Published : 24 Jan 2017 10:44 AM
Last Updated : 24 Jan 2017 10:44 AM
சட்டை பேண்ட் அணிந்து, சீரியஸான முகபாவனையோடும், கறாரான பார்வையோடும் ஒரே இடத்தில் நின்று பாடம் எடுக்கும் ஆசிரியர்களைத்தான் பார்த்திருப்போம். ஆனால் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் பட கேப்டன் ஜாக் ஸ்பாரோ போல, பாட் மேன் பட ஜோக்கர் போல வேடமிட்டுத் தடாலென மேலிருந்து கீழே குதித்து, ஆடிப் பாடி நடித்துப் பாடம் எடுக்கிறார் ந.குகன்.
அவர் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் ஆரம்பப் பள்ளித் துளிர்கள் அல்ல. பரபரப்பான இளைஞர்கள். மதுரையைச் சேர்ந்த குகன் ‘லிட்ரேட் ஃபிராக்’ என்கிற அமைப்பின் மூலம் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களிலிருந்து தொடங்கி வேலை தேடும் இளைஞர்கள்வரை பணி வாழ்க்கைக்கான பயிற்சி மற்றும் மேம்பாடு வகுப்புகள் நடத்திவருகிறார். இவருடைய வகுப்புகள் வெறும் வகுப்பறையோடு நின்றுவிடுவதில்லை. படைப்பாற்றலுக்கும் அதில் இடம் உண்டு!
வகுப்பறையில் படைப்பாற்றல்
கடந்த வாரம் கேரளத்தின் கொச்சி நகரில் தொடங்கிய சர்வதேச நவீன கலை கண்காட்சி மற்றும் பட்டறையான ‘பினேல் 2016’-க்கு (Biennale 2016) மதுரையிலிருந்து பிளஸ் டூ மாணவர்களை அழைத்துச் சென்றிருந்தார். அவருடன் சென்ற மாணவர்களில் பெரும்பாலானோர் உயிரியல், கணிதம் அல்லது கணினி அறிவியல் படிக்கும் பள்ளி மாணவர்களே. கவின் கலை தொடர்பான நிகழ்ச்சியைப் பார்வையிட எதற்கு அறிவியல் மாணவர்கள்? “பொதுவாகவே உயிரியல் படிக்கும் மாணவர்களுக்கு அழகாக வரையும் திறனும், நல்ல படைப்பாற்றலும் இருக்கும். அதே நேரத்தில் அவர்கள் எல்லோருக்கும் மருத்துவர், பொறியியலாளர் ஆகும் கனவு இருப்பதில்லை. ஆனால் அவற்றுக்கு மட்டும்தான் எதிர்காலம் உள்ளது என்கிற எண்ணத்தில் சிக்கியுள்ளார்கள். அதற்குச் சக மாணவர்களின் விருப்பம், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் கொடுக்கும் உளவியல்ரீதியான அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன. கனவுகளுக்கு இடம் தரும் படைப்பாற்றல் சார்ந்த வெற்றிகரமான துறைகளை இவர்களுக்கு அடையாளம் காட்டுவதே எனது லட்சியம்” என்கிறார் குகன்.
ஐயோ நுழைவுத் தேர்வா!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனிங் (NID), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT), கட்டிடக்கலை படிப்புகளில் சேரச் சிறப்பு பயிற்சி அளிக்கிறார் குகன். இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தொழில்நுட்பப் படிப்புகளுக்காக மட்டுமே பரவலாக அறியப்படும் இந்தியாவின் புகழ் வாய்ந்த ஐஐடியில் உட்புற வடிவமைப்பு, புராடக்ட் வடிவமைப்பு, ஜவுளி வடிவமைப்புக்கான படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவை கற்பனைத் திறனுக்கும் படைப்பாற்றலுக்கும் முக்கியத்துவம் அளிப்பவை. அரசு கல்வி நிறுவனங்கள் இவற்றை வழங்குவதால் கல்விக் கட்டணமும் குறைவு. ஆனால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனுமதி கிடைக்கும்.
“ஐயோ நுழைவுத் தேர்வா!” என அலற வேண்டாம். இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் படைப்பாற்றலுக்கு அளிக்கப்படுகிறது. உதாரணமாக, ‘வானத்தில் ஒரு கழுகு வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கழுகு நீங்கள்தான் எனக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது நீங்கள் உங்களுடைய பார்வையில் தாஜ் மஹாலை வரைக’. ‘புவி ஈர்ப்பு விசை அற்ற ஒரு அறையில் ஒரு பூனை, ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் எப்படி இருக்கும் என வரைக’ - இப்படியான கேள்விகள் கேட்கப்படும். இவற்றைக் கற்பனைக்குக் கொண்டுவந்து காட்சிப்படுத்த முதலில் நம்முடைய கற்பனையின் எல்லையைத் தாண்டி, விளிம்புக்கு அப்பால் யோசிக்க வேண்டும். அதற்கு வகுப்பறை படிப்பைத் தாண்டிய புதுமையான கற்பித்தல் முறையைக் கையாள்கிறார் குகன்.
அவை:
> 2டி, 3டி பார்வையில் வரையும் திறனை மேம்படுத்தத் திருமலை நாயக்கர் மஹால், யானை மலை உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று வெவ்வேறு கோணத்தில் பார்த்து வரையக் கற்பித்தல். அதே நேரத்தில் அதன் வரலாற்றையும் சுவாரசியமாக விவரித்தல்.
> படைப்பாற்றல் திறன் தொகுப்பை மேம்படுத்தச் சில பொருட்களைக் கொடுத்து அவற்றை வெவ்வேறு விதமாக அடுக்கி ஒளிப்படம் எடுக்கப் பழக்குதல்.
> உலக சினிமா திரையிடல், செவ்வியல் இலக்கியங்களைப் பிரபல சிந்தனையாளர்களை அழைத்து அறிமுகப்படுத்துதல்.
> ஆண்களும் பெண்களும் சகஜ மாக நிகழ்காலச் சமூக, அரசியல், கலா சார நிகழ்வுகள் தொடர்பாகத் தலைப்பு களில் விவாதிக்கப் பயிற்சி அளித்தல்.
கட்டுக்கடங்காத ஆற்றல்
“கட்டிடக் கலை, வடிவமைப்பு சார்ந்த படிப்புகளைப் பணம் படைத்தவர்கள் மட்டும்தான் படிக்க முடியும், கவின் கலை படித்தால் எதிர்காலமே இல்லை - என்பன போன்ற பல தவறான நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் இன்றைய நிலையில் ஓவியம், ஒளிப்படக் கலை, உள்வடிவமைப்பு, அனிமேஷன் திறன் கொண்டவர்களுக்குப் பணியும் பணமும் குவிகிறது. சொல்லப்போனால் ஹாலிவுட் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பெங்களூரு, ஹைதராபாத்தில்தான் நடைபெறுகின்றன” என உற்சாகமாகப் பேசுகிறார் குகன்.
இவை மட்டுமல்லாமல் தொழில் முனைவோருக்குத் தமிழக அரசு நடத்தும் நியூ ஆந்த்ரபிரனர்ஷிப் கம் எண்டர்பிரைஸ் டெவலப்மெண்ட் ஸ்கீமில் (NEED) சிறப்புப் பயிற்சியாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சந்தைப்படுத்துதல், விற்பனை உள்ளிட்ட சவாலான பணிகளுக்கும் நூதனப் பயிற்சிகளை அளித்துவருகிறார். அதிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 75 சதவீதம் கட்டணச் சலுகையில் இத்தனையும் கற்றுத் தருகிறார். இத்தனை திறமைகள் இருந்தும் சிறுநகரில் வசிப்பது ஏன் எனக் கேட்டால், “அறிவாளிகளும் திறமைசாலிகளும் பெருநகரங்களில்தான் இருப்பார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சிறுநகர இளைஞர்களிடம் கட்டுக்கடங்காத ஆற்றல் குவிந்து கிடக்கிறது. அவர்களுக்குத் தேவை தன்னம்பிக்கையும், ஊக்கமும், உத்வேகமும்தான். அதை வெளிகொணரவே நான் செயல்படுகிறேன்” என்கிறார் இந்த அரிதாரம் பூசிய ஆசிரியர்.
எங்கே, எப்படி?
JEE B.Arch-ல் சேர எழுத வேண் டிய தேர்வு நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்க்கிடெக்சர் (NATA)
> அகமதாபாத், குருஷேத்திரா, விஜயவாடா ஆகிய நகரங்களில் NID நிறுவனம் உள்ளன. அவற்றில் அனிமேஷன், விஷுவல் கம்யூனிகேஷன், இன்டீரியர் டிசைனிங் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
> FID-ல் ஜுவல்லரி டிசைன், இன்டீரியர் டிசைனிங், ஃபர்னிச்சர் டிசைனிங் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
> ஐஐடி குவாஹாத்தி, மும்பை மற்றும் ஐஐடிஎன் (IITN) ஜபல்பூர் ஆகியன வழங்கும் இன்டீரியர் டிசைனிங், புராடக்ட் டிசைனிங், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங் படிப்புகளில் சேர வடிவமைப்புக் கான இளநிலை பொது நுழைவுத்தேர்வான UCEED எழுத வேண்டும்.
இவற்றில் கட்டிடக் கலையைத் தவிரப் பிற படிப்புகளை அறிவியல் பிரிவு மாணவர்கள் மட்டுமின்றி கலை, இலக்கியம், வணிகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் படிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT