Published : 08 Feb 2014 12:00 AM
Last Updated : 08 Feb 2014 12:00 AM
பட்டப்படிப்பு முடித்ததும் வேலை கிடைக்கவில்லை என்று ஏங்குவதைத் தவிர்த்துவிட்டு, புதுமையான பட்டப்படிப்புகளை படிப்பதன் மூலம் அருமையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். பொறியியல் படித்தவர்கள் மட்டுமல்லாமல், கலை, அறிவியல் படித்தவர்களும் இன்றைக்கு வளர்ந்து வரும் துறைகளுக்கு ஏற்ற பட்டமேற்படிப்புகளை பயின்று, அந்தத் துறைகளில் சாதிக்கலாம்.
நவநாகரிக யுகத்தில் ஃபேஷன் டெக்னாலஜிக்கு அதிக முக்கியத்துவமும் மிகுந்த வரவேற்பும் உள்ளது. பொறியியல் படித்தும், அதற்கேற்ற துறையில் வேலை கிடைக்கவில்லை என்று ஏங்குபவர்களுக்கு, ஃபேஷன் டெக்னாலஜி கைகொடுக்கிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், காந்திநகர் ஆகிய இடங்களில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி (NIFT) கல்வி நிறுவனத்தில், பி.ஜி. புரோகிராம் இன் ஃபேஷன் மேனேஜ்மென்ட் மேற்படிப்பு வழங்குகின்றனர். இக்கல்லூரியில் சேர, இணைய தளம் மூலம் விண்ணப்பித்து, நுழைவுத் தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும். இப்படிப்பை முடித்ததும் பணிக்கு உத்திரவாதம் உண்டு. கலை, அறிவியல் படித்தவர்களுக்கும் இது பொருந்தும்.
சென்னை, டெல்லியில் பியர்ல் (PEARL) இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம் ஃபேஷன் டிசைன் டெக்னாலஜி சார்ந்த பல்வேறு பட்டமேற்படிப்புகளை வழங்குகிறது. ஃபேஷன் டெக்னாலஜி சார்ந்த படிப்பு முடித்தவர்களுக்கு, வெளிநாடுகளில் உடனடி வேலை காத்திருக்கிறது.
பெங்களூரில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் கல்வி நிறுவனத்தில் பி.ஜி. புரோகிராம் இன் டிசைன், பி.ஜி. புரோகிராம் இன் கம்யூனிகேஷன் டிசைன் படிப்புகள் வழங்குகின்றனர். வெப்சைட், விளம்பரம், மொபைல், டிஜிட்டல் பேனர் என பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற கல்லூரிகளில் நுழைவுத் தேர்வெழுதி சேர்ந்து படித்தால் நல்ல பணிவாய்ப்பு கிடைக்கும்.
பொறியியல் அறிவுடன் ஜர்னலிஸம் கல்வி அறிவு பெறுபவர்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. டெக்னிக்கல் மேகஸின், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஃபோட்டோகிராஃபி சம்பந்தமாக அதிகளவு பத்திரிகைகள் வெளிவருகின்றன. இணையதளங்களில் இ-ஜர்னலிஸம், இ-மேகஸின், இ-பப்ளிகேஷன் என ஏகப்பட்ட ஆன்-லைன் பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற துறைகளில் பொறியியல் தொழில்நுட்ப அறிவுடன், ஜர்னலிஸம் முடித்தவர்களுக்கு பணி வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது. ஏசியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிஸம் மற்றும் இப்படிப்பு சார்ந்த பிற கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதன் மூலம் பணி சம்பந்தமான கவலைகள் அகன்று போகும்.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பொறியியல் படித்தவர்கள் ஐடி துறைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணினால், அதற்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளது. பெங்களூரு, குவாலியர், ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐஐஐடி) கல்வி நிறுவனம் உள்ளது. இதில் பி.ஜி. புரோகிராம் இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு வழங்குகின்றனர். இதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், ஐடி துறையில் சாதிக்கலாம். பட்டப்படிப்பு முடித்த கையோடு பணி வாய்ப்பு மிகுந்த பிற துறை சார்ந்த பட்டமேற்படிப்புகளை அறிந்து, அதற்கேற்ற வகையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டால், அருமையான வாழ்க்கை கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT