாலும் திருப்தி அடையாதவர். அதனாலேதான் நான் வேறு வேலையைத் தேடுகிறேன்’’.

நான்கு தேர்வாளர்களும் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்ள, பேட்டி தொடர்கிறது.

நந்தகுமாரின் நேர்முகம் குறித்த ஓர் விமர்சனம் இதோ:

நந்தகுமார் செய்த முதல் தவறு அவனுடைய முறை வரும்போது உள்ளே செல்லாமல், அடுத்துச் செல்வதாக வேண்டுகோள் வைத்தது. அவன் போதிய பக்குவம் இல்லாதவன் என்றும், இன்னமும் பள்ளி மாணவனின் குணம் அவனைவிட்டு நீங்கவில்லை என்றும் தேர்வாளர்கள் கருத வாய்ப்பு உண்டு.

நான்கு தேர்வாளர்கள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ‘‘குட் மார்னிங் சார்’’ என்று சொல்ல வேண்டும் என்பதில்லை. நடுவில் இருப்பவரைப் பார்த்துப் புன்னகையுடன் ‘‘குட் மார்னிங் சார்’’ என்று கூறிவிட்டு, அப்படிக் கூறும்போதே அதே புன்னகையுடன் மீதிப் பேரையும் பார்த்துத் தலையசைக்கலாம்.

தான் ஒரு பள்ளி மாணவன் மனப்பாங்கிலிருந்து விலகவில்லை என்பதை அடுத்த சந்தர்ப்பத்திலும் நிரூபிக்கிறான் நந்தகுமார். ‘‘உன் சிறப்பு தன்னம்பிக்கை என்பதாக இருந்தால், அதை உரத்துச் சொல்ல வேண்டியதுதானே’ என்பதுபோல் விமர்சனம் எழுந்தபோது, ‘‘அப்படித்தான் சொல்லி ​இருக்கவேண்டும்’ என்பதுபோல் எதையாவது கொஞ்சம் குற்றஉணர்ச்சியுடன் அவன் ஒத்துக்கொண்டிருக்கலாம். மாறாக ஏதோ தவறைச் சரி செய்வது போல இரண்டாவது முறை உரத்துச் சொல்கிறான்.

‘‘Working hard’’ என்பதற்கும் ‘‘Hardly working’’ என்பதற்கும் நிறைய வித்யாசம் உண்டு. ‘‘I am working hard’’ என்றால் கடுமையாக உழைக்கிறேன் என்று பொருள். மாறாக ‘‘I am hardly working’’ என்றால் நான் கிட்டத்தட்ட வேலையே செய்வதில்லை என்று அர்த்தம். ஆகத் தன்னுடைய விடையினால் ‘‘தான் ஒரு கடுமையான உழைப்பாளி என்று சொல்வதற்குப் பதிலாக, தன்னால் முடிந்தவரை வேலை செய்வதைத் தவிர்க்கப் பார்ப்பேன் என்று கூறிவிடுகிறான் நந்தகுமார். அவன் தவறாகப் புரிந்துகொண்டுதான், இந்தப் பதிலைக் கூறுகிறான் என்பது நான்கு தேர்வாளர்களுக்கும் புரிகிறது. அவர்களில் யாரும் நந்தகுமாரை ‘வேலை பார்ப்பதைத் தவிர்ப்பவன்’ என்று நினைத்துவிடவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் அவன் கொஞ்சம் பலவீனமானவன் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்தப் பேச்சு அமைந்து விடுகிறது.

அதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்வதாக நந்தகுமார் கூறியதில் தவறு இல்லை. ஆனால், உத்தரவாதப் பத்திரம் குறித்து அவன் அவ்வளவு பதற்றம் காட்டியிருக்க வேண்டாம். வேலைக்குத் தேர்ந்தெடுத்த பிறரிடமும் இதுபோன்று பத்திரம் வாங்காமல் நந்தகுமாரிடம் மட்டும் அப்படி வாங்கிவிட மாட்டார்கள். எனவே, இதுகுறித்து பிறகு யோசிக்கலாம். அப்போதைக்கு இதற்கு அவன் ஒத்துக்கொள்வதாகக் கூறலாம்.

அல்லது மேலும் புத்திசாலித்தனமாக ‘‘எனக்கு உரிய வாய்ப்பையும், ஊதியத்தையும் உங்க நிறுவனத்திலே கொடுக்கப் போறீங்க. அப்படி இருக்கும்போது நான் வேறொரு நிறுவனத்திலே சேர வேண்டிய அவசியம் என்ன வந்துவிடும்?’’ என்று கூறலாம்.

‘‘சம்பளம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை’’ என்று நந்தகுமார் கூறுவதைத் தேர்வாளர்கள் ஏற்றுக்கொள்வது கஷ்டம். மாறாக ‘‘எனக்கு சம்பளத்தைவிட முக்கியமான வேறு சில விஷயங்கள் உண்டு’’ என்பதுபோல் அவன் கூறி இருக்கலாம்.

நந்தகுமார் செய்த மிகப் பெரிய தவறு, தான் இப்போது பணி செய்யும் நிறுவனத்தின் அதிகாரியைக் குறைகூறியது. அதுவும் ‘சாடிஸ்ட்’ (பிறரது சோகத்தில் இன்பம் காணும் குரூர மனம் படைத்தவர்) என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. தேர்வாளர்களாக வந்திருப்பவர்களும் உயர் அதிகாரிகளாகவே இருக்க வாய்ப்பு உண்டு. தனக்குச் சமமானவர்கள் விமர்சிக்கப்படுவதை அவர்கள் எவ்வளவு ​தூரம் விரும்புவார்கள் என்பது சந்தேகம். தவிர நந்தகுமார் பணியாற்றும் நிறுவனம், அவன் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக இருக்கக்கூடும்.

தவிர, நந்தகுமார் தன் ‘சாடிஸ்ட்’ மேலதிகாரியின் பெயரை வேறு தெளிவாகக் குறிப்பிடுகிறான். அந்த ரத்னவேலு என்பவர் தேர்வாளர்களில் ஒருவரின் நண்பராகக்கூட இருக்கலாம். அப்படி இருந்தால் புதிய வேலை அவனுக்குக் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்பதோடு, அவனது விமர்சனம் அந்த ரத்னவேலுவின் காதுகளையும் அடையக்கூடும். பொதுவாகவே நேர்முகத் தேர்வுகளில் தற்போதைய மற்றும் அதற்கு முன் பணியாற்றிய நிறுவனங்களைக் குறித்து எதிர்மறையாகப் பேசுவதைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x