Last Updated : 17 Mar, 2014 12:00 AM

 

Published : 17 Mar 2014 12:00 AM
Last Updated : 17 Mar 2014 12:00 AM

சவாலான தடயவியல் படிப்பு

நீங்கள் சவாலான படிப்பை விரும்பக்கூடியவரா? சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவரா? அப்படியானால் தடயவியல் (Forensic science) அல்லது தடய அறிவியல் படிப்பு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தில்லான சவாலான படிப்பு இது. அறிவியல் உதவியுடன் குற்றங்களுக்கான ஆதாரங்களை நாடி பிடித்துப் பார்த்து, பகுத்தாய்ந்து காவல் துறைக்கும், நீதித் துறைக்கும் உதவிகரமாக இருக்கும் இப்படிப்புக்கு எல்லாக் காலங்களிலும் வரவேற்பு உண்டு.

தடயவியல் என்ற இந்தப் படிப்பு மானிடவியல், வேதியியல், உயிரியல், இயற்பியல் மற்றும் நோய் அறிகுறியியல் எனப் பல துறைகளை உள்ளடக்கியது. குருதி, எச்சில், மயிர், உடலின் பிற திரவங்கள், வாகனச் சக்கரங்கள், காலணிகளின் அச்சு, கைரேகை, காலடித் தடங்கள், வெடிபொருள்கள், மதுபானங்கள் என எதுவாக இருந்தாலும், அதை அலசி ஆராய்ந்து துப்புகளை அள்ளித் தருவதுதான் தடயவியல் துறையினரின் முக்கியப் பணி. இது தவிரக் கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும்.

மருந்தியல், சோதனை, கள அறிவியல் என மூன்று பிரிவுகளில் தடயவியலின் பணி இன்றியமையாதது.

காவல்துறை, சட்ட அமலாக்கத் துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் முதலியன தடய அறிவியல் இத்துறையை நாடுகின்றன. எனவே தடயவியல் துறையில் வேலைக்குப் பஞ்சமில்லை. வெளி நாடுகளிலும் இப்படிப்புக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பாகவும், அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்பாகவும் தடயவியல் வழங்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தடயவியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம். ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம், பண்டல்கண்ட் பல்கலைக்கழகம், கர்நாடகப் பல்கலைக்கழகங்களில் தடய அறிவியல் படிப்பு வழங்கப்படுகிறது. டெல்லியில் உள்ள லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயன் தேசிய தொழில் நுட்ப கழகத்தில் கிரிமினாலாஜி மற்றும் தடய அறிவியல் படிப்பு வழங்கப்படுகிறது.

முதுநிலைப் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளங்கலையில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல் படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x