Published : 21 Feb 2017 10:51 AM
Last Updated : 21 Feb 2017 10:51 AM
மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கிறோமா என்கிற கேள்வியோடு தன் வாழ்க்கையின் தேடலைத் தொடங்கியவர் பால் சிரோமணி. தற்போது 90 வயதை எட்டிய இந்த இளைஞர் கடந்த வாரம் முனைவர் பட்டம் பெற்று ஜொலிக்கிறார். கல்விக்கு வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறார் முனைவர் பால் சிரோமணி.
சென்னையைச் சேர்ந்த இவர் ஒய்.எம்.சி.ஏ.வின் பொது மேலாளராகப் பொறுப்பேற்றுப் பின்னர் புனித மார்க்ஸ் தேவாலயத்தின் தொழிற்சாலைக் குழு சேவைப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டார். செயல்முறை நடத்தை அறிவியலுக்கான இந்தியன் சொசைட்டி ஃபார் அப்லைட் பிஹேவியரல் சயின்ஸ் (Indian Society for Applied Behavioural Science) அறக்கட்டளையை நிறுவிச் சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டார்.
மனிதம் எங்கே?
இந்த காலகட்டத்தில் பலதரப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெவ்வேறு மனிதர்களைத் தொடர்ந்து சந்தித்தார் பால் சிரோமணி. செய்யும் தொழிலோடு மட்டுமே தொடர்புபடுத்தி மனிதர்களை அடையாளப்படுத்தும் போக்கு இருப்பதை அப்போது கூர்ந்து கவனித்தார். இது சாதியத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மேலாளர், கூலித் தொழிலாளர், மாணவர், நோயாளி இப்படி ஒருவர் என்ன நிலைமையில் இருக்கிறாரோ அதுவாகவே அவர் பார்க்கப்படுகிறார்.
மொத்தத்தில் நாம் அனைவரும் ஒன்று என்பதே மறந்து, சமூக அந்தஸ்தின் அடிப்படையில்தான் உறவுகள் நீடிக்கின்றன. இதனால் மனச்சோர்வும், மன அழுத்தமும் பலரைப் பாதிக்கிறது. இத்தகைய வேற்றுமைகளை விடுத்து மனிதர்கள் மனிதத்தைக் கண்டுணர்ந்து ஒத்திசைந்து வாழ வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் செயல்முறை நடத்தை அறிவியலுக்கான இந்தியச் சமூக அமைப்பைத் தொடங்கினார்.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ‘உலகை அன்பு ராஜாங்கமாக மாற்றும்படி தேவாலயத்துக்கு அழைப்புவிடும் கடவுள்’ (God’s call to the church to join in transforming the world into a kingdom of love’) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். முழு நேரம் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு மூன்றே ஆண்டுகளில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து, தற்போது தனது 90 வயதில் முனைவர் பட்டம் வென்றிருக்கிறார்.
தன்னுடைய நிறுவனத்தின் மூலமாக மட்டுமல்லாமல் பெங்களூரு நகரின் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக சமூகப் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.
புனர்வாழ்வுக்குப் புறப்பட்டவர்
முனைவர் பால் சிரோமணி மட்டுமல்ல; அவருடைய மனைவி மருத்துவர் ஜாய்ஸ் சிரோமணியும் அசாத்தியமானவர். கடந்த 50 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக இவர் பணியாற்றிவருகிறார். 1954-ல் மகப்பேறு மருத்துவர் ஆன இவர் இந்தியாவிலும் பிரிட்டனிலும் உள்ள பல மருத்துவமனைகளில் பணியாற்றினார்.
ஆனால் ஒரு கட்டத்தில் இந்தியச் சிறைவாசிகளின் அவல நிலைக் கண்டு மனம் வாடினார். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீளாத் துயரத்தில் ஆழ்ந்துபோவதால் அவர்களுடைய மறுவாழ்வுக்காக இயங்கத் தொடங்கினார். கொல்கத்தாவில் பரிபூர்ணதா என்னும் மையத்தை நிறுவி வாழ்க்கை மறுக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்காக 1970-களிலிருந்து இன்றுவரை தனது 87 வயதிலும் புத்துணர்வோடு செயல்பட்டுவருகிறார். ரியல் ஹீரோ விருதை சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சி 2010-ல் இவருக்கு வழங்கிக் கவுரவித்தது.
வெற்றி முகம்
முனைவர் பால் சிரோமணி மட்டுமல்ல; அவருடைய மனைவி மருத்துவர் ஜாய்ஸ் சிரோமணியும் அசாத்தியமானவர். கடந்த 50 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக இவர் பணியாற்றிவருகிறார். 1954-ல் மகப்பேறு மருத்துவர் ஆன இவர் இந்தியாவிலும் பிரிட்டனிலும் உள்ள பல மருத்துவமனைகளில் பணியாற்றினார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்தியச் சிறைவாசிகளின் அவல நிலைக் கண்டு மனம் வாடினார்.
சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீளாத் துயரத்தில் ஆழ்ந்துபோவதால் அவர்களுடைய மறுவாழ்வுக்காக இயங்கத் தொடங்கினார். கொல்கத்தாவில் பரிபூர்ணதா என்னும் மையத்தை நிறுவி வாழ்க்கை மறுக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்காக 1970-களிலிருந்து இன்றுவரை தனது 87 வயதிலும் புத்துணர்வோடு செயல்பட்டுவருகிறார். ரியல் ஹீரோ விருதை சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சி 2010-ல் இவருக்கு வழங்கிக் கவுரவித்தது. சக மனிதர்களை நேசிப்பதே கல்வியின் பயன் என வாழ்ந்துகாட்டும் இத்தகைய மக்கள்தான் உண்மையான மேன்மக்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT