Last Updated : 14 Apr, 2014 07:26 PM

 

Published : 14 Apr 2014 07:26 PM
Last Updated : 14 Apr 2014 07:26 PM

ஆழிப் புதையல்

நாக்கில் ஒரே ஒரு சொட்டு விட்டாலே உப்புக்கரிக்கும் கடல் தண்ணீர் இருக்கும் பகுதிக்குக் கொஞ்சம் தள்ளி, நிலப்பகுதியில் ஊற்று தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. அந்தத் தண்ணீர் கரிப்பதில்லை, இனிக்கிறது. இது எப்படிச் சாத்தியம்?

இதற்குக் காரணம் கடற்கரையில் உள்ள மணல்குன்றுகள் கடல் நீரை உள்ளே புகவிடாமல் தடுத்துவருவதுதான். இப்படிக் கடற்கரையோர, கடல் சூழல்தொகுதி (Coastal and marine ecosystem) பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

பூமியின் முதல் உயிர் கடற்கரையில்தான் தோன்றியது. பூமியின் 97 சதவீதத் தண்ணீர், கடலில்தான் இருக்கிறது. பூமிபந்தின் 71 சதவீதப் பகுதியைக் கடல்கள்தான் சூழ்ந்திருக்கின்றன. என்றாலும், எல்லா ஊர்களிலும் கடற்கரை கிடையாது.

நம் நாட்டில் கிட்டத்தட்ட 7,500 கிலோ மீட்டர் கடற்கரை உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆரம்பித்து அப்படியே நகர்ந்துகொண்டே சென்றோம் என்றால் ஒரிசா, ஆந்திரம், தமிழகம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிராவைக் கடந்து குஜராத் வரை இந்தக் கடற்கரை கிழக்கில் இருந்து மேற்கு வரை நீண்டுகொண்டே செல்லும்.

இந்தக் கடற்கரைகளில் இருந்து உள்ளே நிலப்பகுதியின் முதல் 50 கி.மீ. பரப்புக்குள் நாடு முழுவதும் 25 கோடிப் பேர் வாழ்கிறார்கள். அதாவது, நான்கில் ஒருவர் இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள். இந்தப் பகுதிகள் ஆபத்தும் சுவாரசியமும் ஒருசேர நிரம்பியவை.

வங்காள விரிகுடாக் கடலில் மட்டும் கடந்த 100 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகியிருக்கின்றன. பல புயல்கள் ஆபத்தானவை. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். இவ்வளவு ஆபத்தைத் தாண்டி மக்கள் ஏன் அங்கு வாழ்கிறார்கள்? அங்குள்ள சுவாரசியமான விஷயங்களால்தான்.

கடலில்தான் பவளத் திட்டுகள் உள்ளன, கடல் புற்கள் வாழ்கின்றன, கரையில் அலையாத்திக் காடுகள் (Mangroves) வளர்கின்றன, பாறைகளைக் கொண்ட கடற்கரைகள், குருணைகுருணையாய் மணல் நிரம்பிய கடற்கரைகள், மணல் குன்றுகள் எனப்

பல்வேறு அம்சங்கள் இங்கே உள்ளன. இந்த விஷயங்கள், இந்தப் பகுதிகளை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுகின்றன. அல்லது அலை, புயல் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ஆபத்துகளைக் குறைக்கின்றன.

இந்த அம்சங்கள் அனைத்தும் அடங்கிய குறிப்பிட்ட ஒரு பகுதி அல்லது ஒரு சூழல் தொகுதி கடற்கரை மற்றும் கடல் சூழல் தொகுதி எனப்படுகிறது. இந்தச் சூழல் தொகுதியின் முக்கியத்துவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டுதான், மேலே சொன்ன கடற்கரை அருகேயுள்ள நல்ல தண்ணீர் ஊற்று.

உலகில் வாழும் 25 நவீன உயிரினக் குழுக்களில் (Phyla) நான்கு குழுக்கள் மட்டுமே நிலப்பகுதியில் வாழ்கின்றன. அதேநேரம் பெருங்கடல்களில் 25 வகை உயிரினக் குழுக்களைச் சேர்ந்தவையும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

கடலில் வாழும் உயிரினங்களில் இல்லாத ஒரு வகை என்று தேடினோம் என்றால், நிலத்தில் பல்கிப் பெருகி வாழும் பூச்சிகளை மட்டுமே கடலில் பார்க்க முடிவதில்லை. அவற்றுக்குப் பதிலாக ஓடு உடைய இறால், நண்டு போன்றவை கடலில் கணக்கற்ற வகைகளில் உள்ளன.

இப்படிக் கடலை அடித்துக்கொள்வதற்கு, உலகில் வேறெந்த விஷயமும் இல்லை. கடல் எவ்வளவு பிரம்மாண்டமானதோ, அவ்வளவு ரகசியங்களும் ஆச்சரியங்களும் அதில் நிரம்பித் ததும்புகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x