Published : 06 Jun 2017 10:34 AM
Last Updated : 06 Jun 2017 10:34 AM
எழுத்துத் தேர்வில் நம்முடைய அறிவும் திறனும் மட்டுமே சோதிக்கப்படும். ஆனால், நேர்முகத் தேர்விலோ ஒட்டுமொத்த ஆளுமையும் சோதனைக்கு உள்ளாக்கப்படும். ஆகையால், பணிக்கான தேர்வுகளில் எப்போதுமே சவாலானது நேர்முகத் தேர்வுதான்.
தொடக்க நிலைத் தேர்வுகளில் அதிகப்படியான மதிப்பெண்கள் குவித்தாலும் நேர்முகத் தேர்வில் பதற்றமும் மனச்சோர்வும் உண்டாகவே செய்யும். முதலாவதாக நேர்முகத் தேர்வுக்குத் தன்னம்பிக்கையும் கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சரியான பதிலைச் சிறப்பாக வெளிப்படுத்தும் திறனும்தான் அவசியம். அதே நேரத்தில் நேர்முகத் தேர்வைப் பொறுத்தவரை செய்ய வேண்டியவற்றுக்குத் தரும் முக்கியத்துவத்தைத் தவிர்க்க வேண்டியவற்றுக்கும் தர வேண்டும். நேர்முகத் தேர்வில் செய்யக் கூடாதவை இதோ:
வெறும் கையோடு செல்ல வேண்டாம்
வேலைக்கு விண்ணப்பிக்கும்போதே உங்களது முழுமையான விவரங்களை உள்ளடக்கிய ரெஸ்யூமே (Resume) அல்லது கரிக்குலம் வீட்டை (Curriculum Vitae) போன்றவற்றை நிறுவனத்துக்கு அனுப்பியிருப்பீர்கள். அதற்காக நேர்முகத் தேர்வுக்கு அவற்றைக் கொண்டுசெல்லத் தேவை இல்லை என நினைக்க வேண்டாம். உங்களைப் பற்றிய அடிப்படைத் தரவுகளை உள்ளடக்கிய ரெஸ்யூமேவின் சில பிரதிகளுடன் தேர்வு அறைக்குள் நுழைவது நல்லது.
‘நான் எங்கே இருக்கேன்?’ எனக் கேட்காதீர்கள்
உங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு நீங்கள் ஒரு நிறுவனத்தைத் தேடிச் செல்கிறீர்கள். மறுபுறம் அந்தப் பணிக்குத் தேவையான தகுதி உங்களிடம் உள்ளதா என்பதை மட்டுமல்லாமல் தங்களுடைய நிறுவனம் குறித்த புரிதலும் உங்களுக்கு உள்ளதா என்பதை நிறுவனம் சோதிக்க விரும்பும். ஆகையால் நிறுவனம், விண்ணப்பித்திருக்கும் பணி ஆகியவை குறித்த அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. இன்று பல நிறுவனங்கள் இணையத்தில் தங்கள் வலைத்தளத்தில் நிறுவனத்தின் வரலாறு, இலக்கு, கொள்கை உள்ளிட்ட அத்தனை தகவல்களையும் பதிவேற்றிவிடுகின்றன. ஆகையால், முன்கூட்டியே நிறுவனம் பற்றிய விவரங்களை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
தாமதமாகச் செல்லக் கூடாது!
நேரம் தவறாமை என்பதும் அடிப்படை நற்பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆகையால், நேர்முகத் தேர்வுக்குத் தாமதமாகச் செல்வது பாதி மதிப்பெண்ணை இழக்கச் செய்துவிடும்.
காத்திருப்பின்போது பதற்றம் வேண்டாம்
நிறுவனத்தில் நடைபெறும் கருத்தரங்கு அல்லது முக்கியக் கூட்டங்கள் காரணமாகக் காலை நடக்கவிருந்த நேர்முகத் தேர்வு மாலைக்கு ஒத்திவைக்கப்படலாம். அத்தகைய சூழலில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். அதை விடுத்துப் பதற்றமாக நடந்துகொள்ளும்பட்சத்தில் நீங்கள் நிறுவனத்தைக் குறை சொல்லும் தொனி ஏற்பட்டுவிடக்கூடும்.
