Published : 18 Mar 2014 12:00 AM
Last Updated : 18 Mar 2014 12:00 AM
விஞ்ஞானி ஐசக் நியூட்டன் தோட்டத்தில் அமர்ந்திருந்தபோது அவரது தலையில் ‘பொத்’ என்று ஒரு ஆப்பிள் விழுந்தது. உடனே அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார் என்று ஒரு சம்பவத்தை அடிக்கடி படித்திருப்போம். நல்லவேளை அவர் தென்னை மரத்தடியில் அமர்ந்திருந்தால் புவியீர்ப்பு விசையைப் பற்றி நமக்கு தெரிந்திருக்காதே என்று நான் நினைத்ததுண்டு. உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்பது ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தைப் படித்த பிறகுதான் தெரியவந்தது.
இதுபோல பல கட்டுக்கதைகள் (Popular Myths) விஞ்ஞானத்தில் உண்டு. ‘நாம் நம்முடைய மூளையில் 5 சதவீதம்தான் உபயோகிக்கிறோம், ஐன்ஸ்டைன்கூட 10 சதவீதம்தான் உபயோகித்தார்’ என்ற கருத்தும் அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான். விட்டால் மூளையில் உபயோகப்படுத்தாத பகுதிகளை வாடகைக்கு விடுகிறோம் என்று விளம்பரம்கூடக் கொடுப்பார்கள். உண்மையில் உடலில் பெரும்பாலும் எந்த உறுப்புக்கும் ஒரு செல்கூட உபரியாக இருப்பதில்லை. சும்மா இருக்கும்போதுகூட மூளையைப் பாதிக்கு மேல் பயன்படுத்துகிறோம். ஆனால் மேற்கண்ட இந்தக் கட்டுக்கதைகூட ஒரு நல்ல நோக்கத்துடன்தான் சொல்லப்படுகிறது. மூளையின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம்; இன்னும் அதிகம் சிந்திக்க வேண்டும்; இன்னும் பல தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்; இன்னும் மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே அவ்வாறு சொல்லப்படுகிறது.
இத்தாலியில் வாழ்ந்த மேக்லியாபெச்சி (Magliabechi) என்ற நூலகருக்குப் பல்லாயிரக்கணக்கான நூல்களைப் பற்றிய விபரங்கள் அவரது விரல் நுனியில் இருந்தனவாம். ஆசா க்ரே Asa Gray என்ற அமெரிக்கத் தாவரவியலாளருக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான தாவரங்களின் பெயர் மனப்பாடமாகத் தெரியுமாம். அவ்வளவு தூரம் செல்வானேன்? நமது நடிகர் சிவாஜி கணேசன் பக்கம் பக்கமாகச் செந்தமிழ் வசனங்களை மனப்பாடமாகச் சொல்பவர்தானே? இதெல்லாம் சிலருக்கு இறைவன் தந்த கொடை என்று சொல்லி ஒதுங்கிவிடக் கூடாது. அற்புதமான நினைவாற்றல் கொண்டவர்களில் அபூர்வமாக வெகு சிலரைத் தவிர, பலரும் தமது இடைவிடாத பயிற்சி மூலமே இத்திறமையை அடைந்துள்ளனர்.
அவர்களது வாழ்க்கையில் இருந்து நமக்குப் புலனாவது என்ன? அவர்கள் கடமைக்காக மனப்பாடம் செய்யவில்லை. படிப்பதை மிகுந்த ஆர்வத்துடன் உற்சாகமாகச் செய்கிறார்கள். ‘நமக்குதான் நல்ல நினைவுத்திறன் இருக்கிறதே’ என்று அலட்சியமாக இருந்துவிடாமல் கடும் முயற்சியும் பயிற்சியும் செய்கிறார்கள். எனவே, பாடங்களைப் படிக்கும்போது அதை ஒரு சுவாரஸ்யமான பயிற்சியாகச் செய்யத் தொடங்குங்கள். தொடர்ச்சியாகச் செய்யுங்கள். கணினியில் எவ்வளவோ விளையாடுகிறோம். அதுபோல நினைத்துச் செய்யுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT