Published : 21 Mar 2017 11:03 AM
Last Updated : 21 Mar 2017 11:03 AM
கல்லூரி ஆசிரியராக நான் பணியில் சேர்ந்த ஆண்டு இளங்கலைத் தமிழிலக்கிய முதலாண்டு வகுப்பில் இருபத்தோரு மாணவர்கள் பயின்றனர். மூவர் பெண்கள். பதினெட்டுப் பேர் ஆண்கள். அவர்களில் ஒருவர் ராமு. என் இருபதாண்டு ஆசிரியப் பணியில் இப்பெயர் கொண்ட என் ஒரே மாணவர் அவர்தான். பெருவழக்காக இருந்த பெயர் அருகிய வழக்காகிவிட்ட காலத்தின் கடைசிக் கொழுந்து அவர்.
பணியோடு படிப்பு!
நல்ல ஆகிருதி பெற்றவர். உயரமும் அகண்ட மார்பும் கம்பீரமும் கொண்ட உருவம். வயதும் கொஞ்சம் கூடுதல். பெரிய முரடர் என்று சொன்னார்கள். அப்போதெல்லாம் கல்லூரியில் ‘பகடிவதை’ (Ragging) மும்மரமாக நடைபெறும். ராமுவையும் யாரோ சில மூத்த மாணவர்கள் பகடிவதைக்கு உட்படுத்த முயன்றிருக்கிறார்கள். சினம் கொண்ட ராமு ஒரு மாணவரை ஓங்கி அறைந்துவிட்டார். அதற்குப் பின் எந்த மூத்த மாணவரும் அவர் பக்கம் வருவதேயில்லை. அது மட்டுமல்ல, ராமுவின் வகுப்பு மாணவர்கள் ‘நான் ராமு வகுப்பு’ என்று சொல்லித் தப்பித்துக்கொள்வார்கள்.
அவ்வாண்டு மாணவர்களுக்குப் பல போட்டிகள் நடத்தினோம். கவிதைப் போட்டி நடந்தபோது, அங்கே வந்த ராமு தாமும் கலந்துகொள்வதாகச் சொன்னார். அனுமதித்தோம். யாரும் எதிர்பார்க்காத வகையில் அருமையாகக் கவிதை எழுதி முதல் பரிசைப் பெற்றார். அக்கவிதை ஆண்டுமலரிலும் வெளியாயிற்று. மேலும் முதல் பருவத் தேர்வு முடிவுகள் வந்தபோது அவர் மட்டும்தான் ஆங்கிலம் உட்பட எல்லாத் தாள்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
அப்புறம்தான் தெரிந்தது, பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும்போதே அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது என்னும் விஷயம். முதலாண்டு முடிக்கும்போது குழந்தை ஒன்றுக்குத் தந்தை ஆகிவிட்டார். இரவு கிழங்கு மில் (சேகோ பேக்டரி) வேலைக்குப் போய்விட்டுக் கல்லூரிக்கு வருவார். பல நாள் பகல் வேலைக்கும் போய்விடுவார். சம்பாதித்துக் கொண்டு கல்லூரிக்கும் வந்து படிப்பது சாதாரண விஷயமல்ல.
முதுகலை நோக்கி நகர்த்துவேன்
விளையாட்டிலும் நல்ல ஈடுபாடு. குறிப்பாகக் கபடி. உடல் வலு கொண்டவர் என்பதால் அவர் பாடிச் சென்றால் எதிரணியினர் அஞ்சுவார்கள். பிடிக்க யாரும் வர மாட்டார்கள். அப்படியே பிடித்தாலும் நான்கைந்து பேரை ஒருசேரத் தூக்கிக்கொண்டு அசட்டையாக நடந்துவந்து நடுக்கோட்டைத் தொட்டுவிடுவார். கைகளை அகட்டியபடி அவர் பாடிச் செல்லும்போது ஒரு பெரிய பறவை தன் இறக்கைகளை விரித்துக்கொண்டு தரையில் இறங்குவதைப் போல எனக்குத் தோன்றும்.
