Published : 28 Apr 2014 10:00 AM
Last Updated : 28 Apr 2014 10:00 AM
மானுடவியல் என்ற படிப்பைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆங்கிலத்தில் ‘ஆந்த்ரபாலஜி’ என்று சொல்வார்கள். மனிதனின் பல்வேறு நிலை, பரிணாம வளர்ச்சி, கலாச்சார மாறுபாடு ஆகியவற்றை ஆராய்வதும் வரையறுப்பதுமே இப்படிப்பின் அடிப்படை.
படிப்பு பிரிவுகள்
மனித இனம் தோன்றிய நாள் முதல், இப்போது மனிதன் அடைந்துள்ள மாற்றங்களைச் சமூக ரீதியாகவும், உடற்கூறு ரீதியாகவும் ஆராய ஆர்வம் உள்ளவர்களுக்கு இது நல்ல படிப்பாகும். இப்படிப்பில் பல பிரிவுகள் உள்ளன. சமூகக் கலாச்சார மானுடவியல், வரலாற்று மானுடவியல், உயிரியல் மானுடவியல், துணைநிலை மானுடவியல், மொழியியல் மானுடவியல் எனப் பிரிவுகள் உள்ளன. இப்படி ஒவ்வொரு கோணத்திலும் மானுடவியலை ஆராய்வது இப்படிப்பின் சிறப்பம்சம்.
வரலாறு, புவியியல் போன்ற பிரிவுகளில் ஆர்வமுள்ள மாணவர்களும், அறிவியல் பாடம் எடுத்துப் படித்துப் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்களும், இளநிலையில் ஆந்த்ரபாலஜி படிப்பைத் தேர்வு செய்து படிக்கலாம். இந்தப் படிப்பில் அதிகப் பொறுமையும், ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருப்பதும் மிகவும் முக்கியம். இப்படிப்பில் ஏற்கனவே உள்ள விஷயத்தோடு, மாணவர்கள் ஆராயும் புதிய விஷயத்தை ஒப்பிட்டு, அதனை மற்றவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேல் படிப்பு
இளநிலை பட்டப்படிப்பில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெறலாம். அதாவது பி.ஏ. ஆந்த்ரபாலஜி அல்லது பி.எஸ்சி., ஆந்த்ரபாலஜி, அதன் பிறகு முதுநிலைப் பட்டப்படிப்பு, எம்.பில். படித்து, முனைவர் பட்டமும் பெறலாம்.
வேலை வாய்ப்பு
இந்தியாவில் ஆந்த்ரபாலஜி துறைக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன. உலகச் சுகாதார அமைப்பு, யுனெஸ்கோ, யுனிசெப் போன்ற முக்கிய அமைப்புகளில் வேலை வாய்ப்பு பெறலாம். ஆசிரியர், பேராசிரியராகப் பணியாற்றலாம். சுகாதாரத் திட்டம், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைச் செயல்படுத்துதல் ஆகிய பணிகளில் வேலைவாய்ப்பு உண்டு. சமூக ஆராய்ச்சி, பெரிய அளவில் திட்டப் பணிகளைச் செயல்படுத்தும்போது அதற்கான திட்ட அறிக்கையைத் தயாரிப்பில் ஆந்த்ரபாலஜி முடித்தவர்களின் தேவைப்படுவார்கள்.
சென்னைப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT