Published : 11 Nov 2013 12:00 AM
Last Updated : 11 Nov 2013 12:00 AM

வருவாய்த் துறையில் 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு

வருவாய்த் துறையில் காலியாகவுள்ள , 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக, காலியிடங்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அதிகாரி

அரசு நிர்வாகத்தின் அடிமட்ட அளவில் மிக முக்கியப் பங்கு வகிப்பவர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.). சாதிச் சான்று, இருப்பிடச்சான்று, வருமானச் சான்று எனப் பல்வேறு விதமான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், பட்டா பட்டா பெயர் மாற்றத்துக்கும்,

அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் வி.ஏ.ஓ.வின் அத்தாட்சி சான்று அவசியம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக 1,870 வி.ஏ.ஓ. பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வி.ஏ.ஓ. பணியிடங்கள் காலியாகக் கிடப்பதாகவும், ஒரே வி.ஏ.ஓ. கூடுதலாக இரண்டு மூன்று கிராமங்களின் பணிகளையும் சேர்த்துக் கவனிக்க வேண்டியுள்ளது என்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

1,400 காலியிடங்கள்

இதுதவிர, ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள் குருப்-2 உள்ளிட்ட இதர தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மற்றப் பணிகளுக்குச் சென்றுவிடுவதாலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே,தற்போது , காலியாக உள்ள 1,400 காலியிடங்களை நிரப்ப அரசு முடிவுசெய்துள்ளது. மாவட்ட வாரியாகக் காலியிடங்களின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி.க்கு வருவாய்த் துறை அனுப்பியிருக்கிறது.

1,400 வி.ஏ.ஓ. காலியிடங்கள் பட்டியல், பணியாளர் குழுவுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும். அதன்பிறகு அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குத் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும்.

10-ம் வகுப்பு போதும்

வி.ஏ.ஓ. தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். பொதுப்பிரிவினர் நீங்கலாக, மற்ற அனைத்து வகுப்பினருக்கும், அதேபோல் பொதுப்பிரிவு உள்பட அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதற்காக நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலே வேலை உறுதி. காரணம் இதில் நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. மேலும், குறைந்தபட்சக் கல்வித் தகுதியான 10-ம் வகுப்பைத் தமிழ்வழியில் படித்திருந்தால் அவர்களுக்குத் தனியாக 20 சதவீத இடஒதுக்கீடும் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x