Published : 23 Mar 2014 11:03 AM
Last Updated : 23 Mar 2014 11:03 AM
அவர் பறவைகளைப் பயிற்றுவிப்பதில் சிறந்த நிபுணர். அவரது பண்ணையில் இருந்து பறவைகள் அடிக்கடி திருடுபோயின. எனவே, அவரது நலம் விரும்பிகள் உயர் ரக வேட்டை நாயை அவருக்குப் பரிசாக அளித்தனர். சில மாதங்களுக்குப் பிறகு பண்ணைக்குச் சென்றவர்கள் அந்த நாயைக் காணாமல் அவரிடம் விசாரித்தனர். அதற்கு பறவைப் பயிற்சியாளர் சொன்னார்.. ‘‘அந்த நாய் சரியில்லை. எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும் பறக்க மாட்டேன் என்கிறது. அதான் விரட்டிவிட்டேன்’’ என்றாராம்.
நம் கல்வி முறையும் இப்படித்தான் இருக்கிறது. ஒருவரது இயல்பான திறமையை அறிந்து அதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, அவருக்கு வரவே வராத ஒரு திறனை வற்புறுத்தி வளர்க்கக் கூடாது. ஒரு சிலர் ஒரு துறையில் நிபுணராக இருக்கின்றனர். வேறு சிலரால் அதில் குறைந்தபட்சத் திறனைக்கூட அடைய முடியவில்லை. ஏன்? ஆர்வமும் வாய்ப்பும் பயிற்சியும் முக்கிய காரணங்கள் என்றாலும் இயல்பிலேயே அந்தத் திறமை அமைந்திருக்க வேண்டியது அதைவிடமுக்கியமாகும். சூழ்நிலைகளும் முயற்சியும் அத்திறமையைப் பட்டை தீட்டுகின்றன. இயல்பிலேயே திறமை இருக்கும் விஷயங்களில்தான் நமக்கு ஆர்வமும் ஏற்படுகிறது. அதில் விடாமுயற்சியுடன் ஈடுபடுகிறோம். விஸ்வநாதன் ஆனந்துக்கு ஏன் கிரிக்கெட்டில் ஆர்வம் வரவில்லை? அதுபோலத்தான்.
நம் மூளையில் உள்ள நரம்புகளின் அமைப்பு, எண்ணிக்கை போன்றவை நம் ஜீன்களால் கரு உருவாகும்போதே நிச்சயிக்கப்பட்டுவிடுகின்றன. மூளையில் ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு பணிகள் இருக்கின்றன. விளையாட்டுக்கு, விஞ்ஞானத்திற்கு, ஆன்மிகத்துக்கு, புதிர்களைக் கண்டுபிடிப்பதற்கு என்று பல ஏரியாக்கள் இருக்கின்றன. மூளையில் எந்தப் பகுதி பலமாக இருக்கிறதோ அந்தத் திறமை நமக்கு இயல்பாக வருகிறது. சூழலும், பயிற்சியும் அமையும்போது அது பிரகாசித்து முழுமையடைகிறது. இதை ஆங்கிலத்தில் Nature and Nurture (பிறப்பு, வளர்ப்பு) என்கிறார்கள்.
பயிற்சி ஒரு மனிதனை முழுமையாக்குகிறது (Practice makes man perfect) என்பது உண்மைதான். முழுமையாக்கப் பயிற்சி அவசியம். ஆனால் பயிற்சி மட்டுமே அனைத்தையும் தீர்மானிப்பதில்லை. மா மரமா, கொய்யா மரமா என்பது விதையைப் பொருத்தது. அது எப்படி வளர்க்கிறது, எப்படிக் காய்க்கிறது என்பது சூழலைப் பொருத்து அமைகிறது.
ஆகவே, ‘இந்தப் படிப்பு வருமானம் தரும். இதைப் படிக்கவேண்டும் என்று என் மாமா சொல்கிறார்’’ என்றெல்லாம் முடிவெடுக்காமல் உங்களுக்கு இயல்பிலேயே சிறப்பாக வருவதை, ஆர்வமானதைத் தேர்ந்தெடுங்கள். ‘‘ஏண்டா திலீப், படிக்காம கீ போர்டே கதியா இருக்கே?” என்று ஒரு தாய் திட்டியிருந்தால் நமக்கு ஒரு ஏ.ஆர்.ரஹ்மான் கிடைத்திருக்க மாட்டார்.-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT