Published : 11 Oct 2013 03:05 PM
Last Updated : 11 Oct 2013 03:05 PM
அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை. பள்ளி கட்ட அரசு ஒதுக்கிய நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்தால் அது எவ்வளவு கொடுமை? நிலமிருந்தும் அது தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பள்ளி கட்ட முடியவில்லை. இதனால் சென்னையில் உள்ள பல்லாயிரக்கணக்கான செவித்திறன் இழந்தோர் கல்வி கற்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை.
சென்னையில் செவித்திறன் இழந்தோருக்கு அரசு சார்பில் ஒரே ஒரு சிறப்புப் பள்ளிதான் நடத்தப்படுகிறது. இன்னுமொரு பள்ளியைக் கட்ட 1994ல் மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் 1,500 சதுர மீட்டர் நிலத்தை அரசு ஒதுக்கியது. நிலத்தின் அன்றைய மதிப்பில் பாதியை தமிழ்நாடு மாநில செவித்திறன் இழந்தோர் கூட்டமைப்பு அரசிடம் செலுத்தியது. நிலம் சொந்தமான பின்பும் அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக செவித்திறன் இழந்தோர் கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
நிலம் எங்களுக்குக் கிடைத்ததும் நாங்கள் ஒரு வேலி அமைத்தோம். ஆனால் அடுத்த நாளே அதை சில தனி நபர்கள் உடைத்து எறிந்துவிட்டனர். மீண்டும் நாங்கள் சென்ற போது எங்களை விரட்டி அடித்தனர். மெல்ல மெல்ல எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து ஹோட்டல், வீடு என்று கட்டிக்கொண்டனர். இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக 2005ல் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உயர் நீதிமன்றத்தை நாடியபோது ஜூன் மாதத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியரை நாங்கள் இரு முறை சந்தித்தோம். அனால் பயன் எதுவும் இல்லை என்றார்.
இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் வேறு எங்காவது நிலம் ஒதுக்குமாறு இந்த கூட்டமைப்பினர் அரசிடம் கோரினர். ஆனால் நிலம் மற்றும் வருவாய்த் துறையோஇவர்களையே நிலம் தேடச் சொன்னது. “காதும் குரலும் அற்ற எங்களால் அது எப்படி சாத்தியமாகும்?’’ என்கிறார் சுவாமிநாதன்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் கேட்டபோது, “ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு தாசில்தார் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் செவித்திறன் இழந்தோர் கூட்டமைப்புக்கு நிலம் திரும்பக் கிடைக்கும்’’ என்றார்.
சென்னையில் செவித்திறன் இழந்தோருக்கு அரசு சார்பில் ஒரே ஒரு சிறப்புப் பள்ளிதான் நடத்தப்படுகிறது. இன்னுமொரு பள்ளியைக் கட்ட 1994ல் மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் 1,500 சதுர மீட்டர் நிலத்தை அரசு ஒதுக்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT