Published : 14 Mar 2014 12:46 PM
Last Updated : 14 Mar 2014 12:46 PM
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 14,15) தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ‘சிறப்பு அனுமதி திட்டத்தின்’ (தட்கல் திட்டம்) கீழ் ஆன்-லைனில் மார்ச் 14, 15 ஆகிய இரு நாட்களில் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு மையங்கள்
தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. வருவாய் மாவட்ட வாரியாகஅமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்கள் மூலம் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு மையங்களின் விவரத்தை தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.tndge.in) அறிந்து கொள்ளலாம்.
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே கருத்தியல் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அறிவியல் பாடத்திற்கான செய்முறைப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்து செய்முறை பயிற்சிவகுப்புகளில் கலந்து கொண்டு, ஆனால் கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் விடுபட்டுள்ள தனித்தேர்வர்கள் தற்போது கருத்தியல் தேர்வுக்கு ‘சிறப்பு அனுமதி திட்டத்தின்’கீழ் விண்ணப்பிக்கலாம்.
அத்தகைய தேர்வர்கள் செய்முறை வகுப்புகள் நடைபெற்ற சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது மாவட்டக் கல்விஅலுவலரிடமிருந்து செய்முறைபயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டதற்கான உரிய ஆதாரத்தைப் பெற்று கருத்தியல் தேர்வு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், தோல்வியடைந்த பாடங்களில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கட்டணம்
தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை ரூ.125/-. இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500/- மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- உட்பட மொத்தம் ரூ.675/-ஐ பணமாக மட்டுமே முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவு செய்த ஒருங்கிணைப்பு மையங்களில் மட்டுமே செலுத்த வேண்டும்.
ஏற்கெனவே எஸ்.எஸ்.எல்.சி.தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள், தோல்வியுற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக முதன்முறையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதுவோர், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான அசல் மாற்று சான்றிதழ், அசல் ஈ.எஸ்.எல்.சி. சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT