Last Updated : 23 Sep, 2013 04:26 PM

 

Published : 23 Sep 2013 04:26 PM
Last Updated : 23 Sep 2013 04:26 PM

எது உங்கள் பாதை?

என்ன படிக்க வேண்டும் என்பதே ஒரு அறிவுதான். என்ன படிப்புப் படித்தால் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும்? கை நிறைய சம்பளம் கிடைக்கும்? இவை போன்ற கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்துகொண்டே இருக்கும். என்ன படிப்புப் படிக்கலாம் என்பதில் மாணவர்களுக்குத் தெளிவான சிந்தனை இருப்பதில்லை. இன்னும் தேர்வே தொடங்கவில்லையே, மேற்படிப்பு குறித்துப் பின்னால் பார்ப்போம் என இருந்துவிட முடியாது. ஏனெனில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகிய நிலையங்கள் இன்னும் சில நாட்களில் சேர்க்கை விண்ணப்பங்களை விநியோகிக்கத் தொடங்கிவிடும்.

கல்லூரிப் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முன் இப்போது இருக்கும் கல்வி வாய்ப்புகள் குறித்து முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பொறியியல், மருத்துவம், வணிகவியல், கலைத்துறை, நுண்கலை, சிறப்புத் தொழில்நுட்பப் படிப்புகள் இவற்றைக் குறித்து இணையத்திலிருந்தோ கல்வி ஆலோசகர்களிடமிருந்தோ தெரிந்துகொள்ளலாம். ஏனெனில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடும் சமயத்தில்தான் நாம் ‘அந்தப் படிப்பைத்’ தேர்ந்தெடுத்திருக்கலாம் என்ற எண்ணம் வரும். இவற்றைத் தவிர்க்கக் கல்வி வாய்ப்புகள் குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம். பெரும்பான்மையானோர் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இது மாணவர்கள் செய்யும் பொதுவான தவறு. அவற்றை விட்டுவிட்டுத் தனித்தன்மையான தொல்லியல், நுண்கலை போன்ற படிப்புகளையும் தேர்வுசெய்யலாம். இது போன்ற துறைகளைத் துணிச்சலாக தேர்ந்தெடுத்தவர்கள் இன்று மனநிறைவுடன் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் மனநிலையையும் விருப்பத்தையும் அறிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் கப்பல் துறை போன்ற சில படிப்பு முடித்தவர்களுக்கு உள்நாட்டில் வேலை கிடைக்காது. வேறு சில படிப்பு முடித்தவர்களுக்கு வெளி மாநிலத்தில் மட்டுமே வேலை வாய்ப்பு இருக்கும். அதனால் தங்கள் ஊரைவிட்டு வெளியேறி வாழ முடியாத இயல்பு உள்ளவர்கள் இவற்றைத் தவிர்க்கலாம். நம் மாநிலத்தில் வேலை பெற்றுத்தரக்கூடிய படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

அதிக மதிப்பெண் கிடைக்கவில்லை எனக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கலாம். அனைவரும் விரும்பிப் படிக்கும் துறைகளையே தேர்ந்தெடுப்பதால் நிகழும் போட்டியை இதன் மூலம் தவிர்க்கலாம்.

12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறோம். நம்மால் அகில இந்திய அளவிலான மத்திய அரசுத் தேர்வுகள் எழுத முடியாதா என்னும் தாழ்வு மனப்பான்மை சிலருக்கு இருக்கலாம். இதற்கு அவசியமே இல்லை. 12ஆம் வகுப்பில் குறைவாக மதிப்பெண்கள் பெற்றாலும் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பட்சத்தில் மத்திய அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்திய அளவில் கிட்டத்தட்ட 60 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. சட்டக் கல்லூரிகள், கலை - அறிவியல் கல்லூரிகள், ஆராய்ச்சி, மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என நாட்டில் உள்ள சிறந்த அரசுக் கல்லூரிகளுக்கான தேர்வுகள் இவை. மாணவர்கள் இவற்றைக் கவனத்துடனும் நம்பிக்கையுடனும் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

படிப்பு என்பது நமக்கு நல்ல பண்புகளைக் கொடுக்கக்கூடியது. நல்ல பண்புகளில் தன்னம்பிக்கையும் முக்கியும். அந்தத் தன்னம்பிக்கையுடன் நம் விருப்பப் பாடமும் சேரும் பட்சத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பாதையே நம் ராஜபாட்டையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x