மனம் தளர வேண்டாம்
எத்தனை திறமை வாய்ந்தவராக இருந்தாலும் போட்டிக்குப் பலர் இருப்பதைக் கண்டவுடன் மனம் தளரக்கூடும். அத்தகைய எதிர்மறையான சிந்தனை உங்களுடைய உடல் அசைவிலும் உரையாடலிலும் பிரதிபலிக்கும். ஆகையால் ‘சவாலே சமாளி’ அணுகுமுறை அவசியமாகிறது.
‘ஹலோ’ வேண்டாமே!
நாமும் கைபேசியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல ஆகிவிட்டோம். ஆனால், நேர்முகத் தேர்வு நடந்துகொண்டிருக்கும்போது கைபேசியில் அழைப்பு வந்தாலோ அல்லது வாட்ஸ் அப் தகவல் வந்தாலோ அது உங்களுக்கு மட்டுமல்ல; தேர்வு நடத்துநருக்கும் கவனச் சிதறலை ஏற்படுத்திவிடும். தேர்வு அறைக்குள் நுழையும் முன்னர் உங்களுடைய கைபேசியை அணைத்துவிடுவது அல்லது சத்தம் எழுப்பாத நிலையில் வைத்திருப்பது நல்லது.
சுற்றும் முற்றும் பார்க்க வேண்டாம்
உங்களை நோக்கிப் பாயும் கேள்விக் கணைகளை எதிர்கொள்வது மட்டுமல்ல; கேள்வி கேட்பவரையும் நேருக்கு நேர் பார்த்துப் பதில் அளிப்பதும் முக்கியம். உள்ளுக்குள் பதற்றமாக இருந்தாலும் கண் நோக்கிப் பதில் அளித்தல் சிறப்பான அணுகுமுறை. அதைவிடுத்துச் சுற்றும் முற்றும் பார்ப்பதோ அல்லது மேஜையில் இருக்கும் பொருட்களைப் பார்த்துக்கொண்டே பதில் அளிப்பதோ தவறு.
தலைக்கனம் வேண்டாம்
தன்னம்பிக்கை எவ்வளவு அவசியமோ அதே அளவுக்குத் தலைக்கனம் அநாவசியம். ‘எனக்கு எல்லாமே தெரியும்!’ என்கிற மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும்.
‘நான் வேற மாதிரி’ என்று சொல்லாதீர்கள்!
நீங்கள் தனித்துவம் வாய்ந்தவராக இருப்பதை உங்களுடைய தகுதி, திறன் மூலமாக நிரூபியுங்கள். அதைவிடுத்து வித்தியாசமாக இருப்பதாக நீங்களே சொல்லிக்கொள்வது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
குறை சொல்லாதீர்கள்
ஏற்கெனவே இருக்கும் வேலையிலிருந்து விலகிப் புதிய வேலைக்குச் செல்லுதல் வழக்கமான ஒன்றுதான். ஆனால், நீங்கள் பணிபுரிந்த நிறுவனத்தையோ முதலாளியையோ குறை சொல்வீர்களானால் அது உங்களைப் பற்றிய மோசமான பிம்பத்தை உருவாக்கும். இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் புதிய நிறுவனத்தினரைக் கவரப் பயன்படுத்துங்கள்.
கேள்வி கேட்கத் தயங்காதீர்கள்
நேர்முகத் தேர்வின் இறுதிக்கட்டமாக, “நீங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா?” என்கிற கேள்வி எழலாம். அப்போது நிறுவனம் குறித்தும் பணி குறித்தும் உங்களுக்கு இருக்கும் ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெறத் தயங்காதீர்கள்.
இந்தப் பணியில் இணைய உங்களுக்குள் இருக்கும் உத்வேகத்தைத்தான் அது வெளிப்படுத்தும். நிச்சயமாகக் கூடுதல் மதிப்பெண் பெறவும் கைகொடுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT