Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM

புகழும் பணமும் தேடித்தரும் புகைப்படக் கலை!

பிளஸ் 2 முடித்ததும் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மூலம் சிறந்த வேலைவாய்ப்பை பெறுவது பலரது கனவு. ஆனால், சிலர் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் சில துறைகளில் படிக்க விரும்புவர். அது அவர்களின் கற்பனை, திறமையை நிரூபிக்கும் வகையிலான படிப்புகளாக இருக்கும். அந்த வரிசையில் புகைப்படத் துறை, இசை, பங்குச் சந்தை, ஆடியோ இன்ஜினியரிங், அனிமேஷன், பியூட்டிஷியன், ஃபேஷன் டிசைன் உள்ளிட்ட படிப்புகள் இடம் பெறுகின்றன.

புகைப்படக் கலைஞராக விரும்புவோர் தொழில் ரீதியாக கற்றுத் தேர்வது அவசியம். பொதுவாக விஷுவல் கம்யூனிகேஷன், இதழியல் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் புகைப்படக் கலை குறித்து படிக்கலாம். புகைப்படக் கலைஞர் படிப்பை முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயில முடியும். இதில் கமர்ஷியல் போட்டோகிராபி, இன்டஸ்ட்ரியல் போட்டோகிராபி, அட்வர்டைசிங் போட்டோகிராபி, ஆர்ட்ஸ் போட்டோகிராபி, வைல்டு லைஃப், சயின்டிஃபிக், அட்வென்ச்சர், ஃபேஷன், நியூஸ், டிராவல் போட்டோகிராபி என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் எந்தப் பிரிவை தேர்வு செய்ய வேண்டும் என்பது அவரவர் சுய விருப்பம் மற்றும் சுய திறமையின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.

பகுதி நேரமாகவும் 15 நாள் முதல் ஓராண்டு வரை இதனைக் கற்பிக்கின்றனர். டில்லியில் ரகுராய் சென்டர் ஃபார் போட்டோகிராபி நிறுவனம், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் போட்டோகிராபி ஆகிய நிறுவனங்களில் புகைப்படக் கலையை படிக்கலாம். நிகான் கேமரா நிறுவனம் புகைப்படக் கலைஞர்களுக்கான பள்ளியை நடத்துகிறது. பிளஸ் 2 முடித்ததும் நேரடியாக புகைப்படக் கலைஞருக்கான படிப்பை படிப்பது நல்ல ஆலோசனையாக இருக்காது. பட்டப் படிப்பை படித்துக் கொண்டே, இதுபோன்ற குறைந்தகால மற்றும் பகுதி நேர படிப்பை படிக்கலாம்.

புகைப்படக் கலைஞராக பகுதி நேரமாக பணியில் சேர்ந்தால் மாதம் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை சம்பாதிக்கலாம். முழு நேர பணியாளர்களுக்கு அவர்கள் திறமை, அனுபவம் மற்றும் தொழில் தொடர்புகளைப் பொறுத்து குறைந்தது ரூ.20,000 முதல் லட்சங்கள் வரை சம்பாதிக்கலாம். உலக அளவிலும் இந்தியாவிலும் சினிமா துறையில் புகைப்படக் கலைஞர்களுக்கு மிகுந்த மரியாதையும் கோடிகளில் வருமானமும் கிடைக்கிறது.

புகைப்படத் துறை ஆண்டுதோறும் சராசரியாக 15 முதல் 20% வளர்ச்சி கண்டு வருகிறது. தினசரி, வார, மாத பத்திரிகைகள் மற்றும் ஆபரணங்கள், ஃபேஷன், ரியல் எஸ்டேட் என துறைவாரியாக பிரத்தியேக பத்திரிக்கைகள் ஏராளமாக வருகின்றன. எனவே, சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் ஏராளம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x