Published : 25 Sep 2013 01:16 PM
Last Updated : 25 Sep 2013 01:16 PM
எம்.பி.பி.எஸ். முதல் ஆண்டு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களின் படிப்பு காலம் வீணாவதைத் தடுக்க துணைத்தேர்வு என்ற புதிய தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம், தேர்வு முடிவு வெளியான 60 நாட்களில் துணைத்தேர்வு எழுதி, தோல்வியடைந்த பாடங்களில் தேர்ச்சி பெறலாம்.
மருத்துவர் கனவு
பிளஸ்-2 படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவாக இருப்பது எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதுதான். இன்னும் சொல்லப்போனால், மாணவர்களைக் காட்டிலும் அவர்களின் பெற்றோருக்குத்தான் மருத்துவப் படிப்பு மீது மோகம் அதிகம்.
200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்கும் என்று உத்தரவாதம் கொடுக்க முடியும். அதில் ஒரு மதிப்பெண் குறைந்தால்கூட இடத்துக்கு உறுதி கிடையாது. அந்த அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவ-மாணவர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது.
தேர்ச்சி முறை
அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 3,500 பேர் எம்.பி.பி.எஸ். சேருகிறார்கள். முதல் ஆண்டில் உடல்கூறியல் (அனாடமி), உடலியக்கவியல் (பிசியாலஜி), உயிரி-வேதியல் என மொத்தம் 3 தாள்கள் இருக்கும்.
ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 120 மதிப்பெண். கருத்தியல் தேர்வுக்கு 100 (50 மதிப்பெண் வீதம் தலா 2 தாள்கள்), வாய்மொழித் தேர்வுக்கு 20 மதிப்பெண். மொத்தம் 120-க்கு 60 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
படிப்பு காலம் வீணாகும்
இதற்கிடையே, உள்மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 30 சதவீதம் எடுத்தால் மட்டுமே தேர்வெழுதிய விடைத்தாள்களைத் திருத்துவார்கள். செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறக் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம்.
எம்.பி.பி.எஸ். தேர்வில் பிரேக்கிங் சிஸ்டம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. அதாவது, முதல் ஆண்டில் ஏதாவது ஒரு தேர்வில் தோல்வி அடைந்தாலும் அடுத்த செமஸ்டருக்குச் செல்ல முடியாது.
துணைத் தேர்வுமுறை அறிமுகம்
தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்களின் படிப்புக் காலம் 6 மாதங்கள் வீணாகும். தோல்வி அடைந்த மாணவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு அவர்கள் சக மாணவர்களைக் காட்டிலும் 6 மாதம் பின்தங்கிய நிலையில் செல்வார்கள்.
இந்த நிலையில், மாணவர்களின் படிப்புக் காலம் வீணாவதை தடுக்கும் வகையில், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற புதிய முறையை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது.
60 நாளில் நடத்தப்படும்
இதன்படி, தேர்வு முடிவு வெளியான 60 நாட்களில் துணைத்தேர்வு நடத்தப்படும். தோல்வி அடைந்த மாணவர்கள் எத்தனை பாடங்கள் என்றாலும் சரி மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். இதன் மூலம் அவர்களின் படிப்புக் காலம் வீணாகாது.
எம்.பி.பி.எஸ். முதல் ஆண்டுக்கான தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும் நிலையில், துணைத்தேர்வு அதில் இருந்து 60 நாளில் நடத்தப்படும். எத்தனை தாள்களில் தோல்வி அடைந்திருந்தாலும் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மருத்துவக் கவுன்சில் விதிமுறை
இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) விதிமுறையின்படி நடத்தப்படும் துணைத் தேர்வு முறை கர்நாடகத்தில் ராஜீவ் காந்தி மருத்துவப் பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு முதல் துணைத்தேர்வு முறையை அமல்படுத்த உள்ளோம் என்று மருத்துவ பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் ஜான்சி சார்லஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT