Published : 13 Jun 2017 08:51 AM
Last Updated : 13 Jun 2017 08:51 AM
படிக்கும் வயதில் வீடியோ கேம் விளையாடினால் அது மாணவர்களின் படிப்பைப் பாதித்துவிடும் என்றுதான் பெற்றோர்கள் பயப்படுவார்கள். ஆனால், இங்கிலாந்தின் பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வானது இதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவித்திருக்கிறது. மாணவர்களது கற்றல்திறனுக்குத் தேவையான சில அம்சங்களை வளர்ப்பதற்குக் குறிப்பிட்ட சில வீடியோ கேம்கள் உதவுகின்றன என்கிற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.
கற்றல் திறனுக்கு ஊக்கம்
அப்படியென்றால் பள்ளி மாணவர்களை இனி வீடியோ கேம் விளையாட அனுமதிக்கலாமா என்று கேட்கிறீர்களா? இந்த ஆய்வு முடிவானது பல்கலைக்கழக மேற்படிப்பு வயதை எட்டிய மாணவர்களிடம்தான் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது, பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களது கற்றலுக்குத் தேவையான தொடர்புகொள்ளும் திறன், சிக்கல்களை விரைவாகத் தீர்க்கும் திறன், சூழலுக்குத் தேவையான வகையில் தகவமைத்துக்கொள்ளும் திறன் ஆகியவை மேம்பட வீடியோ கேம்கள் உதவுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.
இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகம் இந்த ஆய்வுக்காக இரண்டு குழுக்களைத் தேர்ந்தெடுத்தது. இந்த ஆய்வுக்கான காலம் மொத்தம் எட்டு வாரம். முதல் குழுவானது வீடியோ விளையாட்டில், விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களது தொடர்புகொள்ளும் திறன், சிக்கல் தீர்க்கும் திறன், சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் திறன் ஆகியவை இரண்டாவது குழுவைவிட மேம்பட்டிருந்ததை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மேற்படிப்புகளில் வீடியோ கேம் பயன்பாடு கற்றல்திறனை மேம்படுத்தும் என்னும் தற்காலிகமான கருதுகோளுக்கு ஆதரவு தரும் வகையில் இந்த ஆய்வு அமைந்திருக்கிறது.
கற்றல் திறனுக்கு உதவும் அம்சங்களான, பிரச்சினையைத் தீர்க்கும் திறன், தொடர்புகொள்ளும் திறமை, சூழலுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மை ஆகியவை பட்டப் படிப்புகளுக்குக், குறிப்பாக வேலைக்காகத் தேர்ந்தெடுக்கும் படிப்புகளுக்குத் தேவையான தகுதிகளாகக் கருதப்படுகின்றன.
நம்பலாமா?
“பிரச்சினைகளை எப்படித் தீர்க்கலாம் என்ற அறிவு, விளையாடுவதற்கேற்ப தங்களை தகவமைத்துக்கொள்வது, ஒரு சிக்கலுக்குப் பல்வேறு வழிகளில் தீர்வுகளைக் கண்டறிவது ஆகிய திறமை கொண்டவர்களாலேயே நவீன வீடியோ கேம்களில் ஈடுபட இயலும். சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கும் சிந்தனையை வளர்க்கும் விதத்திலேயே நவீன வீடியோ கேம்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவை எல்லாமே மேற்படிப்பு படிப்பவருக்குத் தேவையான அம்சங்கள். ஆகவே, இந்த வீடியோ கேமை விளையாடுவது பல்கலைக்கழக மாணவரது கற்றல்திறனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்றெல்லாம் கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியர் மேத்யூ பார்.
சந்தையில் கிடைக்கும் வீடியோ கேம்களை விளையாடுவதால் மாணவர்களது கற்றல்திறனில் ஏற்படும் தாக்கங்கள் என்னவாக இருக்கும் என்பதைக் கண்டறிவதற்காகவும் சில குறிப்பிட்ட வீடியோ கேம்கள் மேற்கல்வி மேற்கொள்வோரின் கற்றல்திறனை மேம்படச் செய்கிறது என்னும் தற்காலிகக் கருதுகோளை ஆராய்வதற்காகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
“வீடியோ கேம்கள் விளையாடுவது மேற்கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல்திறன் விஷயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்றும் “மேற்கல்வி விஷயத்தில் வீடியோ கேம்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது” என்றும் கூறுகிறார் பேராசிரியர் மேத்யூ பார்.
இந்த ஆய்வு எட்டு வார காலம் என்ற குறுகிய கால அளவிலேயே மாணவர்களிடம் கற்றல்திறன் சார்ந்த திறமைகள் மேம்படுவதற்கும் சான்றாக இருக்கிறது. இதெல்லாம் சரிதான். ஆனால், இந்த ஆய்வானது தொடக்க நிலையிலேயே உள்ளது. இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இது சரிதான் என்பது அழுத்தமாக நிரூபிக்கப்படும் வரையில் வீடியோ கேம்கள் கல்விக்கு உதவும் என்பதை முழுமையாக நம்ப முடியாது என்பதே யதார்த்தம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT