Published : 31 Oct 2013 03:10 PM
Last Updated : 31 Oct 2013 03:10 PM

பள்ளிக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள்

பரந்து விரிந்த செம்மண் பூமி. சுற்றுவட்டாரம் முழுவதும் செங்கல் சூளைகள். வேட்டி கட்டிய தமிழ் முதலாளிகள். மேற்கு வங்காளம், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து குடும்பத்தோடு குமரிக்கு வந்து தங்கியிருந்து வேலை பார்த்து வயிற்றை நிரப்பும் கூலித் தொழிலாளர்கள். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, ஆரல்வாய் மொழி சுற்றுவட்டாரப் பகுதியின் காட்சியமைப்புதான் இது.

மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கூலி வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் குழந்தைகள் தெருப் புழுதியில் விளையாடி பொழுதை கழித்து வந்தார்கள். இதை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நாகராஜன், களப்பணியில் இறங்க… இதோ இப்போது 300 வெளிமாநிலக் குழந்தைகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் பேசினோம். ’’தோவாளை பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வந்து வேலை பார்ப்பவர்களின் குழந்தை கள் பள்ளிக்கு செல்லாதது உறுத்த லாக இருந்தது. இவர்கள் அதிகபட்சம் ஒரு வருடத்துக்கு மேல் எந்த இடத்திலும் நிரந்தரமாக ஒரே பகுதியில் தங்கி வேலை செய்வ தில்லை என்பது தெரியவந்தது. கல்வித் துறையின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் இவர்களுக்காக குறுகிய காலப் பயிற்சி மையங்களை தொடங்கினோம். ஒரு மனிதனுடைய தாய் மொழி மட்டுமே அவனை பண் புள்ளவனாக்கும் என்பதால் வெளி மாநில குழந்தைகளின் நலனைக் கருதி பெங்காலி, ஹிந்தி, வங்க மொழி பாடப் புத்தகங்களை வாங்கி னோம். வெவ்வேறு வயதுடைய குழந்தைகளை வயதுவாரியாகப் பிரித்து, மாவட்டம் முழுவதும் நீண்ட கால மற்றும் குறுகிய கால 10 பயிற்சி மையங்களை தொடங்கியுள்ளோம். 272 குழந்தைகள் படிக்கிறார்கள். அதில் மேற்கு வங்க குழந்தைகள் மட்டும் 218 பேர்” என்றார்.

வெளிமாநில குழந்தைகளின் கல்விக்கான மையங்களின் தோவாளை வட்டாரத்தின் மைய மேற்பார்வையாளர் ஹேமாவிடம் பேசியபோது, ’’ஆட்சியர் வழிகாட்டுதலின் அடிப்படையில் செங்கல் சூளை அமைந்துள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று அவர்களின் பெற்றோர்களிடம் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் பேசினோம். குழந்தைகளை எங்களை நம்பி அனுப்பி வைப்பதில் அவர்களுக்கு தயக்கம் இருந்தது. வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வரவும் ஏற்பாடு செய்தோம்” என்றார்.

அசத்தும் சுதீப் பிஸ்வாஸ்:

வெளிமாநில குழந்தைகளுக்கு பெங்காலி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் சுதீப் பிஸ்வாஸிடம் பேசியபோது, ’’நான் கொல்கத்தாவில் ஒரு காலேஜில் முதல் ஆண்டு ஆங்கிலம் படிச்சேன். குடும்ப சூழல் காரணமா படிப்பை பாதியில் விட்டுட்டு இங்கே செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்துட்டேன். நான் ஓரளவு இங்கிலீஷ் பேசுவேன்னு யாரோ கலெக்டரிடம் சொல்லிருக்காங்க. அவர்தான் என்னை பெங்காலி வகுப்பு எடுக்கச் சொல்லியிருக்கார்” என்கிறபோதே பிஸ்வாஸின் கண்கள் பனிக்கின்றன.

வெளிமாநில குழந்தைகள் பயிற்சி மையம் செல்வதற்காக இலவசமாகவே வேன் வசதியை செய்து கொடுத்திருக்கிறது அதே பகுதியில் உள்ள செயிண்ட் ஆன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி. இதே போல் இந்தக் குழந்தைகள் கல்வி வெளிச்சம் பெறுவதில் செங்கல் சூளை உரிமையாளர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்

வெளி மாநில குழந்தைகள் மத்தியில் கல்லாமையை இல்லாமையாக்கும் பணியில் கன்னியாகுமரி மாவட்டம் இந்தியாவுக்கே முன் உதாரணமாகத் திகழ்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x