Published : 14 Feb 2017 12:22 PM
Last Updated : 14 Feb 2017 12:22 PM
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பயணிக்கும்போது நம்மைப் போலவே இயல்பாகச் சிந்திக்க முடியுமா, செயல்பட முடியுமா?
விண்வெளிப் பயணம் என்பது நிச்சயமாகக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான். ஏனென்றால், பூமியில் நிலவும் புவியீர்ப்பு விசை விண்வெளியில் இருக்காது. நம்முடைய உள்காதில் உள்ள புலனுணர்வு அமைப்பு, புவியீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு நம்முடைய உடலைச் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த அமைப்பு விண்வெளியில் செயல்படாது.
அதன் காரணமாக விண்கலங்களுக்குள் எது நேராக இருக்கிறது, எது தலைகீழாக இருக்கிறது என்பதை மூளையால் உணர்ந்துகொள்ள முடியாமல் போகும். தனக்கும் ஒரு பொருளுக்கும் இடையே உள்ள தொலைவைக் கணிக்கும் திறன் விண்வெளி வீரர்களுக்குப் பாதிக்கப்படும். ஒரு பொருளின் பருண்மையை மூளை உணர்ந்துகொள்ளும் திறனும் பாதிக்கப்படும். விசித்திரமான புலனுணர்வு அனுபவங்கள் ஏற்படும்.
எதுவும் நிலையில்லை
எப்படியென்றால், தன்னைச் சுற்றியுள்ள எல்லாமே திடீரென்று தலைகீழாகக் கவிழ்ந்து விட்டதைப் போன்ற பிரமை ஏற்படும். சில நேரம், தாங்களே தலைகீழாகத் தொங்குவது போன்ற எண்ணமும் எட்டி பார்க்கும். இதனால் ஏற்படும் அதீத அயர்ச்சியுடன், விண்கலம் இயங்குவதால் ஏற்படும் தொடர்ச்சியான ஓசை, தனிமை, ஒரு சிறிய அறைக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாத தன்மையால் ஏற்படும் அச்சம் (Claustrophobia) எனப் பல்வேறு அம்சங்கள் விண்வெளி வீரர் / வீராங்கனைகளைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.
நம்மைப்போல் இயல்பாகச் சிந்திப்பது, நிச்சயம் அவர்களுக்குக் கடினமாகவே இருக்கும். அதன் காரணமாகவே, விண்வெளி வீரர்-வீராங்கனைகள் விண்வெளிப் பித்து அல்லது விண்வெளி மந்தநிலையால் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT