Published : 30 Sep 2013 03:41 PM
Last Updated : 30 Sep 2013 03:41 PM
பெரியவனானதும் நீ யாராக ஆக விரும்புகிறாய்?
இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத சிறுவனோ சிறுமியோ இருந்திருக்க முடியாது. டாக்டர், இன்ஜினியர், ஓவியர், போலீஸ்காரர், ராணுவ வீரர், ஆசிரியர், சர்க்கஸ் ரிங் மாஸ்டர், நடனக்காரர், நடிகர் . . .
ஐந்து - ஆறு வயதில் அப்போது மனதுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் சொல்லலாம். சொல்பவர்களோ கேட்பவர்களோ அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை.
ஆனால் பதினைந்து வயதில் இந்தக் கேள்வி எழுந்தால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எளிதாகப் பதிலளித்துவிடவும் முடியாது. பதினேழு வயதில் இன்னும் கஷ்டம்.
இருபது வயதில்?
இருபது வயதில் இந்தக் கேள்வி எழுந்தால் சிக்கல்தான். அதற்குள் இந்தக் கேள்விக்கான விடையை ஒருவர் கண்டுபிடித்திருக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி தனது கல்லூரிப் படிப்பை அமைத்துக்கொண்டிருக்க வேண்டும்.
அப்படியானால் இந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதிலளிக்க வேண்டிய வயது எது?
“15 வயதிலேயே முடிவெடுப்பதுதான் நல்லது” என்று சென்னையைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் தா. நெடுஞ்செழியன் கூறுகிறார். பிளஸ்டூவிற்குள் நுழைவதற்கு முன்பு முடிவெடுத்தாக வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
“பத்தாம் வகுப்புவரை எல்லாப் பாடங்களையும் பொதுவாகப் படித்துவந்த மாணவர்கள் அதன் பிறகு குறிப்பான ஒரு துறையில் மட்டும் படிக்கிறார்கள். எனவே எந்தத் துறை தன்னுடைய துறை என்னும் விழிப்புணர்வு அவர்களுக்கு பத்தாம் வகுப்பு முடியும்போதே இருக்க வேண்டும்” என்று நெடுஞ்செழியன் விளக்குகிறார்.
பத்தாவதுவரை கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களை ஒன்றாகப் படிக்கிறார்கள். அதன் பிறகு ஏதேனும் ஒரு துறையில் மட்டும் ஆழமாகப் படிக்கிறார்கள். அதுவரை படித்திராத கணக்குப் பதிவியல் (Accountancy), பொருளியல் (Economics) முதலான பாடங்களையும் சிலர் படிக்கிறார்கள். சிலர் கணினித் துறையில் ஆழமான விஷயங்களைப் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.
பிளஸ்டூவில் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் பிறகு அதை மாற்றி வேறு துறைக்குச் செல்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை. பொருளியலோ கணக்குப் பதிவியலோ படித்தவர்கள் அறிவியல் பாடத்துக்குத் தாவ முடியாது.
15 வயதில் சரியாக முடிவு செய்யாமல் பிறகு வருத்தப்பட்டவர்கள் பலர் உண்டு. தனக்கு ஏற்ற துறை எது, அதற்கு ஏற்ற படிப்பு எது என்ற தெளிவு பத்தாம் வகுப்பு முடியும்போதே இருக்க வேண்டும்.
அந்தத் தெளிவைப் பெற என்ன வழி?
கார்த்திகேயனுக்கு
45 வயது. 26 வயதில் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இன்று நல்ல வேலையில் இருக்கிறார். கை நிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை, ஊரில் பெரிய மனிதர் இவை எல்லாம் இருந்தும் மனத்தில் ஏதோ ஒரு வெறுமை. ஏதோ ஒரு அதிருப்தி. ஒரு ஏக்கம்.
நெடுநாள் யோசித்த பிறகு அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது. தான் செய்யும் வேலை தனக்குத் திருப்தி தரவில்லை என்பதுதான் அது. அந்த வேலையில் எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் அதை ஆழ்ந்த விருப்பத்துடன் தன்னால் செய்ய முடியவில்லை என்பதை அவர் உணர்ந்தார். அதுதான் மன வெறுமையை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்தார்.
கார்த்திகேயன் உடனே மனநல ஆலோசகர் ஒருவரைச் சந்தித்தார். தன் மனத்தில் இருந்ததை எல்லாம் கொட்டினார். “பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு பாதையைத் தேர்வு செய்தேன். இன்று அந்தப் பாதையில் வெகுதூரம் வந்துவிட்டேன். இன்று நான் வெற்றி பெற்ற ஒரு மனிதன். ஆனால், அந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. திருப்தியைத் தரவில்லை. இப்போது திரும்பிப் பார்க்கிறேன். தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டேனோ என்று தோன்றுகிறது” என்றார் அவர்.
இன்று உங்கள் முன் பல பாதைகள் உள்ளன. எந்தப் பாதையில் சென்றால் உங்களுக்கான வெற்றியை அடையலாம்?
இந்தக் கேள்வி பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் எழுகிறது. பிளஸ் 2 முடித்ததும் எழுகிறது. பட்டப்படிப்பு முடித்ததும் எழுகிறது. சில சமயம் பட்ட மேற்படிப்பு முடித்த பிறகும் எழுகிறது. என்னுடைய பாதை எது என்ற கேள்வி பலரது மனதில் இருக்கக்கூடிய கேள்வி.
சுரேஷுக்கும் அப்படித்தான். அவன் இப்போதுதான் பிளஸ் 2 முடித்திருக்கிறான். அவன் வகுப்பில் பலர் டாக்டருக்குப் படிக்கப்போகிறார்கள். அவனும் டாக்டருக்குத்தான் படிக்கப்போகிறான். நுழைவுத் தேர்வில் தேர்ச்சியும் பெற்று விட்டான். மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டியதுதான் பாக்கி.
திடீரென்று அவனுக்குள் ஒரு சின்ன கேள்வி. நான் எடுத்த முடிவு சரிதானா?
கல்லூரியில் சேர வேண்டிய சமயத்தில் இது என்ன அசட்டுத்தனமான கேள்வி என்று அவன் ஒதுக்கித் தள்ளவில்லை. எதற்கும் கல்வித் துறை ஆலோசகர் ஒருவரைப் போய்ப் பார்ப்போம் என்று முடிவு செய்தான்.
ஆலோசகர் அவனைப் பற்றிப் புரிந்துகொண்டார். அவனுக்கும் புரியவைத்தார். முடிவில் அவனுக்கு ஒரு விஷயம் தெளிவானது. டாக்டர் தொழில் தனக்கு ஒத்துவராது என்பதுதான் அது.
பிறகு ஆழமாக யோசித்து ஒரு முடிவு எடுத்தான். தன் இயல்புக்குப் பொருத்தமான வேறொரு தொழிலைத் தேர்ந்தெடுத்தான்.
ஒரு வேளை டாக்டராக வேண்டும் என்று அவன் முடிவு செய்திருந்தால்? 15 ஆண்டுகள் கழித்து என்ன நினைத்திருப்பான்? தவறான பாதையில் நுழைந்துவிட்டேன் என்று நினைத்திருப்பானா? கார்த்திகேயனைப் போல வருத்தப்பட்டிருப்பானா?
எப்படி சரியான முடிவை எப்படி எடுப்பது?
நமக்கு ஏற்ற பாதை எது எது? அந்தப் பாதையில் பயணம் செய்வதற்கான வாகனம் எது?
யோசிப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT