Published : 03 Jan 2017 10:22 AM
Last Updated : 03 Jan 2017 10:22 AM
கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்புகளைத் தேடிப் பெரும்பாலானோர் புகுந்துவிடுவதே வழக்கம். ஆனால், சிலருக்கு இதில் விருப்பமில்லாமல் தனியே தொழில் தொடங்க வேண்டும் என்னும் ஆர்வம் முளைக்கும். தொழில் தொடங்குவதற்கு ஆசைப்பட்டு அது தொடர்பான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள். பொதுவாகவே தொழில் தொடங்குவது என்பதில் நம்மவர்களுக்கு அதிக ஆர்வம் இருப்பதில்லை. தொழில் முனைவதற்கு மட்டுமல்ல; அது தொடர்பான ஆய்வுப் படிப்புகளில் கூட அநேகர் ஆர்வம் காட்டுவதில்லை என்ற உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது ஓர் ஆய்வு.
அதிகம் படித்தவர்கள் குறைவு
காந்திநகரில் அமையப்பெற்றிருக்கும் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றின் உறுப்பினரான கவிதா சக்ஸேனா என்பவர் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார். கடந்த 16 ஆண்டுகளில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 740 பல்கலைக்கழகங்களில் முனைவர் ஆய்வுப் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டோர் குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை அவர் மேற்கொண்டிருக்கிறார். இதன்படி, வெறும் 66 பல்கலைக்கழகங்களில் மட்டுமே தொழில்முனைவோர் குறித்த முனைவர் ஆய்வுப் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த 16 ஆண்டுகளில் வெறும் தொழில்முனைவோர் குறித்த முனைவர் ஆய்வுப் பட்டத்தை 177 பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பட்டங்களைப் பெற்றவர்களில் ஆண்கள் 104 பேர், பெண்கள் 73 பேர். இந்த 177 பேரில் 167 பேர் ஆய்வை ஆங்கிலத்திலும் ஏனைய 10 பேர் இந்தியில் மேற்கொண்டிருக்கிறார்கள்.
முனைப்பான தொழில்முனைவோர் தேவை
மாநிலங்களைப் பொறுத்தவரை மகராஷ்டிரத்தில் 25 பட்டங்களும், கர்நாடகத்தில் 18 பட்டங்களும், மத்தியப் பிரதேசத்தில் 15 பட்டங்களும், ஆந்திரப் பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் தலா 12 பட்டங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. தொழில்முனைவோர் குறித்த ஆய்வின் இயல்பையும், தொழில்முனைவோர் ஆய்வின் திசையையும் அறிவதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. தொழில்முனைவோர் முனைப்புடன் அதில் ஈடுபடும்போதுதான் இந்த வகையான ஆய்வும் அதிகரிக்கும் என்று மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT