Last Updated : 27 Jun, 2017 11:00 AM

 

Published : 27 Jun 2017 11:00 AM
Last Updated : 27 Jun 2017 11:00 AM

சேதி தெரியுமா? - 31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி 38

பி.எஸ்.எல்.வி.-சி38 ஏவுகணை, 31 செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூன் 23 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த 31 செயற்கைக்கோள்களில், பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் கார்டோசாட் - 2 செயற்கைக்கோளுடன், துணைச் செயற்கைக்கோளாக 29 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த நானோ செயற்கைக்கோள்களில் இந்தியாவுடன் ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாத்வியா, லிதுவேனியா, ஸ்லோவாகியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடங்கும்.

பி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனத்தின் மொத்த எடை 955 கிலோகிராம். பூமியைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், தொலையுணர்வு சேவைகளை வழங்கவும் கார்டோசாட்-2 செயற்கைக்கோளை அனுப்பியிருக்கிறது இஸ்ரோ. இந்தச் செயற்கைக்கோள் ஐந்தாண்டுகளுக்குத் தொலையுணர்வு சேவைகளை வழங்கும். அத்துடன் கடலோரப் பயன்பாடு, சாலைப் போக்குவரத்து கண்காணிப்பு, நீர் விநியோகம், நிலத் தகவல் அமைப்பு, புவி சார் தகவல் அமைப்பு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு இந்தச் செயற்கைக்கோள் உதவும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பா.ஜ.க . தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 23 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, எல்.கே. அத்வானி உள்ளிட்டவர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இவருக்கு எதிர்க் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டுமென்று பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்தது. ஆனால், இந்த வேண்டுகோளை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்ட காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தி.மு.க. உள்ளிட்ட 17 கட்சிகள் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரைத் தங்களுடைய குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தன. குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூலை 20 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பை: வென்றது பாகிஸ்தான்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். ஜூன் 18 அன்று, லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஃபகர் ஜமான் 114 ரன்களையும் அஸார் அலி 59 ரன்களையும் குவித்தனர். இது பாகிஸ்தான் அணி 338 ரன்கள் குவிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, தோனி உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மட்டுமே அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றியது.

‘நீட்’: தமிழ்நாடு 38.84% தேர்ச்சி

மருத்துவப் படிப்புகளுக்கான தேசியத் தகுதி, நுழைவுத் தேர்வின் (NEET) முடிவு ஜூன் 23 அன்று வெளியானது. இந்தத் தேர்வைத் தமிழ்நாட்டிலிருந்து எழுதிய 83,859 மாணவ, மாணவிகளில் 32,570 பேர் தேர்ச்சியடைந்திருக்கின்றனர். இதன்மூலம் தமிழ்நாடு, நீட் தேர்வில் ஒட்டுமொத்தமாக 38.84 தேர்ச்சி சதவீதத்தைப் பெற்றிருக்கிறது. அனைத்திந்திய அளவில் முதல் இருபத்தைந்து இடங்களில் ஒன்றைக்கூடத் தமிழ்நாட்டு மாணவர்கள் பிடிக்கவில்லை. ஆனால், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிறைய பேர் இந்தத் தேர்வின் மொத்த மதிப்பெண்களான 720 மதிப்பெண்களில் 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் பத்து மாணவர்கள் மட்டுமே 630-655 மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றனர். பத்தொன்பது பேர் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்கின்றனர். 500-600 மதிப்பெண்களை 156 மாணவர்கள் எடுத்திருக்கின்றனர். 565 மாணவர்கள் 400-500 மதிப்பெண்கள் வரை பெற்றிருக்கின்றனர். தமிழ்நாட்டு மாணவர்கள் சென்ற கல்வி ஆண்டின் நீட் தேர்வைவிட இந்த ஆண்டு தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது சி.பி.எஸ்.இ.

உலகின் அதிக மக்கள்தொகை : 2024-ல் இந்தியா

சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா 2024-ல் மாறும் என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது, 141 கோடி மக்கள்தொகையுடன் சீனா, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. 134 கோடி மக்கள்தொகையுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் முறையே உலக மக்கள்தொகையில் 19 சதவீதத்தையும், 18 சதவீதத்தையும் கொண்டிருக்கிறது. 2024-ல், இந்தியா, சீனா என இரண்டு நாடுகளும் தலா 144 கோடி மக்கள்தொகையை எட்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பிறகு, இந்தியாவின் மக்கள்தொகை 2030-ல் 150 கோடியாக அதிகரிக்கும் என்றும், 2050-ல் 166 கோடியைத் தாண்டும் என்று ஐ.நாவின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், சீனாவின் மக்கள்தொகை 2030 வரை, ஒரே சீராக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 2030-க்குப் பிறகுதான், சீனாவின் மக்கள்தொகையில் ஒரு சிறிய அளவிலான சரிவு இருக்கும் என்று கணித்திருக்கிறது ஐ.நா. ஆனால், இந்தியாவின் மக்கள்தொகை, 2050-க்குப் பிறகு, குறையத் தொடங்கும். 2100-ம் ஆண்டுதான் அது 151 கோடியாகக் குறையும் என்று சொல்கிறது ஐ.நா. அப்போதும், இந்தியாதான் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும்.

இந்தோனேசிய ஓபன் பட்டம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த

ஜகார்த்தாவில் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி ஜூன் 18 அன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜப்பானின் சகாயை வீழ்த்தி இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்தோனேசிய ஓபன் பட்டத்தை வென்றார். 2017 இந்தோனேசிய சூப்பர் தொடர் பட்டம், ஸ்ரீகாந்த் வென்றிருக்கும் மூன்றாவது சூப்பர் தொடர் பட்டமாகும்.

இந்தப் பட்டத்தைக் கைப்பற்றிய பிறகு, 51,603 புள்ளிகளுடன் உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 22-வது இடத்திலிருந்து 11-வது இடத்துக்கு ஸ்ரீகாந்த் முன்னேறியிருக்கிறார். இந்தத் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பட்டத்தை ஜப்பானின் சயாகா சாடோ வென்றிருக்கிறார். இந்தியாவின் பி.வி. சிந்து, இந்தப் போட்டிக்குப் பிறகு, உலகத் தரவரிசைப் பட்டியலில் பெண்கள் பிரிவில் மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். சாய்னா நேவாலும் 15-வது இடத்திலிருந்து 16-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x