Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM
டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் உற்சாகமாகப் பணிபுரியவும், அவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கவும் யோகா, பிராணாயாமம் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களையும் அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்கிறது. சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் சுமார் 500 பேர் பணியாற்றுகின்றனர்.
ஊழியர்கள் மனஅழுத்தம் இல்லாமல் உற்சாகமாக பணி யாற்றும் வகையில் அவர்களுக்கு மனவளக்கலை என்ற சிறப்பு யோகா பயிற்சி அளிக்க டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் திட்டமிட்டார். ஊழியர்களுக்கு குறைந்த கட்ட ணத்தில் பயிற்சி அளிக்க உலக சமூக சேவா மையமும் முன்வந்தது.
சிறப்பு யோகா பயிற்சி
அணி அணியாக பிரித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் அணிக்கான பயிற்சி தற்போது நடந்து வருகிறது. அலுவலக வேலைநாட்களில் தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் எளிய உடல்பயிற்சி, தியானம், பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), காயகல்பம், அகத்தாய்வு பயிற்சி என 5 விதமான பயிற்சிகள் சொல்லித் தரப்படுகின்றன.
ஊழியர்கள் ஆர்வம்
சென்னையில் உள்ள உலக சமூக சேவா மையத்தின் யோகா மாஸ்டர்கள் 3 பேர் தினமும் வந்து பயிற்சி அளிக்கின்றனர். இதில் ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். அலுவலகத்தின் 6-வது மாடியில் உள்ள விசாலமான கலையரங்கத்தில் அமைதியான சூழலில் இந்தப் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பது இதுவே முதல்முறை. முதல் அணியில் 62 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சி வரும் 22-ம் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு 2-வது அணிக்கு பயிற்சி தொடங்கும்.
சான்றிதழ்
பயிற்சியை முடிப்போருக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன் அவர்களின் அனுபவங்களும், பயிற்சியினால் ஏற்படும் விளைவு களும் ஆய்வு செய்யப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் விஜயகுமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT