Last Updated : 18 Nov, 2013 12:00 AM

 

Published : 18 Nov 2013 12:00 AM
Last Updated : 18 Nov 2013 12:00 AM

விடை தேடும் பயணம்

ஒவ்வொரு கேள்விக்குமான சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள். சில கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் இருக்கலாம். சில கேள்விகளுக்கு எந்த பதிலும் சரியானதாக இல்லாமலும் போகலாம். எனவே, கவனமாக பதில் அளியுங்கள்:

1. மகாபாரத சகுனி காந்தார நாட்டைச் சேர்ந்தவர் என்பார்கள். அந்த காந்தாரம் இப்போது எங்கே உள்ளது?

அ) பிகார் மாநிலம்

ஆ) ஆப்கானிஸ்தான்

இ) ஒடிசாவின் அருகில்



2. எம்.ஆர். ராதா எனும் பெயரில் உள்ள ‘எம்’ எதைக் குறிக்கிறது?

அ) முள்ளிவாய்க்கால்

ஆ) மைசூர்

இ) மெட்ராஸ்



3. விம்பிள்டன் போட்டிகள் எனும் பெயரில் உள்ள விம்பிள்டன் எதைக் குறிக்கிறது?

அ) ஒரு பிரபல டென்னிஸ் ராக்கெட்டின் பெயர்

ஆ) ஒரு இட​த்தின் பெயர்

இ) டென்னிஸ் கோப்பையை வழங்கும் ராஜவம்சத்தினர் தங்கும் இடம்.



4. லாக்ரிமல் சுரப்பி அதிகம் வேலை செய்தால் என்னவாகும்?

அ) உடல் பருமனாகும்

ஆ) அழுவோம்

இ) மிகுந்த பதற்றம் ஏற்படும்



5. வெள்ளைப் பூண்டின் தாவரவியல் பெயர் என்ன?

அ) அலியம் சடைவம்

ஆ) அலியம் சீபா

இ) அராகிஸ் ஹைபோகியா



6. டைகோனாட் (Tyconaut) என்றால் என்ன?

அ) அதிக கலோரி கொண்ட முந்திரி வகை.

ஆ) பிறர் எது பேசினாலும் அதில் தவறு கண்டுபிடிக்கும் தன்மை.

இ) விண்வெளி வீரர்



7. சிவாஜி கணேசன் எந்த கதாபாத்திரத்தை ஒரு முழு நீளப் படத்தில் ஏற்று நடித்ததில்லை?

அ) மன்னன் சிவாஜி

ஆ) குறுநில மன்னன் கட்டப்பொம்மன்

இ) வ.உ.சிதம்பரம் பிள்ளை



விடைகள்:

1.அன்றைய காந்தாரம்தான் இன்றைய காந்தகார், ஆப்கானிஸ்தானில் உள்ளது. இன்றைய பிகார் முன்பு மகதநாடாக விளங்கியது. மகதத்தின் தலைநகரான பாடலிபுத்திரம் இன்றைய பாட்னா. ஒடிசா பகுதி கலிங்கம் என்று அழைக்கப்பட்டது.

2.எம்.ஆர். ராதா இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்து கொண்டது உண்​மை. ஆனால், அவர் பிறந்ததோ அவரது ​மூதாதையர் ஊரோ முள்ளிவாய்க்கால் இல்லை. அவர் கன்னடியரும் அல்ல. எம்.ஆர்.ராதா என்பது மெட்ராஸ் ராஜகோபாலன் ராதா என்பதின் சுருக்கம்.

3.விம்பிள்டன் என்பது இங்கிலாந்திலுள்ள ஒரு மிகச் சிறிய மாவட்டம். அதில் அதே பெயர் கொண்ட பகுதியில் போட்டிகள் நடத்தப்படுவதால்தான், அது விம்பிள்டன் போட்டி என்று அழைக்கப்படுகிறது. டென்னிஸ் கோப்பைகள் ராஜ பரம்பரையினரால் வழங்கப்படுகிறது என்றாலும், அதற்கும் விம்பிள்டன் என்ற பெயருக்கும் தொடர்பு இல்லை.

4.உடல் பருமனாதல் தைராய்டு சுரப்பி குறைபாட்டால் உண்டாகலாம். அதிர்ச்சி அடைய வைக்கும் நிகழ்வுகளின்போது அட்ரினலின் அதிகமாகச் சுரக்கும். லாக்ரிமல் சுரப்பிகள் கண்களில் உள்ளன. இவற்றின் இயக்கத்தால்தான் கண்ணீர் உண்டாகிறது.

5.வெள்ளைப் பூண்டின் தாவரவியல் பெயர் அலியம் சடைவம். வெங்காயமும் பூண்டின் குடும்பம்தான். வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அலியம் சீபா. மகாத்மா காந்திக்கும் நமக்கும் பிடித்த வேர்க்கடலையின் தாவரவியல் பெயர்தான் அராகிஸ் ஹைபோகியா.

6.அமெரிக்க விண்வெளி வீரர் அஸ்ட்ரனாட் என்று அழைக்கப்படுகிறார். ரஷ்ய விண்வெளி வீரர் காஸ்மோனாட் என்று அழைக்கப்படுகிறார். சீன விண்வெளி வீரர் டைகோனாட் (TYCONAUT) என்று அழைக்கப்படுகிறார்.

7.‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில்​ சிறப்பாக நடித்ததற்காக கணேசன் என்ற நடிகருக்கு முன் ஒட்டிக்கொண்ட பட்டம்தான் சிவாஜி. ஆனால் ராமன் எத்தனை ராமன​டி, பக்த துக்காராம் போன்ற படங்களில் சில காட்சிகளில் மட்டும்தான், மராட்டிய மன்னன் சிவாஜியின் வேடத்தை ஏற்று அவர் நடித்திருக்கிறார். மற்றபடி வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் கட்டப்பொம்மனாகவும், கப்பலோட்டிய த​மிழனில் வ.உ.சிதம்பரம் ​பிள்ளையாகவும் அவர் நடித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x