இளங்கலை படிக்கும் மாணவர்கள், அதை முடித்துப் பட்டம் வாங்கினால் போதாது. அப்பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அவர்களை முதுகலைப் படிப்பை நோக்கி நகர்த்துவதை என் கடமையாகக் கொண்டிருந்தேன். “வாழ்க்கை முழுக்கக் கிழங்கு மில்லில் வேலை செய்யப் போறியாப்பா, மேல படிச்சு நல்ல வேலைக்குப் போகப் போறியாப்பா?” என்று அடிக்கடி ஒரு மந்திரம் போல ராமுவின் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகக் கேட்பேன். ‘பாக்கலாங்கய்யா’ என்பார். ஆனால் என்ன செய்ய? அடுத்தடுத்து அவருக்கு மூன்று குழந்தைகள்.
அதற்காகவே அவரைக் கேலி செய்வேன். அதற்கெல்லாம் அசர மாட்டார். ‘நான் என்ன செய்யட்டுங்கய்யா, கடவுள் குடுக்கறாரு’ என்று கைகளை விரித்தபடி மேலே அண்ணாந்து பார்ப்பார். உண்மையாகவே அங்கே கடவுள் தெரிகிறார் என்பது போலவே தோன்றும் அவர் பாவனை. ‘இதெல்லாம் சரியில்ல ராமு’ என்பேன். ஒருவழியாக உணர்ந்து மூன்றோடு நிறுத்திக்கொண்டார். அவர் எப்படி உணர்ந்தாரோ தெரியவில்லை, எனக்கு ஆசுவாசமாக இருந்தது. எல்லாத் தேர்வுகளிலும் அந்தந்தப் பருவத்திலேயே தேர்ச்சி பெற்று எந்த நிலுவையும் இல்லாமல் பட்டம் பெற்றார். மேற்கொண்டு உயர்கல்வியைத் தொடர முடியவில்லை. அஞ்சல் வழியில் படிக்கிறேன் என்றார்.
ராமு
வேலைவாய்ப்பு அமையவில்லை
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் என்னை செல்பேசியில் அழைத்தார். “பொண்ணு பிளஸ் டூ முடிச்சிட்டாங்கய்யா. என்ன சேக்கலாம்?” என்று ஆலோசனை கேட்டார். ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் ராமு தேர்ச்சி பெற்றிருந்த தகவலையும் அறிந்தேன். ஆனால் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்ததால் அவருக்குக் கூடுதல் மதிப்பெண் கிடைக்கவில்லை. ஆகவே வேலைவாய்ப்பு அமையவில்லை. ஆர்வமும் படிப்புத் திறனும் உள்ளவர்தான். உழைத்துச் சம்பாதித்துக்கொண்டே படித்ததால் மதிப்பெண் விழுக்காடு கூடவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகுதான் விபத்து ஒன்றால் பாதிக்கப்பட்டு அவருக்கு கால் ஒன்று செயல்படாமல் போனதையும் படுக்கையில் முடங்கிக் கிடப்பதையும் அறிந்தேன். போய்ப் பார்த்தேன். மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் மனைவியின் கூலி வேலைதான் ஜீவனம். குடும்பம் பெருங்கஷ்டத்தில் இருக்கிறது.
பாடிப் பறந்தவர் படுக்கையில்
ஊனமுற்றோர் சான்றிதழ் வாங்கிவிட்டார். அதைக் காட்டி ‘இந்தக் கோட்டாவுல எதுனா வேல கெடைக்குமாங்கய்யா?’ என்று கேட்டார். என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கபடியில் பாடிப் பறந்த ராமுவின் கம்பீர உருவம் படுக்கையில் முடங்கிக் கிடப்பதையும் அவர் குடும்பம் படும் பாட்டையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. பலருக்கும் உதவிய அவருக்கு இன்று உதவி தேவைப்படுகிறது.
உடல் உழைப்புக்கு நான் எதிரியல்ல. ஆனால் வேறு திறமைகள் பெற்ற ஒருவர், உடல் உழைப்பிலேயே உழன்று கிடக்க நேர்ந்ததைத்தான் என்னால் செரித்துக்கொள்ள முடியவில்லை. கபடிக்கு நல்ல பயிற்சியாளர் கிடைத்திருந்தால், கல்லூரியில் விளையாட்டு ஆசிரியர் இருந்திருந்தால் ராமு விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டுப் பிரிவில் ஏதாவது வேலைக்குச் சேர்ந்திருக்க முடியும். உயர்கல்விக்குச் சென்றிருந்தாலும் ஏதாவது வழி பிறந்திருக்கும். படிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்குத் திறக்காத கதவேது?
பெருமாள்முருகன், எழுத்தாளர்,
தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT