Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM
ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுகள், விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மூத்த விரிவுரையாளர்கள், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
1 முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வை நடத்தும் பொறுப்பும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 1.50 லட்சம் பேரும், ஆகஸ்ட் மாதம் நடந்த தகுதித் தேர்வை 6.50 லட்சத்துக்கு அதிகமானோரும் எழுதினர்.
தகுதித் தேர்வால் கணிசமாக வசூல்
போட்டித் தேர்வுகள், அதற்கான விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது. இதில் கணிசமான தொகை இதுவரை நடத்தப்பட்ட 3 தகுதித் தேர்வுகள் மூலமாக மட்டுமே கிடைத்துள்ளது.
தேர்வுக்கான விண்ணப்ப படிவம் விலை 50 ரூபாய். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.250. மற்ற அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் ரூ.500. விண்ணப்பம் அச்சடிப்பு செலவு, தேர்வு மையங்களுக்கான செலவு, தேர்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் ஊதியம், விடைத்தாள் மதிப்பீடு செலவு என அனைத்து செலவினங்களும் போக இருப்புத்தொகையாக ஆசிரியர் தேர்வு வாரியம்வசம் ரூ.54 கோடி உள்ளது. இதை எந்த வங்கியில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று தேர்வு வாரியம் கணக்குபோட்டு வருகிறது.
கட்டணம் குறைக்கப்படுமா?
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ரயில்வே தேர்வு வாரியம், ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டணம் பல மடங்கு அதிகம். தனியார் கம்பெனிகள் போல லாப நோக்குடன் செயல்படாமல், தேர்வுக் கட்டணத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் குறைக்க வேண்டும் என்கின்றனர் தேர்வு எழுதுபவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT