Published : 21 Dec 2013 12:00 AM
Last Updated : 21 Dec 2013 12:00 AM
பிளஸ்-2 முடித்துவிட்டு என்னென்ன படிக்கலாம்? எந்தெந்தக் கல்லூரியில் சேரலாம்? என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 9-ம் வகுப்பில் இருந்தே வழிகாட்டி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மத்தியில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. பிளஸ்-2 முடித்த பின்னர் எந்தெந்த படிப்புகளில் சேர வேண்டும்? அதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள், என்னென்ன நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும்? என்பது குறித்து அவர்கள் நன்கு அறிந்துவைத்துள்ளனர். இதற்காக கீழ்நிலை வகுப்புகளில் இருந்தே அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கல்வி நிபுணர்கள், துறை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு கருத்தரங்கு, பயிலரங்கம் நடத்தப்படுகின்றது.
வேலை வாய்ப்பு தகவல்கள்
அதுமட்டுமின்றி முக்கிய படிப்புகள், நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகைகள் தொடர்பான தகவல்கள் நாளிதழ்களில் வெளியாகும்போது அதை பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஒட்டி வைக்கின்றனர். இதனால் கல்வி, வேலைவாய்ப்பு தகவல்களை மாணவர்கள் எளிதாக தெரிந்துகொள்வர்.
பல பிரபல தனியார் பள்ளிகளில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கே ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வு குறித்த விவரம் தெரிந்துவிடுகிறது. எனவே, அவர்கள் அப்போதிருந்தே ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு மனதளவில் தயாராகத் தொடங்கிவிடுன்றனர். பிளஸ்-2 படிக்கும்போது முழு விவரங்களும் அறிந்தவர்களாக இருப்பதால் எளிதாக நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் பயிற்சி
இந்நிலையில், தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த வழிகாட்டிப் பணியை 9-ம் வகுப்பில் இருந்தே தொடங்க முடிவு செய்திருக்கிறோம். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடித்த பிறகு என்னென்ன படிக்கலாம்? எந்தெந்த கல்லூரிகளில் சேரலாம்? உடனடி வேலைவாய்ப்புடன் கூடிய படிப்புகள் எவை? மாணவர் சேர்க்கை நடைமுறைகள், எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள், அதற்கு தயாராகும் முறை குறித்து கல்வியாளர்களையும் நிபுணர்களையும் அழைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு
நன்றாக படிக்கும் பிளஸ்-2 மாணவர்களை ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறும் அதுதொடர்பான தகவல்களை ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிப்பு பலகையில் வைக்குமாறும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT