Published : 20 Sep 2016 11:25 AM
Last Updated : 20 Sep 2016 11:25 AM
உனக்கு அறிவிருக்கா, மூளை இருக்கா என்று அடிக்கடி சிலரை ஏசுவதைத் தாண்டி, இன்னொரு விஷயமும் மூளையைப் பற்றிக் காலம்காலமாகப் பேசப்பட்டுவருகிறது. தன்னம்பிக்கைக் கட்டுரைகளாக இருந்தாலும் சரி, ஐ.ஏ.எஸ். படிக்கச் சொல்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அழுத்திச் சொல்லும் முக்கியமான அந்த விஷயம் - மூளையின் 10 சதவீதத்தை மட்டும்தான் நாம் பயன்படுத்துகிறோம். மூளையின் பெரும் பகுதியைப் பயன்படுத்தத் தவறி, நாம் வீணடிக்கிறோம் என்பதுதான்.
இது மிகப் பெரிய மூடநம்பிக்கை. இந்த மூடநம்பிக்கையின் தோற்றம் தெளிவாகத் தெரியவில்லை. தன்னம்பிக்கைக் கட்டுரைகளில் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு வடிவங்களில் `உங்கள் மூளையின் சக்தியை நீங்கள் உணரத் தவறிவிட்டீர்கள். வெறும் 10 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தும் நீங்கள், மிச்சம் 90 சதவீதத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தால், கூரையைப் பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும்' என்ற கணக்கில் எழுதியிருப்பார்கள். தன்னம்பிக்கைப் புத்தகங்களின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக, இந்த மூடநம்பிக்கை பரவலாகியிருக்கலாம். ஆனால், இதற்கு எந்த அறிவியல் பின்னணியும் கிடையாது. மூளை தொடர்பான எந்த ஆராய்ச்சியும் இந்த மூடநம்பிக்கையை ஆதரிக்கவில்லை.
நிஜத்தில் மூளையின் அனைத்துப் பகுதிகளும் சிறப்புத்திறன்களைப் பெற்றவையாகவே உள்ளன. அப்படி இருப்பதால்தான், நாம் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கவும், தொடர்ந்து வேலை செய்யவும் முடிகிறது. சொல்லப் போனால், மூளையில் பயன்படுத்தப்படாத பகுதி என்று எதுவுமே கிடையாது. செயல்படாத பகுதி என்று எதுவும் இல்லாத நிலையில், மூளையை முறையாகச் செயல்படுத்தினாலே, வாழ்க்கையில் முன்னேறலாம். அதை விட்டுவிட்டு, செயல்படாத பகுதியைத் தூண்டுகிறேன் என்று, போகாத ஊருக்கு வழி தேடுவது நிச்சயமாக வெட்டி வேலைதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT